செவ்வாய், 19 ஜூலை, 2016

திருவள்ளுவர் சிலையை அகற்றியது சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்கும் முயற்சி: தருண் விசய் ஆவேசம்





திருவள்ளுவர் சிலையை அகற்றியது சமூக நல்லிணக்கத்தைச் சீரழிக்கும் முயற்சி: தருண் விசய் ஆவேசம்

 உத்தர்கண்டு மாநிலத்தின்  மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண்விசய். (இவர் பதவிக்காலம் சூலை 07 ,2016 உடன் முடிவடைந்தது.)  இவர் தமிழுக்காகக் குரல்  கொடுத்து வந்தார். கங்கைக்கரை ஓரம் திருவள்ளுவர்  சிலை  வைப்பதாகக்  கூறி நாடெங்கும் ஊர்வலம் மேற்கொண்டு 12 அடி உயரச் சிலை நிறுவ முயன்றார். ஆனால், அதற்குச் சாதி வெறிபிடித்த சாதுக்களும் சாமியார்களும் எதிர்ப்பு  தெரிவித்ததால், உத்தர்கண்டு முதல்வர் அரிசு இரவாத்து வேண்டுகோளை ஏற்று   அரித்துவாரில் திருவள்ளுவர் சிலை  நிறுவ ஏற்பாடு  செய்து வந்தார். இடைக்காலமாக அங்குள்ள பொதுப்பணித்துறையின் பூங்காவில் இச்சிலை வைக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து திருவள்ளுவர் சிலையை அகற்றிக் கோணிப்பையில் மூட்டை கட்டி வைத்துள்ளனர்.

 இது தொடர்பாகத்  தனியார் தொலைகாட்சிக்கு அளித்த  செவ்வியில்,
உத்தரகாண்டில் திருவள்ளுவர் சிலையை அகற்றியது நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல். சிலையை அகற்றி உத்தரகாண்டு அரசு திருவள்ளுவரை அவமதித்து விட்டது.

  அரசின்  இசைவு பெற்றே சிலை நிறுவப்பட்டது. ஆனால் எவ்விதத் தகவலும் அளிக்காமல் அரசு அதிகாரிகள் அந்தச்சிலையை அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரித்துவார்  மாவட்ட ஆட்சியரை அரசு இடைவிலக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து உத்தரகண்டு மாநில  ஆளுநர்,  தலைமைச் செயலர் ஆகியோருக்கு மடல் எழுதியுள்ளேன். அரித்துவாரில் முழு மரியாதையுடன் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட வேண்டும். என்று தருண்விசய் தெரிவித்துள்ளார்.

பார்புகழும் உலகப்புலவர் திருவள்ளுவரை அவமதிக்கும் இச்செயல் தமிழர் உள்ளங்களிலும் அறிஞர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக