தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு!
மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில்
தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50
ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு
விழாவைக் கொண்டாடுகிறோம்.
வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர்.
ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்
என்னும் உண்மையை அவர் உணர்ந்திருந்த காரணத்தினால் பிற மொழிக் கலப்பின்றி
தூய தமிழ் பேசவும், எழுதவும் வேண்டும் எனக் கருதினார். அதற்காகத்
தனித்தமிழ் இயக்கத்தை அவர் தோற்றுவித்து நூறாண்டுகள் கடந்துவிட்டன.
இந்தியாவில் மூவாயிரம் ஆண்டு காலத்திற்கு
மேலாக வளர்ச்சியுற்ற இலக்கியம் உடைய மொழி தமிழ் ஒன்றே. இந்தியாவிற்கு
வெளியே எல்லா கடல் கடந்த நாடுகளிலும் பரவிய இந்திய மொழி தமிழ்.
திருக்குறள் உலகப் பொது மறை. அது தமிழின்
தனிச்சிறப்பே. புத்தமதக் காவியமாகிய மணிமேகலை, தமிழ் மொழியில் மட்டுமே
உண்டு. சமணக் காவியமாகிய சிந்தாமணியும் அப்படியே.
உலகின் செம்மொழிகளில் சமற்கிருதம் மட்டுமல்ல, பழம் பாரசீகம், பண்டைக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், அரபு, ஐசுலாண்டிக்கு ஆகிய எல்லா மொழிகளுமே வழக்கிறந்து விட்டன.
அது மட்டுமன்று, இவற்றினும் பழைமையான நாகரிகம் வளர்த்த பண்டைய எகிப்திய
மொழி, சிரிய மொழி, பினீசிய மொழி, அசிரீய மொழி, பாபிலோனிய மொழிகள் ஆகியவும்
இவற்றுக்கு மூல நாகரிக மொழிகளான வரலாற்றுக்கு முற்பட்ட சுமேரிய, ஏலமிய
மொழிகளும், மரபும் தடமுமற்று ஒழிந்து போயின.
உலகின் மிகப் பழமை வாய்ந்த மொழிகளுள்
இன்னும் உயிருடன் இருப்பவை தமிழ் மொழியும் சீன மொழியும் மட்டுமே எனப்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் கூறியுள்ளார்.
வடமொழியை இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.
காலத்தினால் மிகவும் முற்பட்ட வைதிக மொழி ஒன்று. பாணினி காலத்தை அடுத்து
அவராலே மிகவும் செப்பனிடப்பட்டதாய்த் தோன்றி விளங்கும் சமற்கிருத மொழி
மற்றொன்று. பாணினியின் கைவைண்ணத்தாலேயே சமற்கிருதம் மெருகிடப்பட்டது என்ற
உண்மையைச் சுட்டிக்காட்டிய மேனாட்டு அறிஞர்கள் பாணினியைச் சமற்கிருதத்தின்
தந்தை என்று கூறியுள்ளார்கள். பிராகிருதம் முந்தியது. அதைச் சீர்படுத்தி
அமைத்ததன் விளைவே சமற்கிருதம்.
வடமொழி தமிழ்நாட்டில் பரவத்
தொடங்கியபோது, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் நெறிகளுக்கு ஏற்ப,
மாற்றங்கள் செய்யவேண்டும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”
என வடசொல்லை அதன் எழுத்துகள் நீக்கித் தமிழ் வரிவடிவத்தில் எழுத வேண்டும்
என்கின்றார். அவ்வாறே பிறமொழிச் சொற்களை மொழி பெயர்த்து எழுத வேண்டும்.
இதனை அதர்ப்பட யாத்தல் என்கிறார். இதற்கு மொழிக்காப்பு உணர்வே காரணம் எனலாம்.
தொல்காப்பியத்தில் தொடங்கிய
மொழிக்காப்புணர்வு, சங்க இலக்கியங்களிலும் ஐம்பெருங்காப்பியங்களிலும்
மொழிப் போற்றுதலாக வளர்ந்தது. சமய இலக்கியங்களில் தமிழ்மொழி
முதன்மைப்படுத்திப் போற்றப்பெற்றது. தமிழ்வழிச் சமயம் பரப்பப்பட்டது. இடைக்காலச் சிற்றிலக்கியங்களில் வடமொழி எதிர்ப்புணர்வு தீவிரமடைந்து தமிழ்மொழி, தமிழ்இன உணர்வுகள் விரிவாக்கப்பட்டன.
பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள் ஆகியோர்
காலத்திலும் வடமொழியின் ஆதிக்கம் மேலோங்கியது. இம்மன்னர்கள் தங்கள்
பெயர்களை வடமொழிப் பெயர்களாக மாற்றிக் கொண்டனர். இறைவனின் பெயர்களும்,
ஊர்ப் பெயர்களும் மலை, ஆறு, ஆகியவற்றின் பெயர்களும் வடமொழிக்கு
மாற்றப்பட்டன.
13-ஆம் நூற்றாண்டிலிருந்து 18-ஆம்
நூற்றாண்டு வரை தமிழகத்தில் பல்வேறு மொழியாளர்களின் ஆட்சிகளும்,
குடியேற்றங்களும் நடைபெற்றதால் தமிழில் பிற மொழிக் கலப்புகள் எளிதாக
நிகழ்ந்தன. ஆனால், வடமொழிக் கலப்பு வெறும் மொழிக் கலப்பாக மட்டுமல்லாமல்,
கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தியமையாலும்,
வடமொழி தேவமொழி, தமிழ்மொழி தாழ்ந்த மொழி என்னும் தவறான கருத்துப்
பரப்பப்பட்டமையாலும், தமிழகத்தில் பிறமொழி எதிர்ப்பைவிட வடமொழி எதிர்ப்பே
முதன்மை பெற்றது. இதன் விளைவாக ஏற்பட்ட தமிழ்க் காப்புணர்வுதான் தனித் தமிழ் கொள்கைத் தோன்றக் காரணமாயிற்று.
மறைமலையடிகளின் காலத்திற்கு முன்
தமிழ்நாட்டில் சமற்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பல
மொழிகளைச் சேர்ந்த சொற்கள் தமிழில் கலந்து தமிழின் தனித்தன்மையைச்
சீர்குலைத்தன. வடசொல்லையும் தமிழ்ச்சொல்லையும் கலந்து எழுதும் மணிப்பவழ நடை, கற்றறிந்த சிலரால் விரும்பிப் பின்பற்றப்பட்டது.
இந்த நிலைமை நீடித்திருக்குமானால்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைப் போலத் தமிழும் தனது பண்டைய
உருமாறிச் சமற்கிருத மயமான மொழியாக இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்
என்பதில் ஐயமில்லை.
இச்சீர்கேட்டிலிருந்து தமிழைக் காப்பாற்ற மறைமலையடிகள் முனைந்தார். தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார். பிறமொழிகளின் சொற்களைக் கலந்து தமிழில் எழுதுவதும் பேசுவதும் தமிழரின் தன்மானத்திற்கே இழுக்கு என்பதைச் சுட்டிக்காட்டினார். அவருடைய இடைவிடாத முயற்சியினால் தனித்தமிழ் இயக்கம் அருகுபோல் வேரூன்றி ஆலமரம் போல் தழைத்தது.
வடமொழியின் துணையின்றி தமிழ் தனித்தியங்க வல்லது என்பதை ஆராய்ந்து கூறினார் மேனாட்டறிஞர் கால்டுவெல். பல நூல்களைத் தூய தமிழில் எழுதி கால்டுவெல் போன்ற அறிஞர்கள் கூறியதை நிறுவிக்காட்டினார் மறைமலையடிகள்.
தமிழ், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு
குறித்த அவர் சொற்பொழிவுகளும் நூல்களும் நாடெங்கும் தமிழுணர்வு பெருக
வழிவகுத்தன. தமிழருக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்
மறைமலையடிகள்.
தமிழகத்தில் தனித்தமிழ்க் கிளர்ச்சி,
தமிழ் ஆட்சிமொழி, கோயில் வழிபாடுகளில் தமிழ் வேண்டுமென்ற கிளர்ச்சி,
தமிழர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் தமிழ்மறை ஓதுவித்தல், திருக்குறளைத்
தமிழ்மறையாக ஏற்றுக்கொள்ளல், தமிழ் மன்னர்களைப் போற்றுதல், சங்க இலக்கியப்
பயிற்சி, தமிழ்ப் பண்பாடுகளை வளர்த்தல், தமிழ் இலக்கியங்களை ஆராய்தல், தூய
தமிழ் நடையில் எழுதுதல், தமிழ் வளர்க்கும் சங்கங்களை அமைத்துப் பணியாற்றல்
போன்ற கிளர்ச்சிகள் இன்றைய தமிழகத்தில் தலையெடுத்து ஓங்கி நிற்பதற்கும்
அவற்றில் பல வெற்றி பெறுவதற்கும் அடித்தளம் அமைத்த பெருமை மறைமலையடிகளின்
தனித்தமிழ் இயக்கத்தையே சாரும்.
ஆவணி 14, 1949 / 29.8.1918ஆம் ஆண்டு
குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்மொழி ஓர் உயர்தனிச்
செம்மொழியாகும் என முடிவுசெய்யப்பட்டது. அம்முடிவில் மறைமலையடிகள் தனது
கைச்சாத்தை இட்டார்.
வைகாசி 06, 1952 / 19.5.1921இல் சென்னை
பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழறிஞர்கள் கலந்து கொண்ட
கூட்டத்திற்குத் தலைமையேற்று, கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள்
முற்பட்டவர் திருவள்ளுவர். எனவே தமிழ் ஆண்டைக் கிறித்தவ ஆண்டிற்கு 31
ஆண்டுகள் முந்தியதாகக் கணக்கிட வேண்டும் என வரையறை செய்து தமிழர்களுக்கு தமிழாண்டை உருவாக்கிக் கொடுத்தவர் மறைமலையடிகளே ஆவார். அதைப்போலவே, திருவள்ளுவர் திருநாளைத் தமிழர்கள் கொண்டாடுவதற்கும் திட்டம் வகுத்துத் தந்தவர் அடிகளாரே ஆவார்.
புரட்டாசி 19, 1968 / 4.10.37இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
1938-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி
எதிர்ப்புப் போராட்டத்தில் அவருடைய மூத்த மகன், மருமகள் இருவர், பேரக்
குழந்தைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றனர்.
மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை இந்தி
எதிர்ப்பு மாதர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். தனது குடும்பம்
முழுவதையுமே அடிகள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார்.
20-ஆம் நூற்றாண்டில் முதல் 50 ஆண்டுகளில்
தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடுகள், விழாக்கள் முதலியன யாவும்
மறைமலையடிகளைத் தலைமையாகக் கொண்டே நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தமிழியக்கத்திற்குச் சிறந்த தலைவராக அவர் திகழ்ந்தார்.
தனியொரு மனிதராக இருந்தாலும் தானே ஓர்
இயக்கமாக மாறித் தமிழுக்கும் தமிழருக்கும் அவர் ஆற்றிய அருந்தொண்டிற்கு
இணையான தொண்டினை அவருக்குப்பின் இதுவரை யாரும் செய்ததில்லை.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த
தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மடங்களின் தலைவர்கள் மற்றும் பிற
துறவிகள் உட்பட அனைவரும் அவரைத் தலைமணியாகக் கொண்டாடினார்கள்.
தமிழ்நாட்டிலும், ஈழத்திலும், இன்னும் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் அவர் புகழ் பரவியிருந்தது.
தமிழுக்காகவே பிறந்து, தமிழுக்காகவே
வாழ்ந்து மறைந்தவர் மறைமலையடிகள் ஒருவரே என முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.
விசுவநாதம் கூறியது பொருள் பொதிந்த உண்மையாகும்.
ஆனால், அவர் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெறும் காலக்கட்டத்தில் தமிழின் நிலை என்ன? ஆட்சிமொழியாக, பயிற்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக தமிழ் முழுமை பெறவில்லை.
வடமொழியின் பிடியிலிருந்து தமிழை மறைமலையடிகள் மீட்டுத் தந்தார். ஆனால், நாமோ ஆங்கிலத்
திமிங்கலத்தின் வாயில் தமிழைத் திணித்துக்கொண்டிருக்கிறோம். இதிலிருந்து
தமிழை மீட்க இன்னும் நூறு மறைமலையடிகள் நமக்குத் தேவை.
பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக