தலைப்பு-ஆள்கடத்தல்,வவுனியா குடிமக்கள் குழு : thalaippu_aalkadathal_vavunia

ஆட்சியாளர்கள் – அரசு நலன் சார்ந்த
ஆள் கடத்தல்களேஇலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன
– வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு,
த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (FFSHKFDR – Tamil Homeland)
 கூட்டாக வலியுறுத்தல்!
  இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், கைது, தடுத்து வைத்தல்’ போன்றவை அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும், மிகப் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் ஆட்சியாளர்கள் – அரசு ஆகியவற்றின் நலன் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படியே இவை நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருக்கும் வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் – த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) ஆகியன ‘காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்’ (Office for Missing Persons – OMP) என்ற சொல் பதத்தை நீக்கி, ‘கையளிக்கப்பட்டுக், கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களுக்கான அலுவலகம்’ (Office for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – OFSHKFDR) என்ற சொற் பதம் பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்றும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
 நல்லிணக்கப் பொறிமுறைகள்பற்றிய கலந்துரையாடல் செயலணி, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவுக்கும், கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கத்துக்கும் கருத்துகளைக் கோரி ஆனி 21, 2047 / 2016 சூலை 05 அன்று அழைப்பு விடுத்திருந்தது.
 கொழும்பு 07, விடுதலைச் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை அறக்கட்டளையில் (Srilanka Foundation) இடம்பெற்ற அமர்வில், வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் சார்பாக ஊடகப் பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கத்தின் சார்பாகப் பொருளாளர் திருமதி கா.செயவனிதா ஆகியோர் கலந்துகொண்டு தமது பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் அளித்தனர்.

  உண்மை, நீதி ஆகியவற்றைக் கண்டடைந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள், செயல்முறைகள், நடவடிக்கைகள் பற்றி குடிமைக் குமுக (சிவில் சமுக) மனித உரிமை அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளைக் கலந்துரையாடல் செயலணி கோருகிறது.
  1. சிறப்பு வழக்குத் தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை.
  2. உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள்நிகழாமை ஆகியவை தொடர்பான ஆணைக்குழு.
  3. காணாமல் போனோர் தொடர்பானவற்றைக் கையாள்வதற்கான அலுவலகம்.
  4. இழப்பீடுகளுக்கான அலுவலகம்.
  5. இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குத் தேவைப்படும் வேறு மாற்றுப் பொறிமுறைகள், செயல்முறைகள், நடவடிக்கைகள்.
  இந்தக் கட்டமைப்புகளில் காணாமல் போனோர் தொடர்பானவற்றைக் கையாள்வதற்கான அலுவலகம் (Office for Missing Persons – OMP) சார்பான கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் – பழுதுகளைச் சுட்டுவதோடு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்துடைய (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) ஒத்திசைவோடு, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் (Vavuniya Citizen’s Committee) சார்பாக எமது பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் அளிக்கின்றோம்.
அறிமுகம்:
  1. காணாமல் ஆக்கப்படுதல் என்றால் என்ன?
  குறிப்பிட்ட ஒருவரை விரும்பாத அரசியல் தலைமை அல்லது படைத் தலைமை அல்லது அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்கள் அவரை அவர்தம் குடும்பத்திலிருந்தோ வீட்டிலிருந்தோ தூக்கிச் சென்று விட்டாலோ, கைது செய்து காணாமல் போகச் செய்தாலோ, அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது கூடத் தெரியாமல் போய்விடும். இதையே ‘காணாமல் ஆக்கப்படுதல்’ என்கிற சொற்பதத்தில் அழைக்கிறார்கள்.
  1. காணாமல் போதல் என்றால் என்ன?
  குடும்பத்தில் எழும் பிணக்குகளை அடுத்து மன உளைச்சலுடன் (தன்விருப்பத்தின்படியோ, துரத்தப்பட்டோ) வீட்டை விட்டுக் கிளம்பிச் செல்லும் ஆட்கள் சிலர், மறுபடியும் வீடு திரும்பும் விருப்பம் இல்லாமலும், தமது குடும்பத்தினருடன் தொடர்பினைப் பேணும் மன விருப்பம் இல்லாமலும் (வைராக்கியம் வளர்த்துக் கொண்டு) தமக்குப் பாதுகாப்பு என்று உணரும் ஏதாவது இடம் ஒன்றில் நிலையாகவே தங்கி விடுகின்றனர். இவர்கள் தமது நடமாட்டம் தொடர்பில் குடும்பத்தினருக்குச் சிறு தகவலேனும் சென்றடைந்து விடக்கூடாது என்பதில் கூடியஅளவில் கவனம் எடுத்து நடை, உடை, பாவனை அனைத்திலும் தம்மை உருமறைப்புச் செய்து கொண்டோ, தம்மை அடையாளப்படுத்தாமல் (தமது உண்மை முகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்) நன்கு திட்டமிட்டு ஒளிவுமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பர்.
  மேலும், கோவில் திருவிழாக்கள் – கலைநிகழ்ச்சிகள் முதலான மக்கள் மிகுதியாக ஒன்றுகூடும் இடங்களிலும் கூட்டநெரிசலில் அகப்பட்டுச் சிறுவர்கள் – குழந்தைகள் – முதியவர்கள் தற்செயலாக வழிதவறி விடுகின்றனர். இதேபோலத், தமக்கு முன்னர் அறிமுகம் இல்லாத இடங்களுக்குப் பயணம் செய்பவர்களும் கூட அந்த இடம் தொடர்பான நிலபுல அறிவும், போக்குவரத்து அறிமுகமும் இல்லாமல் வழிதவறி விடுவதுண்டு. மண் சரிவு, வெள்ளம், கடல் சீற்றம் முதலான இயற்கைச் சீற்றங்களிலும் பலர் சிக்குண்டு அவற்றினால் அள்ளப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதுண்டு. இவ்வாறான சூழ்நிலைகளில் மட்டுமே, உலக வழக்கத்திலும் – பழக்கத்திலும் ‘காணாமல் போதல்’ என்கிற சொற்பதம் பயன்படுத்தப்படுகின்றது.
  1. தடுத்து வைக்கப்படும் காலங்களில் காணாமல் ஆக்கப்படுதலின் அரசியல்’!
  எதிர்ப்பாளர்களை உடலளவில் அழித்தொழிப்பது மட்டுமின்றி, குமுகத்தையும் (சமுகத்தையும்) அச்சுறுத்துவதே இந்த அரசியலின் நோக்கம் ஆகும். சுரண்டப்பட்ட தொழிலாளர்களும் – பிற உழைக்கும் மக்களும் ஒன்று சேர்வதும், ஒடுக்கப்பட்ட தேசிய இனமக்கள் தமது உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடுவதும், வேறு வகையான குமுகக் (சமுக) கட்டமைப்புக்காகச் செயல்படுவதும், இந்த அரசியலின் மூலமாகத் தடுக்கப்படுகின்றது. இவற்றுக்குத் தலைமை தாங்கும் இயக்க-தொழிற்சங்கத் தலைவர்களும் இவற்றில் தீவிர ஈடுபாடுடைய செயல்பாட்டாளர்களும் – தொழிலாளர்களும் கடத்தப்பட்டோ, கைது செய்யப்பட்டோ, தடுத்து வைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர்.
  1. காணாமல் ஆக்கப்படுதல்ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  (இலங்கை உட்பட) சில நாடுகளில் மக்களாட்சி முறைமையை அல்லது விடுதலையைக் கோருபவர்களை அடக்கவோ, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ வன்கொடுமையை(terrorism) அடக்கவோ, இவற்றுடன் தொடர்புடையவர்களைக் ‘கடத்திக் காணாமல் ஆக்குவதை’ ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், “இப்படியான அனைத்து நிகழ்வுகளிலும் ‘கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுதல்’ என்பது தடை செய்யப்பட வேண்டும்” என்று ஐ.நா., வலியுறுத்துகிறது.
  தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அவர்தம் குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா., கூறுகிறது. எனினும், இப்படிக் காணாமல் போகச் செய்யப்படுவோரைக் கமுக்க(இரகசிய)ச் சித்திரவதை முகாம்களில் அடைத்தோ கமுக்கமாக(இரகசியமாக)ப் படுகொலை செய்தோ, யாரும் அறியாத இடத்தில் புதைத்து விடும் கொடிய நிலைமைகள் இன்னும் தொடர்கின்றன.
  கடத்தப்பட்டவர்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என்றே பொதுவாகப் பலருக்கும் தெரிந்திருக்கும். கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களது உயிரை எண்ணிக் கவலைப்படுவதுடன், அவர்கள் திரும்பி வருவார்கள் என்றும் நம்புகின்றனர். அச்சமுற்றுள்ள உறவினர்கள் நம்பிக்கையுடனும், ஐயத்துடனும் காலம் கழிக்கின்றனர். இவ்வாறு உலகெங்கும் பல நூறாயிரம்(இலட்சம்) பேர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்கள். எத்தனை பேர் என்று குறிப்பிட்டு – உறுதியாகச் சொல்ல எந்த அமைப்பும் முயற்சி எடுக்கவில்லை.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்