புதன், 20 ஜூலை, 2016

அரித்துவாரில் மீண்டும் திருவள்ளுவர் சிலை
அரித்துவாரில் மீண்டும் திருவள்ளுவர் சிலை

 அரித்துவாரில் கடந்த சூன் 30 இல் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்குச் சாதி வெறிச் சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அச்சிலையை அகற்றி, அதனை நெகிழிப்பையில் போட்டுக் கயிற்றால்கட்டித் தரையில்  வைத்தனர். இதற்குத் தமிழக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் இணையப்பதிவுகள் மூலம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

 இந்நிலையில், மேனாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசய், உத்தரகண்டு முதல்வருக்கு எழுதி்ய மடலின் தொடர்ச்சியாக அங்கே திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

  தருண்விசயின் சுட்டுரையில்(டுவிட்டர்) உள்ள திருவள்ளுவர் படமும் செய்தியும் இதனைத் தெரிவிக்கின்றன.

இதுபோல், உத்திரகண்டு தமிழ்ச் சங்கச் செயலர் முனைவர் பாசுகர்,. முனைவர் இராம.சுந்தரம் இ.ஆ.ப. உடன் உத்தரகண்டு முதல்வரைச் சந்தித்ததாகவும்


" தமிழகத்துக் கவி திருவள்ளுவரை நாங்களும் மதிக்கிறோம்.

முன்னதாகத் திட்டமிட்டது போலவே கங்கைக் கரையில்,உத்திரகண்டு அரசு இடத்தில் சிலையை நிறுவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யும்படி ஆணையிட்டுள்ளேன்.

இடம் தேர்வு செய்யப்பட்டு வெகுவிரைவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கலாம். இதை உத்திரகண்ட்டின் அரசு விழாவாகக் கொண்டாடலாம் 
  மேலும் படுத்த நிலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை எடுத்து நிறுத்தி வைக்கவும் உத்தரவு இட்டுள்ளேன்
 என்று முதல்வர் தெரிவித்ததாகவும்  கூறியுள்ளார். (தகவல் வழ.கரூர் இராசேந்திரன்);

  திருவள்ளுவரைப்பற்றியும் திருக்குறள்பற்றியும் அனைத்து மொழிகளிலும் பாடங்கள் இருப்பின், திருவள்ளுவரின் அருமை பெருமை பிறருக்குத் தெரியும்.