தலைப்பு-தேர்தல்சீர்திருத்தம்,இறையரசன் :thalaippu_therthal_iraiyarsan

தேர்தல்  சீர்திருத்தம்

தேர்தல் நெருங்கிவிட்டது; சாலைகள் போடுகிறார்கள்; ஊர் ஊராக தெருத்  தெருவாக மக்களைச் சந்திக்கிறார்கள்; குடிசைக்குள் நுழைந்து கிழவிகளோடு படம்  எடுத்துக் கொள்கிறார்கள். தேநீர்க்கடைக்காரர் “இனி வருசம் ஒரு தேர்தல் வந்தாலும் நல்லதுதான்; தேர்தல் வரும் என்றதும் உடனே சாலை போடுகிறார்களே!” என்றார். பால் ஊற்ற வந்த உள்ளூர் ஆசிரியர் சொன்னார்: “இந்தத் தெருச் சாலை முன்று முறை போட்டதாச் சொல்லிப் பங்குபோட்டுக்கொண்டார்கள். அதிலே ஆளுக்குக் கொஞ்சம்பணம் போட்டு இப்ப இந்தச் சாலை!”
“எவ்வளவு பெரிய பணக்காரர்களும் சேற்றிலே காலை வைத்துக் குடிசையிலே குனிந்து நுழைந்து கிழிஞ்த பாயிலே உட்காருகிறார்கள். கிழவியுடன் படம் எடுத்துக் கொள்கிறார்கள். தமிழ் வாழ்க! ஏழைகளை வாழவைப்போம்! என்று மேடையிலே முழங்குகிறார்கள்” என்றான் குப்பன். சுப்பன் சொன்னான்: “இன்றைக்குக் கட்சியிலே சேர்ந்த இந்தி நடிகையை அமைச்சராக்குகிறவர்கள், பல  ஆண்டா கட்சிக்காக உயிரைக்கொடுக்கும் தொண்டனையோ  அவனோட பாட்டிக்கிழவியையோ நாளைக்கு அவர்கள் வீட்டுப் பக்கம் போனால் காவல்காக்கும் இந்திக்காரனை விட்டு விரட்டுவார்கள்”.  என்றான். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்பதைவிட இத்தகையவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்முறைதானே குற்றவாளி!  கொலை கொள்ளை ஊழல் முதலிய குற்றங்களின் மூலம் வந்த  பணம் தேர்தல் முடிவுகளை  வரையறுக்கலாமா?
மிக அதிகமாகத்  தேர்தலுக்குச் செலவு செய்வதைத் தடுக்க வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வோம், வெற்றி பெற்றபின் போட்ட முதல் பலமடங்காகத் திரும்ப எடுத்திடலாம் என்று தேர்தலை வணிகமாக வேட்பாளர்கள் நினைக்கத் தொடங்கியதால்தான் “தேர்தல்  பாதை திருடர்பாதை” என்று சிலர் கூறுகிறார்கள்.   “கொள்ளை அடித்த பணத்தைக் கொடுக்கிறான்களடா; வாங்கிக்கொண்டு நமக்கு விருப்பமானவர்களுக்குப் போடுவோம்” –என்ற மனப் பான்மை மக்களிடம் வளர்வதும் நல்லதில்லை.
பணக்காரர்கள் அல்லது தவறான வழியில் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும், நின்று செலவு செய்யமுடியும் என்பதால், ஏழைகள் நல்லவர்கள் படித்தவர்கள் பாட்டாளிகள் நடுத்தட்டு மக்கள் அரசியலுக்கு வரவோ தேர்தலில் நிற்கவோ முடியாமல் போய்விடுகிறது.
  பெரும்பாலும் ஒழுக்கக் கேடர்களும், பண்பாடற்றவர்களும் கள்ளச் சாராய வணிகர்களும் போதை(மார்ஃபியா)க் கும்பலும்,  கொலை கொள்ளை கடத்தல் குற்றவாளிகளும் தேர்தலில் நிற்கின்றனர். “அரசியல் வாதிகள் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்பர்; இப்போது அயோக்கியர்களின் முதல்புகலிடமாகவே ஆகிவிட்டது. இதனால் நல்லவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.
  சங்க இலக்கியங்களில் குட ஓலை முறைத் தேர்தல் பற்றிய குறிப்புகள் உள்ளன. திறமையானவர்களை ஆட்சித்துறையில் அமர்த்தி அதிக வரிவிதிக்காமல், மக்களுக்குத் துன்பம் ஏற்படுத்தாமல்  ஆள வேண்டும்; மக்களே மன்னனுக்கு முதன்மையானவர்கள், மக்களால் எளிதாக அணுகக் கூடியவனாக மன்னன் இருக்க வேண்டும்;  அறத்தோடு ஆள்பவனைக் கடவுளாக மக்கள் மதிப்பார்கள் என்ற சான்றோர்  கருத்துகளை  மன்னர்கள் மதித்தார்கள்.
உருத்திரமேரூர் கோயிலில் உள்ள சோழர்காலக் கல்வெட்டு, தேர்தலில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளைக் கூறியுள்ளது. படித்தவர்களும்நல்லவர்களும் மட்டுமே தேர்தலில் போட்டியிடவேண்டும். பொதுப்பணத்தைக் கையாடல் செய்தவர்கள் – ஊழல் செய்தவர்கள் – தேர்தலில் நிற்கமுடியாது; அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தலைமுறைக்கும் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர்கள் என்று அக்கல்வெட்டுகூறுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பின்பற்றப்பட்ட இந்தச் சிறந்த நடைமுறையை 21ஆம் நூற்றாண்டில் பின்பற்ற வேண்டாமா? ஊழல்செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என விதி செய்யலாம்; ஆனால், ஊழல் செய்தவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்த முடிவதில்லையே!
  கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் சில கோடிகளைச் செலவு செய்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஊழல்  வழக்குகள் பல ஆண்டுகள் வழக்குமன்றங்களில் நடப்பதால் அதனை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
ஊழல் செய்தவர்களே ஆட்சியில் இருப்பதால் ஊழல் குற்றச்சாட்டுகள்  மெய்ப்பிக்கப்படுவதில்லை. ஊழல்செய்தது  வெளியில் தெரிந்துவிட்டால் உடனே தூக்கில் தொங்கி உயிர்விடுவார்களாம் சப்பானியர்கள். இங்கே சிரித்துக் கொண்டு படத்துக்குக் காட்சி(pose) கொடுத்துச் சிறை சென்று வருகிறார்கள்.
ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினர் மேல் பொய்வழக்கிடுவதாலும் உண்மையான குற்றங்களை இரு கட்சியினரும் குழாயடிச் சண்டை போல்மாற்றி மாற்றிக் கூறித் தூற்றிக் கொண்டே இருப்பதாலும் உண்மை எது பொய் எது என்று தெரியாமல்  நீதிபதிகளும் குழப்புகிறார்கள்; மக்களும் குழம்புகிறார்கள். கடைசியாக ‘இந்தத் திருடனுக்கு  அந்தத்திருடன் மேல்’ என்று மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்தல் முறை சரியில்லாததால் ‘இராமன்ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன?’ என்ற மனப்பான்மையும் மக்களிடம் பரவுகிறது. எனவே ஊழல் வழக்குகளை உடனடியாக நடத்தி முடிக்கவேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் நிற்கவே கூடாது. இதனால் நல்லவர்கள் மேல் பொய்வழக்குகள் இடப்படலாம் என்றாலும், அத்தகைய பொய் வழக்கு இட முடியாதபடிச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். பொதுப்பணத்தைக் கையாடல், ஊழல், கையூட்டு, கொலை,கொள்ளை, கற்பழிப்பு முதலிய குற்றம் புரிந்தவர்கள் அவை புரிந்து சிறை சென்றவர்கள் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது.இத்தகைய கடும் சட்டங்கள் நாமும் பின்பற்றினால்தான் உண்மையான தேர்தலாக இருக்கும்.
பதின்நிலைப்பள்ளி/கன்னிமாடப்பள்ளிகள்/ஆங்கிலவழிப்பள்ளிகள், பொறியியல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றுக்கு அரசு அமைக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள்  வரையறுக்கும் குறைந்த அளவிலான கல்விக் கட்டணமே உச்சத்தைத் தாண்டியதாக இருக்கும்; அதற்கு மேலும் பல  மடங்குத் தொகையைக் கொள்ளையடிப்பார்கள். அதைப்போல வேட்பாளர்களும் அரசு  வரையறுத்த தொகையைவிடப் பல மடங்கு அதிகம் செலவிடுகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 28 இலட்சமும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 70 இலட்சமும்   ஒவ் வொரு வேட்பாளரும் செலவு செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது.
சென்ற தேர்தலில் மக்களுக்கு / வேட்பாளர்களின் கட்சிக்காரர்களுக்குக்  கொடுப்பதற்காக வண்டிகளில் எடுத்துச் சென்ற பல இலட்சங்கள் கைப்பற்றப் பட்டன. உடனடியாக  அவ்வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு செய்திருந்தால் இக்குற்றம் குறைந்திருக்கும். ஆனால் அதைவிட அதிகமாகத்  தேர்தல் நடத்துவதற்கு அரசு செலவு செய்திருந்ததால் இக்குற்றத்தைக்  கண்டுகொள்ளவில்லை. வேட்பாளர்கள் பல மடங்கும் கறுப்புப்பணத்தைச் செலவு செய்கிறார்கள்; வேட்பாளர்களின் கட்சிக்காரர்களும் மிக அதிகம் வாரி இறைக்கிறார்கள். காவல் துறையும் வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையமும் கடும் நடவடிக்கை எடுத்தால் இக்குற்றம் எளிதில் தடுக்கப்படும்.
இந்திய விடுதலைக்குப் பின் 1952 இல் தேர்தல் நடத்த 10 கோடி செலவாகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தேர்தல் நடத்த  2011 இல்   சட்டஅவைக்கு 126.52 கோடியும்,  2014 இல்  மக்களவைக்கு 3426 கோடியும் ஏட்டளவிலான செலவாகும். தனியாக வேட்பாளரும் கட்சிக்காரர்களும் தொழில்முதலாளிகளும் கணக்குப் பணமாகவும் கருப்புப் பணமாகவும் செலவு செய்தது பல ஆயிரம் கோடி ஆகும். இதற்கு எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றி இருக்கலாம்.முன்பு 2011-இல்  நடைபெற்ற  பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 223 பேர் தேர்தலில் தாம் செலவிட்ட தொகைக்கான செலவுக்கணக்கு விவரம் தரவில்லை; இவர்களில் பலர் கட்சிசாரா (சுயேச்சை) வேட்பாளர்கள் எனத் தேர்தல்  ஆணையம் சொல்லியிருந்தது. தேர்தல்ஆணையம் சொல்லிய உச்சவரம்பை விடப் பல மடங்குப் பணத்தை வாரி இறைத்த கட்சிக்காரர்கள் பொய்க்கணக்கு எழுதியும் பழக்கப்பட்டவர்கள் என்பதால்அவர்கள் கணக்குக் கொடுத்துவிடுகிறார்கள் போலும். இதற்கு மேலும் 10 கட்சிகளுக்கு வருமான வரிச்சலுகை கொடுக்கப் பட்டுள்ளது. உழவர்களுக்கும், குடிசைத் தொழில்களுக்கும் உள்நாட்டுத் தொழில்   முனைவோருக்கும் மட்டும் வரிச்சலுகை கொடுத்தால் போதும்.
  எனவே உடனடியாக நம் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலேயே தேர்தல் நடைமுறையைச் சரிசெய்ய வேண்டியது முதற்கடமைஆகும்.  அவ்வாறு செய்ய வேண்டியன:
1.        ஓரளவிற்குப் படிப்பறிவு உள்ளவரும் நல்ல நடத்தை உள்ளவரும் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம்.
2.        பொதுப்பணத்தைக் கையாடல், ஊழல், கையூட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு முதலிய குற்றம் புரிந்தவர்கள் அவை புரிந்து சிறை சென்றவர்கள், அவர்களுடைய கணவன் / மனைவி, மகன் மகள் முதலிய நெருங்கிய உறவினர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது.
3. ஒரு முறை அமைச்சர் பதவியில் இருந்தவர்களும், 3 முறை சட்ட / நாடாளு மன்ற அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்லது தோற்றவர்களும், தேர்தலின்   போது அல்லது பதவியில் இருக்கும் போது குற்றம் செய்தவர்களும் மறுமுறை தேர்தலில் போட்டியிடக் கூடாது.
4.      ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது.
5.      இடைத் தேர்தல் வந்தால் முன் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தவரின் கட்சியே ஓர் வேட்பாளரைத்   தம் கட்சிக்குள் தேர்ந்தெடுத்து அறிவிக்க வேண்டும்.
இவை எல்லாம் நடைபெறுமா?
தஞ்சை இறையரசன் :thanjai_iraiyarasan
 – தஞ்சை இறையரசன்