மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள். இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோருவோம்.
வவுனியா மக்கள் குழு, முல்லைத்தீவு மாவட்ட  மக்கள் உரிமைக்கான அமையம், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (FSHKFDR – Tamil Homeland)   கூட்டாக அறைகூவல் !

அழை-முள்ளிவாய்க்கால் அவலம்01 : azhai_mullivaaykkal_avalam01
அழை-முள்ளிவாய்க்கால் அவலம்02 : azhai_mullivaaykkal_avalam02
தலைப்பு-முள்ளிவாய்க்கால், பேரவல நினைவேந்தல் : thalaippu_mullivaaykkal_ninaiventhan

கூட்டு ஊடக அறிக்கை:
மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள்!

இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு,

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோருவோம்!

சிறீலங்கா அரசாங்கமானது, ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றரை கிலோமீற்றர்கள் நீரேந்து நிலப்பரப்புக்குள்(களப்புக்குள்) முற்றுகையிட்டு, கொத்துக்குண்டுகளாலும், பல்குழல் எறிகணைகளாலும்,  வேதியல் எரிஅமில வாயுக்களாலும் நிகழ்த்திய மாபெரும் தமிழினப்படுகொலையை – மனிதப்பேரவலத்தை – மனித உரிமை மீறல்களைக்கண்டித்து, பெரும் மக்கள் கூட்டமாக ஒன்றுகூடி ‘நீதி கேட்கும் பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி’க்கு மே 18 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
2009 ஆம்  ஆண்டு இறுதிப்போர் முற்றுகை வலயமாகவும், சிறீலங்கா அரசின் கொலைக்களமாகவும் ஆக்கப்பட்டு, ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடித், தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்குப் பறைசாற்றுவதோடு, வீழ்ந்த இடத்தில் வீரத்தின்  தொடக்கமாக எழுச்சி கொள்ளும் தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலாகவே, இம்முறை ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம்  ஆண்டு நினைவேந்தல்’ நிகழ்ச்சியைப் பறையறிவிக்கிறோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள்  சூன் மாதம் தொடங்கவுள்ள காலச்சூழலில், சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு உட்பட்டும் தப்பியும் பிழைத்திருக்கும் தமிழ்த்தேசிய இனம், கந்தகத்தாலும் குருதியாலும் தோய்த்து எடுக்கப்பட்டு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு நீதி கேட்கும் குறித்த மே 18 தேசிய ஒன்றுகூடலானது  முதன்மை வாய்ந்ததாக அமைகின்றது.
எனவே இந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் படியாகத், தத்தமதுநலன்களுக்காக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை சிறு சிறு குழுக்களாக, உதிரிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கூட்டங்களை நடத்தி,

மே 18 புதன்கிழமை அன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு’ மக்களை பெரும் கூட்டமாகக் கலந்துகொள்ளவிடாது தடுக்கும் – குழப்பங்களை ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனடியாக  நீக்கும்படியும் – தவிர்த்துக்கொள்ளும்படியும் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள  அனைத்து மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல்’ ஆனது, இம்முறை ‘நீதி கேட்கும் பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி’யாகத்,
 ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்’ ஆக, அதுவும் இனப்படுகொலை நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் மட்டுமே இடம்பெறும் என்பதையும்  கனிவோடு கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
‘நான்… நான்… என்று தன்னிலை முன்னிறுத்தல்களை முற்றிலுமாகத் துறந்து, நாங்கள் – அதாவது இனம் என்று ஒன்றுபடுமாறு’ அனைத்துத் தரப்புகளுக்கும் வலிறுத்துகின்றோம்.
மாவீரத்தெய்வங்களினதும் – மேன்மக்கள்  எண்ணஉயிரி(ஆத்மாக்)களினதும் உன்னத  ஈகங்களை இழிவுபடுத்தும் – மலினப்படுத்தும் வகையில், ‘அங்கு அவர்கள் காலை செய்கிறார்கள், இங்கு நாங்கள் மதியம் அல்லது மாலை செய்கிறோம்’ எனும் குறுமனநிலை – குழுநிலை வாதங்களை உடனடியாக களைந்து,
அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் –  முதன்மையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு கிழக்கு மாகாண அவைகளின் உறுப்பினர்கள் (தத்தமது ஆதரவாளர்களுடன்), மதத்தலைவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள்,  குடியாட்சி, குமுக அமைப்புகளின்  சார்பாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பேராளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள்,  குமுகாய(சமுக) ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று அனைத்து மக்களையும் மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கிப் பெரும் மக்கள் கூட்டமாக உணர்வுபூர்வமாக திரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
மே 18 புதன்கிழமை அன்று தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்குப் பறைசாற்றுவதற்காகத் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் முழுமையான முழுநாள் கடையடைப்புக்கு அனைத்து  வணிகர் சங்கங்களையும், தனியார் பேருந்து போக்குவரத்துச் சங்கங்களையும், வன்முறைகள் – படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளைப் பற்றுறுதியுடனும் நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை தமிழ் இனத்தின் (ஒவ்வொரு  குடிமகனது) தேசியக்கடமையாகக்கொண்டு முழுமையான ஒத்துழைப்பை உளத்தூய்மையோடு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுச்சுடர் ஏற்றும் மரபு !

  நான் பெரிது – நீ பெரிது என்று தொடரும் குறுமனநிலைப்போக்கைக் களைந்து இனம் அதாவது நாடு பெரிது என்று வாழும் உணர்வை தமிழ் மன்பதையில் வளப்படுத்துவதற்காக இம்முறை, ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம்  ஆண்டு நினைவேந்தல்’ நிகழ்ச்சியில் பொதுச்சுடரை,
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர், அல்லது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை ஒளிப்பதிவுசெய்து ஐ.நா சபைவரை இனப்படுகொலை ஆதாரமாகக் கொண்டு சென்று சேர்ப்பித்த களப்படப்பிடிப்பாளர் (ஊடகவியலாளர்) ஒருவர், அல்லது மருத்துவப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிய அந்தப் பேரிடரான சூழலில் மானுடநேய மருத்துவப்பணியாற்றி எச்சசொச்ச உயிர்களைக்காப்பாற்றிய மருத்துவர் ஒருவர், அன்றி முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்து சிறுவர் இல்லங்களில்  பேணப்பட்டுவரும் சிறுவர் சிறுமிகளில் ஒருவர் ஏற்றுவதே  ஏற்றதாகவும், அதுவே எமது நிலைப்பாடாகவும் உள்ளது என்பதையும்  அனைத்த மக்களுக்கும் பணிவுடன் அறியத்தருகின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
வவுனியா மாவட்ட  மக்கள் குழுவினர்,
முல்லைத்தீவு மாவட்ட  மக்கள் உரிமைக்கான அமையத்தினர்,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு – கடத்தப்பட்டு –  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland)