இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன்
நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர்
குடிச் சின்னமாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம்
கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில்
உருவாக்கப்பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த அரசர்களுக்குரிய காலம்.
இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில்
பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ண வேண்டியுள்ளது.
குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன்
மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன்
இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி இவனது
வரலாற்றில் மிக முதன்மையான நிகழ்ச்சியாகையால், குமட்டூர்க் கண்ணனார்
பாடலில் இடம்பெறாவிட்டாலும் சேர்க்கப்பட வேண்டும் என்னும் கருத்து
உடையவராய்ப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் தம் பதிகத்தில்
சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் யவனரைப் பிணித்த நிகழ்ச்சியை
இமயத்தில் வில் பொறித்த நிகழ்ச்சிபோல் அல்லாது பாடல் பாடப்பட்ட
காலத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சி என்றாலும் நெடுஞ்சேரலாதன் காலத்து
நிகழ்ந்தது என்று கூறினோம். அதற்கு முதன்மைக் காரணமாவது கடம்பறுத்த முதன்மை
நிகழ்ச்சியானது பதிகத்தில் விடுபட்டபோதிலும் பதிகத்தில் காணப்படும்
யவனரைப் பிணித்ததாகிய தொடர்நிகழ்ச்சியில் வேறுவகையில் பதிகத்தில்
கூறப்பட்டுள்ளது என்று கொண்டதே ஆகும்.
இமயம் நோக்கிச் சென்றபோதும், அங்கிருந்து
தன் நாட்டை நோக்கி மீண்டபோதும் நெடுஞ்சேரலாதன் பல அரசர்களை வென்றான். இந்த
வெற்றிகளில் ஆரியரை அடிபணியும்படி செய்த செயல் பதிகத்தில் சிறப்பித்துக்
கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றிச் செய்திகள் பதிற்றுப்பத்துப் பாடல்களிலும்1 கூறப்பட்டுள்ளன.
இவனது வடநாட்டுப் போரில் பல அரசர்களை
வென்றான்; ஆயினும் அவர்களது நாடுகளைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இதனை
சமுத்திரகுப்தனின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு ஒப்புமையாகக் காட்டலாம்.
இமயம் சென்ற வழியில் சிலர் நெடுஞ்சேரலாதனைவிட அவர்களது அரசர்கள்
மேம்பட்டவர்கள் எனப் புகழ்ந்து கூறினர்.2 அவர்களது பேராற்றல் அழியும்படி வென்றான். இவ்வாறு
புகழ்ந்து கூறியதால் பேராற்றல் அழிக்கப்பட்டவரே ஆரியர். இவனது இமயப்
படையெழுச்சி வடநாட்டு அரசர்களின் வரலாற்றில் எங்கும் காணப்படாமைக்கு இதுவே
காரணமாகும்.
இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று
கூறும் பதிகம் அப்பகுதிகளில் தமிழகத்தின் பெயர் விளங்கும்படி தன் கோலை நிலை
நாட்டினான் என்றும் கூறுகிறது.3 கோலை நிலைநாட்டினான் என்றால்
ஆட்சியை நிலைநாட்டினான் என்பது பொருள். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆட்சியை
நிலைநாட்டுதல் என்பது அரசாளுதலை மட்டும் குறிக்கும் சொல் அன்று; பிறர்
பணிந்து கொடுத்துப் பின்னர் மீண்டாலும் திறை தந்த நாடு, திறைபெற்ற
வேந்தனின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததாகவே கருதப்படும்.4
இந்த வகையில் நெடுஞ்சேரலாதன் இமயமலைப் பகுதியில் ஆட்சியை நிலைநாட்டினான் என்று பதிகம் கூறுவதாவது, இமயம் முதல் குமரி வரை வென்றான் 5 என்று பொருளாகும். எல்லை காண முடியாத அளவுக்கு இவன் நாடு விரிந்தது 6 என்ற பாடற் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மைகளேயாகும்.
[எண் குறிப்புகள்:
- பதிற். 11 : 23
- பதிற். 11 : 23 – 25
- ‘தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ’ (பதிற். பதி. 2 : 5 – 6)
- `அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்’ (பதிற். பதி. 2 : 10 – 12)
- பதிற். 11 : 23 – 24
- பதிற். 17 : 10 – 15 ]
– தமிழ் வரலாற்று அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி:
பண்டைத் தமிழக வரலாறு :சேரர், சோழர், பாண்டியர்
படம்: நன்றி :கீற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக