vikatanmodi
வசுந்தரா,சுசுமா, சிவராசு, இலலித்து & அதானி
வசுந்தரா,சுசுமா, சிவராசு, இலலித்து & அதானி
தாமரையின் ஊழல் இதழ்கள் !  – பாரதி தம்பி
மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது இல்லை. ‘ஓகம்(யோகா) செய்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்’ எனத் தலைமையாளரின் பெயரால் குறுந்தகவல் (எசு.எம்.எசு.) வருகிறது. ஆனால் எதைச் செய்தால் நாட்டின் நலம் நன்றாக இருக்குமோ, அந்த நேர்வுகளில் எதிர்வினையாற்றாமல் அமைதிச்சாமியாராக இருக்கிறார் மோடி. இவரும் இவரது கட்சியினரும்தான் மன்மோகன்(சிங்கைப்) பேசாத பொம்மை என்றார்கள். இன்று அந்தக் கேள்விகள் இவர்களை நோக்கியே திரும்பி நிற்கின்றன.
கேள்வி 1: படிக்க அமெரிக்கா சென்று, அங்கு போதைப்பொருள் வழக்கில் சிக்கியவர் இலலித்து(மோடி). இந்தப் பின்னணி கொண்டவரைத்தான் இராசசுத்தான் மாநில மட்டைப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ஆக்கினார், அப்போதைய இராசசுத்தான் முதலமைச்சர் வசுந்தரா இராசே. விறுவிறுவென முன்னேறிய இலலித்து(மோடி), இந்திய மட்டைப்பந்தாட்க் கட்டுப்பாட்டு வாரியம், இ.த.மு.( ஐ.பி.எல்.) போட்டிகள் எனச் செல்வாக்குமிக்க புள்ளியாக மாறினார். இ.த.மு.(ஐ.பி.எல்.) ஊழல்கள் பெரிதாக வெடித்தபோது இலலித்(மோடியின்) மீது ஏறத்தாழ 1,700 கோடி உரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பின. அவருக்கு எதிராக மொத்தம் 16 பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து இலண்டனுக்குத் தப்பி ஓடி தலைமறைவானார் இலலித்து(மோடி).. இப்போது வரை அவர் தேடப்படும் குற்றவாளிதான். இந்தக் குற்றவாளிக்குத்தான் போட்டிபோட்டு உதவியிருக்கின்றனர் இராசசுத்தான் முதலமைச்சர் வசுந்தராஇராசேவும், மத்திய அமைச்சர் சுசுமா சுவராசும்.
2011-ஆம் ஆண்டு இலலித்து(மோடியின்) இலண்டன் குடியேற்ற ஆவணங்களில், ‘இந்திய அரசுக்குத் தெரியக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில், இந்தக் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரிக்கிறேன்’ எனக் கையெழுத்திட்டிருக்கிறார் வசுந்தரா. இலலித்து(மோடியின்) இலண்டன் குடியேற்றத்துக்காக, இங்கிலாந்து அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறார் சுசுமா சுவராசு.
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒருசில நிறுவனங்கள் இரண்டாம் தலைமுறை (2 ஜி) அலைக்கற்றை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான் ஆ. இராசா மீதான குற்றச்சாட்டு. அதுதான் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல். இதில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புத் தொகை வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். ஆனால், குற்றத்தின் தன்மை என்ற வகையில், ஆ. இராசா செய்ததைவிட, சுசுமாவும் வசுந்தராவும் செய்திருப்பது மிகப் பெரிய குற்றம். இந்தியச் சட்டப்படியே அதைவிட இதற்கு அதிக தண்டனை வழங்க முடியும்.
கேள்வி 2: மத்தியப்பிரதேச மாநில அரசு ஊழியர்கள் தேர்வு வாரியமான ‘வியாபம்’ ஊழல் குறித்து இன்று இந்தியாவே பேசுகிறது. பணம் வாங்கிக்கொண்டு அரசுப் பணியிடங்களை நிரப்பிய வகையில்,கிட்டத்தட்ட 2 இலட்சம் கோடி உரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்படி முறைகேடான வழிகளில் அரசுப் பணிகளில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊழல் வெடித்து வெளியில் வர… ‘வியாபம்’ ஊழல் வழக்கு அம்பலமாகக் காரணமாக இருந்தவர்கள் பலரும் மருமமாக இறக்கிறார்கள்.

கடந்த 13 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் பா.ச.க ஆட்சிதான். எனில், ‘வியாபம்’ ஊழலுக்கான முழுப் பொறுப்பும் பா.ச.க-வையே சேரும். ஆனால், முதலமைச்சர் சிவ்ராசுசிங் சௌகான் வாய் திறக்க மறுக்கிறார். விடுதலைபெற்ற இந்தியாவில் இதுவரை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை அனைத்தில் இருந்தும் வேறுபட்டு, 50-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவுவாங்கும் கொடூர ஊழலாக உருவெடுத் துள்ளது ‘வியாபம்’.
கேள்வி 3: குசராத்தைச் சேர்ந்த அதானி குழுமம், சில மாதங்களுக்கு முன்பு, ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாகாணத்தில், கார் மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை ஏலம் எடுத்திருக்கிறது. (அந்தச் சுரங்கம், தங்களது பூர்வீக வாழ்விடங்களையும் இயற்கையையும் அழிப்பதாக ஆத்திரேலியாவின் பூர்வகுடிகள் (அபராசின்கள்), அங்கு கடும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.) இந்தச் சுரங்கத்தை ஏலத்தில் வாங்குவதற்குப் பாரத அரசு வங்கி அதானி குழுமத்துக்கு 6,200 கோடி உரூபாய் கடன் வழங்கியிருக்கிறது. கடன் வழங்கப்பட்டபோது, அதானி நிறுவனத்தின் மொத்தக் கடன் 81,122 கோடி உரூபாய். ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருக்கும் ஓர் ஊதாரிக்கு நீங்கள் கடன் தருவீர்களா? ஆனால், மோடி அரசு தருகிறது. காரணம் அதானி, மோடியின் நண்பர். 2002- ஆம் ஆண்டு மோடி குசராத்து முதலமைச்சர் ஆனபோது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 3,741 கோடி உரூபாய். 2014- ஆம் ஆண்டில் சொத்து மதிப்பு 75,659 கோடி  உரூபாய்.
”பா.ச.க., தனது தேர்தல் பரப்புரையில் மோடியை ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாசு புரூசு) என்றது. அதை நம்பித்தான் 32 விழுக்காடு இந்தியர்கள் பா.ச.க-வுக்கு வாக்களித்தனர். ஆனால் ‘வளர்ச்சியின் நாயகனாக’ இருப்பது அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மட்டும்தான். ம.த.கு.(சி.ஏ.சி.) எனப்படும் மத்தியத் தணிக்கைக் குழு அறிக்கையிலேயே, ‘ரிலையன்சு, எசுஆர், அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு, குசராத்தின் மோடி அரசு தேவைக்கு அதிகமாக சலுகைகள் வழங்கியிருக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு குசராத்தில் முந்த்ரா துறைமுகம் கட்டுவதற்காக அதானி குழுமத்துக்கு ஒரு சதுரப்பேரடி(சதுரமீட்டர்) 1 உரூபாய் முதல் 32 உரூபாய் வரை, என்ற மிகக் குறைந்த விலையில் மொத்தம் 14,305 காணி நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தச் சலுகைகள், மோடி தலைமையாளரான பிறகும் தொடர்கிறது” என்கிறார் ஃப்ரண்ட்லைன் இதழாசிரியர் விசய் சங்கர்.
கேள்வி 4: பா.ச.க-வைச் சேர்ந்த முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும் இதுவரை மோடி வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சிகள், ஊடகங்களின் நச்சரிப்புத் தாங்க முடியாத நிலையை அடைந்தபோது, ‘சுசுமாவும் வசுந்தரா இராசேவும் பதவி விலக வேண்டும்’ என்ற குரல் வந்தது. குரலுக்குச் சொந்தக்காரர், மோடி அல்ல; சங் பரிவார் அமைப்பின் தலைமையில் இருக்கும் கோவிந்தாச்சார்யா. இதற்கு மேலும் வினையாற்றாமல் இருந்தால், அது பா.ச.க-வுக்கு எதிரான பொது எண்ணமாக உருவெடுக்கும் என்பதால், மோடியை ஓர் அதட்டு அதட்டிவைக்கிறார் அவர். ஆனால் மோடியோ, இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் செல்வமகளுடன் தற்படம்/செல்ஃபி வித் செல்வமகள் என பகிரியில்(ட்விட்டரில்) மும்முரமாக இருக்கிறார். வசதி உள்ளவர்கள் நல்கை விலை எரிவளி உருளையை விட்டுத் தர வேண்டும் எனப் பரப்புரை செய்கிறது மோடி அரசு. ஆனால், மோடி பதவியேற்ற முதல் ஒரு வருடத்தில், வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவிட்ட தொகை 317 கோடி உரூபாய். (மன்மோகன்(சிங்கு), 10 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்று வர செலவிட்ட தொகை 650 கோடி உரூபாய்!)
கேள்வி 5: பொருளாதார வல்லுநர்   செயரஞ்சன் இந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மதிப்பிடும் கோணம் முக்கியமானது. காங்கிரசுக்கு மாற்று எனத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் பா.ச.க., அதே குட்டையில் விழுவது ஏன் என்பதையும், அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றாக இருக்கும்போது இவர்களால் மாற்றாக இருக்க முடியாது என்பதையும் தெளிவாக விளக்குகிறார்…
”காங்கிரசாக இருந்தாலும், பா.ச.க-வாக இருந்தாலும் நாட்டில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்பு பெருகும் என நினைக்கிறார்கள். ஆனால் தனியாருக்கு எவ்வளவு பணத்தைக் கொட்டிக்கொடுத்தாலும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்குமே தவிர, அது தொழில் முதலீடாக மாறி வேலைவாய்ப்பைப் பெருக்காது. ஒரு உரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. ‘வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி(Employment Elasticity)’ என இதற்குப் பெயர். இந்தியத் தொழில் துறையில் இது, வரலாறு காணாத அளவில் மிகவும் குறைவாக இருக்கிறது. 1,000 கோடி உரூபாய் முதலீட்டுக்கு 500 வேலை வாய்ப்புகளைக்கூட உருவாக்க முடியவில்லை. நிலத்தின் மதிப்பு, இயந்திரச் செலவு இவையே பெரும் பகுதி முதலீட்டைத் தின்றுவிடுகின்றன. தமிழ்த் திரைப்படம் ஒன்றின் தயாரிப்பு மதிப்பு 50 கோடி உரூபாய் என்றால், 30 கோடி உரூபாய் கதாநாயகனின் சம்பளத்துக்கே போய்விடுவதைப் போன்றது இது. மேலும், உற்பத்தியைப் பெருக்க ஏராளமான இயந்திரங்கள் வந்துவிட்டன. ஏறத்தாழ 500 தொழிலாளர்களை மட்டுமே வைத்து, ஒரு மகிழுந்து தொழிற்சாலையை இயக்க முடியும். அப்படியே உருவாகும் வேலைவாய்ப்புகளிலும் சம்பளம் மிகமிகக் குறைவு.
7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான் சம்பளம். இன்று, சென்னை, தில்லி, மும்பை… என எல்லாப் பெருநகரங்களிலும் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் இவ்வளவுதான். பிரமாண்டமான நிறுவனங்களாக இருந்தாலும் இதே நிலைதான். அவர்கள் ஊழியர்களை ஒப்பந்தக் கூலிகளாக எடுத்துக்கொள்கிறார்கள். 10 ஆயிரம் பேர் வேலைசெய்யும் தொழிற்சாலையில் வெறும் 1,000 பேர்தான் நிலையான தொழிலாளர்கள்; மீதம் இருக்கும் 9,000 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்களுக்கும் சம்பளம் அதே 10 ஆயிரத்தை ஒட்டிதான் இருக்கும். இதை மாற்றி அமைத்து தொழிலாளர் நலன்களை உறுதிப்படுத்தும் வேலைகளை அரசு செய்ய வேண்டும். மாறாக, ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை மேலும் பலவீனப்படுத்தும் வேலையைத்தான் இந்த அரசு செய்கிறது. அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றி அமைப்பது ஒன்றுதான் இதற்கான தீர்வு. சிறுதொழில்களை ஊக்குவித்து வளர்த்து எடுக்காமல் ‘மேக் இன் இந்தியா’ எனப் பேசுவதால் என்ன பயன்? அது, தொழிலாளர்களின் உழைப்பை இன்னும் குறைந்த கூலிக்குச் சுரண்டுவதற்குதான் வழி வகுக்கும்!”
  இதுதான் இந்தியாவை வளமான பாதையில் அழைத்துச் செல்லும் வியூகமா திரு.மோடி அவர்களே?!
செயரஞ்சன், விசய்சங்கர்
செயரஞ்சன், விசய்சங்கர்
auestion_to_modi


– பாரதி தம்பிbharathithambi01