பரம்பரை மரபைப் பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகளும் ஊழியர்களும்
ஒருநாள் வேட்டி அணிந்து வேட்டி நாள் கொண்டாடுமாறு கூட்டு நெசவு (கோஆ
டெக்சு) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாகக் கூட்டுநெசவு(கோஆ டெக்சு) பணியாட்சித்துறை அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்துச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இது தொடர்பாகக் கூட்டுநெசவு(கோஆ டெக்சு) பணியாட்சித்துறை அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்துச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில்
உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள்
தமிழர்கள். அத்தகைய ஆடைப் பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட
காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின்
அழகான வெளிப்பாடு. பரம்பரையின் பகட்டு, மனிதனின் மானம் காத்தது
மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டிதான்.
இன்றைய புதுமை நாகரிகச் சூழலில் வேட்டி அணிவது குறைந்து விட்டது.இப்போது,
வீறார்ந்த வேட்டியைக் காணமுடியவில்லை. வேட்டி என்பது வெறும் ஆடையின்
அடையாளம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு. உழைப்பின்
உயர்சிறப்பு. வேட்டி என்கிற ஆடை மரபைப் போற்றவும், வலுப்படுத்தவும் அதைத்
தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தோள் கொடுக்கவும்,
“வேட்டி நாள்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது .
வேட்டி
அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவச் சிறப்பபை உணர்த்தவும்,
தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல் திருநாளுக்கு முன்பாக 2014 சனவரியில்
ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேட்டி நாளாகக் கொண்டாடுங்கள்.
ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன்
வேட்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.
இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும், கூட்டு
நெசவு(கோஆப்டெக்சின்) விற்பனைக்கு உதவவும்கூடிய இத் திட்டத்துக்கு ஆதரவு
தரவேண்டும் எனக் கூட்டுநெசவு(கோஆப்.டெக்சு) இயக்குநர் சகாயம்
கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கை ஆட்சியர்கள், அனைத்துத்துறைத் தலைவர்கள் என அனைத்து
அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ‘வேட்டி நாள்’ கொண்டாடும் வகையில் அனைத்து வடிவங்கள், வண்ணங்களில்
அனைத்து வகை நூலில் சிறிய, பெரிய கறையுடன் கூடிய வகைகளைக்
கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) உற்பத்தி செய்துள்ளது. உரூ. 130 முதல் உரூ. 500
வரையிலான வகைகள் உள்ளன. தேவையான வேட்டிகளை அந்தந்தப் பகுதியில் இயங்கும்
கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக