maha tamilpirabaharan01
இலங்கைக்குச் சுற்றுலா  புகவுச் சீட்டு பெற்று  இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும்  வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு  என்னும்   ஊரில்  தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப் படைத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
மூவரையும்  தளையிட்ட  படையினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரனையும், பசுபதி (பிள்ளை)யையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர்.  இவர் உயர்வளையப் பாதுகாப்புப் பகுதிகளை ஒளிப்படம் எடுத்ததாகவும் எனவே,புகவு விதிகளை மீறி உள்ளார் எனவும் இலங்கை தெரிவிக்கிறது.
இது தொடர்பிலான சில செய்திகள், தமிழர் என்றாலே தமிழ் ஊடகங்களே புறக்கணிக்கும் போக்கை மெய்ப்பிக்கின்றன.
இலங்கை படைத்துறையின் செய்தித் தொடர்பாளர் கொடுத்த செய்தியையே  தமிழக இதழ்கள் வெளியிட்டுள்ளன. அவ்வாறு  வெளியிடும் பொழுது இதழாளர் பெயரை அறிந்து வெளியிட வேண்டும் என்ற இதழ்உணர்வும் இதழாளருக்காகக்  குரல் கொடுக்க வேண்டும் என்ற அறவுணர்வும் இதழ்களுக்கு இல்லாமல் போனது வருந்தத்தக்கது. நியூயார்க்கில் செயல்படும் இதழாளர் பாதுகாப்புக்குழு(Committee to Protect Journalists) மகா. தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்ய முறையிட்டுள்ளது. ஆனால் ஓங்கி ஒலிக்க வேண்டிய தமிழக ஊடகமோ மென்மையான போக்கையே கடைப்பிடிக்கின்றது. sreetharan01
இது தொடர்பில் வைகோ, இராமதாசு, தொல்.திருமாவளவன் ஆகியோர் தெரிவித்த கண்டனம் கூட இணையப் பதிப்பில் தேடிப்பார்த்து அறியுமாறுதான் வெளியிடப்பட்டுள்ளது.
புகவுச் சீட்டு விதிமுறைகளை மீறிய  தேவயானிக்குக் குரல் கொடுத்த இந்திய ஊடகங்கள் ஒரு புறம்! தமிழ் இதழாளருக்கு இதே போன்ற, ஆனால், பொய்யான குற்றச்சாட்டில் ஊறு இளைவிக்கும் பொழுது அமைதி காக்கும் தமிழக ஊடகங்கள் ஒருபுறம்! இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் விரைவாகக் கொண்டு செல்ல வேண்டிய செய்திப்பாட்டைத் தமிழக ஊடகங்கள் புறக்கணிக்கின்றன என்றால் அவை யாருக்காக ஊடகங்களை நடத்துகின்றன! இனியேனும் அவை மாறாவிட்டால் தமிழக மக்களால் புறக்கணிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர வேண்டும்.
மக்கள் செல்லும் பாதையில் மக்களவை உறுப்பினர்கள்உடன் இருப்பவர் எப்படி எங்கோ உள்ள உயர்வள‌ையப் பாதுகாப்புப் பகுதிகளை ஒளிப்படம் எடுத்திருக்க இயலும்?
ஆகவே,  பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டு என்பது நன்கு தெளிவாகிறது.  இலங்கை நாடாளுமன்ற உறுப்பிரன் சிரீதரன் வழக்குரைஞர் மூலம் நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் விரைவில் விடுதலை  செய்யப்படுவார் என எதிர்நோக்குவதாகவும் பிரித்தானிய ஒலிபரப்பு  நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
  அவர் விடுதலை செய்யப்படுவார் என நாமும் எதிர்நோக்குவோம்! ஆனால், நாம் அமைதி காத்தால் விடுதலை தள்ளிப்போகும் என்பதால் தமிழக அரசையும் மத்திய அரசையும் அணுகி மகா.தமிழ் பிரபாகரன் விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும்.


- அகரமுதல