திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இரைப்பைப் புற்றுநோய்க்குத் தீர்வு!

இரைப்பை ப் புற்றுநோய்க்கு  த் தீர்வு!

உலக அளவில் முதல் முறையாக, இரைப்பை புற்றுநோய்க்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துள்ள, எம்.எசு. சந்திரமோகன்: நான், சென்னை அரசு பொது மருத்துவமனையில், குடல் மற்றும் இரைப்பை துறை, தலைமை மருத்துவராக பணியாற்றுகிறேன். உலக அளவில், இரைப்பை புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இறப்பது, இந்தியர்களே. குறிப்பாக, தமிழகத்தில் தான், இதன் பாதிப்பு அதிகம். உணவில், உப்பின் அளவு அதிகம் இருப்பது; இறைச்சியை உப்பு கண்டம் போட்டு, நீண்ட நாட்களுக்கு சாப்பிடுவது; பதப்படுத்தப்பட்ட உணவை பொரிப்பதற்கு, ஒரே எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துவது; கருவாடு, ஊறுகாய் போன்றவற்றை அதிக அளவு சாப்பிடுவது. மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாவது ஆகியவற்றால், இரைப்பை புற்றுநோய் வருகிறது. பசியின்மை, தொடர்ந்து எடை குறைவு, ரத்த சோகை, உணவை விழுங்குவதில் சிரமம், கேன்சர் கட்டியிலிருந்து ரத்தம் கசிவதால் கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல் என, பல சிரமம் இதனால் ஏற்படுகிறது. "இன்டர்நேஷனல் கேஸ்ட்ரிக் கேன்சர்' அமைப்பு, இரைப்பை புற்றுநோய்க்கான சர்வதேச கருத்தரங்கை நடத்துகிறது. சமீபத்தில், இத்தாலியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க, இந்தியாவிலிருந்து நான் மட்டுமே சென்றிருந்தேன். அங்கு, நான் கண்டறிந்த இரைப்பை புற்றுநோய்க்கு காரணமான, மூன்று மரபணுக்கள் பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்தேன். இரைப்பை புற்றுநோய் பாதித்த கட்டிகளை பரிசோதித்ததில், நான் கூறிய மூன்று மரபணுக்களும் அதில் இருந்தன. இந்தியாவில், மரபியல் ரீதியிலான இரைப்பை புற்றுநோய் பாதிப்பு தான் அதிகம். அப்படிப்பட்ட அபாயத்தில் இருப்பவர்களின், வயிற்று பகுதியில் உள்ள சதையை பரிசோதிக்க வேண்டும். மேற்கூறிய மரபணுக்கள், வயிற்று சதையில் இருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், தேவையான முன்னெச்சரிக்கை சிகிச்சை செய்ய முடியும். எதிர்காலத்தில், மரபணு சிகிச்சையை, நாமே செய்ய முடியும் என்ற நம்பிக்கையை, இந்த மரபணு கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக