ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

1.ஒற்றையில மும்மைப்பயன் ஊர்தி. 2.சமூக நல்லிணக்கச் சிற்றூர்

 ஒற்றையில மும்மைப்பயன் ஊர்தி
திரி இன் ஒன் கார்!
சூரிய ஒளி, பேட்டரி, பெட்ரோல் என, மூன்று எரிசக்திகளையும் ஒரே காரில் பயன்படுத்தும் விதமாக தயாரித்த, கல்லூரி மாணவன் தினேஷ் குமார்: நான், எம்.இ., "அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்' படிக்கிறேன். பெட்ரோல் விலை உயர்வு, மின்சார தட்டுப்பாடு, 24 மணி நேரமும் சூரிய ஒளியை பெற முடியாது என, ஒவ்வொரு எரிசக்திக்கும், ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கிறது. இக்குறைபாட்டை நீக்க முடியாது. ஆனால், மூன்று எரிசக்தியையும், தேவைக்கு ஏற்ப ஒரு சேர பயன்படுத்தினால், குறைந்த செலவில் அதிக தூரம் செல்ல முடியும். இந்த எண்ணத்தில் தான், பி.இ., படிக்கும் போது, பைக் தயாரித்தேன். இந்த ஆர்வம், கார் செய்ய வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. இதனால், மூன்று எரிசக்தியையும் பயன்படுத்தும் விதமான காரை தயாரித்து, அதற்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்திருக்கிறேன். பகல் நேரங்களில் சூரிய ஒளி நன்கு கிடைப்பதால், காரின் மேல் பகுதியில், "சோலார் பேனல்'கள் பொருத்தினேன். அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை, "பேட்டரி'யில் சேமித்து காரை இயக்கலாம். இவ்வகை மின்சாரத்தை, எவ்வித செலவும் இன்றி, இலவசமாக தயாரிக்கலாம். சூரிய ஒளி கிடைக்காத போது, மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை பயன்படுத்தலாம். காரில் உள்ள, 10 பேட்டரியை, 2 யூனிட் மின்சாரத்தால் நிரப்பினால், 200 கி.மீ., வரை பயணம் செய்யலாம். இரண்டுமே கிடைக்காத நேரத்தில், பெட்ரோல் மூலம் மின்சாரத்தை உருவாக்கி, 1 லிட்டருக்கு, 50 கி.மீ., தூரம் செல்லும் வகையில், மின்சாரத்தில் இயங்கும் இன்ஜினை பொருத்தி, காரை வடிவமைத்திருக்கிறேன். மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில், 10 பேர் செல்லும் இக்காரை தயாரிக்க, வீட்டிலேயே, "ஒர்க் ஷாப்' அமைத்து, இரண்டு ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். காரில் ஏதாவது பிரச்னை அல்லது பழுது ஏற்பட்டால், "சென்சார்' மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பும். தொடர்ந்து ஓட்டினால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு கார் தானாகவே, "ஆப்' ஆகிவிடும். தீ விபத்து ஏற்படுவதையும் முற்றிலும் தவிர்த்து, பாதுகாப்பாக தயாரித்து உள்ளேன்.

சமூக நல்லிணக்க ச் சிற்றூர்
 
 பேதங்களை மறந்து, ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்காக, "சமூக நல்லிணக்க கிராமம்' விருதையும், 10 லட்சம் பரிசும் பெற்ற, சங்கர்:நான், மதுரையில் இருந்து, 36 கி.மீ., தூரத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தின், பஞ்சாயத்து தலைவர். ஜாதி தீ கொழுந்து விட்டு மனிதர்களையும், மனித நேயத்தையும் எரித்துக் கொண்டிருக்கும் காலம் இது. அதற்கு ஏற்ப தமிழ் சினிமாக்களில், மதுரை என்றாலே ஜாதியை தூக்கி பிடிப்போர் அதிகம் இருப்பதாகவே, காட்சியை அமைத்திருப்பர். ஆனால், எங்கள் குன்னத்தூர் கிராமத்தில், 70 ஆண்டிற்கும் மேலாக, எந்த ஜாதி பிரச்னையும் இன்றி, 15க்கும் மேற்பட்ட ஜாதியை சேர்ந்த, 980 குடும்பங்கள், சந்தோஷமாக இருக்கிறோம். இதற்கு காரணம், எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடமும், பாடம் நடத்திய ஆசிரியர்களும் தான். ஏனெனில், பள்ளியின் காலை வழிபாட்டில், பாரதியாரின், "ஜாதிகள் இல்லையடி பாப்பா; குல தாழ்ச்சி சொல்லல் பாவம்' போன்ற பாடலை பாட வைப்பர். மாணவர்களை பாடச் சொல்லி, ஜாதியில் ஏற்ற தாழ்வு இல்லை என, ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், 70 ஆண்டுக்கும் மேலாக ஜாதி சண்டையின்றி, கிராமத்தினர் அனைவரும், ஒரே குடும்பமாக பழகுகிறோம். எங்கள் கிராமத்து டீக்கடைகளில், "இரட்டை டம்ளர்' முறை கிடையாது. ஒதுக்கப்பட்ட காலனி வீடுகளும் இல்லை. அனைத்து ஜாதியினருக்கும், எரிக்க அல்லது புதைக்க, ஒரு சுடுகாடு தான். ஜாதி தொடர்பான எந்த, "போஸ்டர்'களும் கிராமத்தில் ஒட்டுவதில்லை. திருமண அழைப்பிதழில் கூட, ஜாதி பெயர் இடம் பெறாமலே அச்சடிக்கிறோம். 25க்கும் மேற்பட்ட கலப்பு திருமணங்களும், ஜாதி மற்றும் மதம் கடந்த காதல் திருமணங்களை, பெற்றோர் சம்மதத்துடன் நடத்தி வைத்திருக்கிறோம். குன்னத்தூர் கிராமவாசிகளின் ஒற்றுமையை பார்த்த, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, "சமூக நல்லிணக்க கிராமம்' விருதையும், 10 லட்ச ரூபாய் பரிசையும் வழங்கினார். மற்றவர்களும் எங்களை பின்பற்றினால், நாடு அமைதி பூங்காவாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக