சனி, 1 டிசம்பர், 2012

கடும் சட்டத்தால் உழவைப் பெருக்கலாம்!

 



கடும் சட்டத்தால்  உழவைப் பெருக்கலாம்!
வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன்: நான் விவசாயி வீட்டு பிள்ளை. என் சொந்த ஊர், தென்காசி அருகிலுள்ள, சுந்தரேசபுரம். அப்பாவின் மரணத்திற்கு பின், திருமங்கலத்துக்கு வந்து விட்டேன். மனோதத்துவம், சமூகவியல், இதழியல் எல்லாம் படித்து விட்டு, "புதிய கல்வி' சுற்றுச் சூழல் பத்திரிகையில், நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன்.இன்றைய சுற்றுச்சூழல் பிரச்னையால், அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். ஆகவே, விவசாயிகளிடம் வேலை செய்ய முடிவு செய்தேன். "தமிழக விவசாயிகள் தொழில்நுட்பக் கழகம்' என்ற பெயரில், ஒருங்கிணைந்து பயிற்சி கொடுக்கிறேன்.ரசாயன உரங்கள் பற்றியும், பூச்சிக் கொல்லிகளை பற்றியும், வெற்றிகரமாக விவசாயம் செய்வதைப் பற்றியும், பயிற்சி கொடுத்தேன்; நல்ல வரவேற்பு இருந்தது. 15 ஆண்டுகளாக பயிற்சி கொடுத்து வருகிறேன். விவசாயிகள், களை, பூச்சிகளை தான் பெரிய பிரச்னையாக கருதுகின்றனர். மண்ணில் சத்துக்குறைபாடு ஏற்படும் போது தான், களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால் தான், துத்தி செடிகள் முளைக்கும். களை செடிகளை வெட்டி, திருப்பி மண்ணுக்கே கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்து விட்டால், சத்துக் குறைபாடு சரி செய்யப்படும்.பூச்சிகளைப் பொறுத்தவரை முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என, நான்கு பருவம் உண்டு. இலை தழைகளைப் போட்டு, பூச்சிகளை எளிமையாக கட்டுப்படுத்தலாம். நகர வாழ்க்கை பிடிக்காத பலர், "எல்லாத்தையும் விட்டு ஊருக்கே போகலாம்' என, நினைக்கின்றனர்; "அதுல அவ்வளவு வருமானம் வராதே' என்ற எண்ணம், அதைத் தடுக்கிறது. ஆனால், விவசாயம் தான் நல்ல லாபம் தருகிறது.தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில், பல்லாயிரக்கணக்கான நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதை சரிசெய்ய, எளிமையான வழி, "இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தரிசாகக் கிடக்கும் நிலத்தை, அரசு எடுத்துக் கொள்ளும்' என, சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரங்களை நடுவர்; விவசாயத்தில் முதலீடும் குவியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக