மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி இயக்குனர் பிரவீணா கார்மல்: வகுப்பறையில், 10 நிமிடம் கூட அமர முடியாதவர்கள், உடல், மன வளர்ச்சி தேங்கியவர்கள் ஆகியோருக்கு, சிறப்புப் பள்ளி தான் சிறந்தது. இங்கு தான், ஒவ்வொரு சிறப்புக் குழந்தைக்குமான, தனிப் பாடத் திட்டம், கவனிப்பு எல்லாம் கிடைக்கும்.
சிறப்புக் கல்வி மட்டுமல்ல, மொழி வளர்ச்சிக்கான தெரபி, மூளை நரம்புகளையும், உடலியக்க நரம்புகளையும் ஒருங்கிணைக்கும் தெரபி, நடத்தை சரியாக்கல் பயிற்சி, விளையாட்டு, உணவு, இசை, நடனம், கலை என, ஒவ்வொன்றின் மூலமும், மாணவனின் வளர்ச்சியை, வயதிற்கேற்றவாறு மீட்க, சிறப்புப் பள்ளிகளால் மட்டுமே இயலும்.
இந்தப் பள்ளியில் சேர்ந்தால், காலத்திற்கும் அங்கேயே இருக்க வேண்டி வருமோ என்ற பயம், சில பெற்றோருக்கு உண்டு. ஆனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியைப் பொறுத்து, ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகளில் குழந்தைகளை, "நார்மல்' பள்ளிக்கே அனுப்பி விடலாம்.
தற்போதைய கல்வித் திட்டத்தின் படி, ஒரே இடத்தில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, "அனைவருக்கும் கல்வி திட்டத்தின்' கீழ், சிறப்பு ஆசிரியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இவர், வழக்கமான ஆசிரியர்களைத் தவிர்த்து, பிரத்யேகமாக ஒவ்வொரு குழந்தைகளுக்குமான, மன, உடல் வளர்ச்சியை பதிவேடாக பராமரித்து, கவனித்துக் கொள்வார்.
அரசு தரப்பில் தேவையான உதவிகளையும் பெற்றுத் தருவார். இந்த சிறப்பு ஆசிரியர் நியமனம், அரசுப் பள்ளிகளில் மட்டுமே. தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாக இருந்தால், அங்கு சிறப்பு ஆசிரியர் இருக்கிறாரா என்பதை, உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
அரசோ, தனியாரோ பொதுவாக நார்மல் பள்ளிகளில் சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது, ஒரு சிறப்பு மாணவனை, அவனை தேங்கிய நிலையிலிருந்து மீட்க, பெருமளவு உதவுகிறது. பலரோடு ஒன்றாக வளர்வதால், ஒளிந்திருக்கும் தனித் திறமைகள் வெளிப்படும். பெற்றோருக்கும், தங்கள் மகன் நார்மல் பள்ளியில் படிப்பதில் ஒரு நிம்மதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக