மத்திய அரசின் சலுகைகள் விலக்கம் - காற்றாலை மின் உற்பத்தி 50 %
குறைவு
காற்றாலைகளுக்கு, மத்திய அரசு வழங்கிய சலுகைகள் நிறுத்தப்பட்டதால்,
காற்றாலை மின் உற்பத்தி, நடப்பாண்டில், 50 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு,
குறைவான முதலீடே காரணம் என்று கூறப்படுகிறது.காற்றாலைகளுக்கு,
எதிர்பார்க்கும் தேய்மான சலுகை மற்றும் மின் உற்பத்தி அடிப்படையிலான
ஊக்குவிப்பு தொகை ஆகியவற்றை, மத்திய அரசு வழங்கி வந்தது. இச்சலுகைகளில்,
ஏதாவது ஒன்றை, காற்றாலை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி
கொள்ளலாம்.இந்நிலையில், இரண்டு சலுகைகளையும், 2011-12ம் நிதியாண்டோடு,
மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால்,முதலீட்டாளர்களுக்கு எவ்வித
சலுகைகளும், மத்திய அரசிடம் இருந்து கிடைப்ப தில்லை.
தேய்மான சலுகை:
கருத்தரங்கில்
பங்கேற்ற, இந்தியகாற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர், கஸ்தூரி ரங்கையன்
கூறியதாவது:உலகளவில், காற்றாலை மின்உற்பத்தியில், இந்தியா, 5வது இடத்தில்
உள்ளது. நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம், 17 ஆயிரம்
மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். நிலைத்த நீடித்த எரிசக்தி
துறையில்,காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.மத்திய அரசு,
காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு, 92ம் ஆண்டு முதல், எதிர்பார்க்கும்
தேய்மான சலுகை, உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை ஆகியவற்றை
வழங்கியது. எதிர்பார்க்கும் தேய்மான சலுகை, 80 சதவீதமும்; உற்பத்தி
அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை, ஒரு யூனிட்க்கு, 50 பைசா எனவும், அரசு
வழங்கி வந்தது.திடீரென, நடப்பாண்டில் இருந்து, காற்றாலை
உற்பத்தியாளர்களுக்கான, இந்த இரண்டு சலுகைகளையும், மத்திய அரசு திரும்ப
பெற்றது. அரசின் இந்த அறிவிப்பால், புதிய முதலீடுகள் குறைந்து உள்ளன.
பின்னடைவு:
கடந்த
ஆண்டில், புதிதாக, 3,200 மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி செய்யப்பட்டது.
நடப்பாண்டின் முதல் ஆறு மாதத்தில், 850 மெகாவாட் அளவிற்கே, புதிய மின்
உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, காற்றாலை மின்
உற்பத்தி, 50சதவீதம் பின்னடைவை சந்தித்துள்ளது.கொள்முதல் பணம் கிடைப்பதில்
ஏற்படும் காலதாமதம், சலுகையை திரும்ப பெற்றது போன்ற காரணங்களே, காற்றாலை
மின் உற்பத்தி குறைவுக்கு, முக்கிய காரணம். மத்திய அரசு, மரபுசாரா எரிசக்தி
துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நேரத்தில், சலுகைகளை திரும்ப
பெற்றது, காற்றாலைகள் புதிய முதலீடுகளை பாதிக்கும்.இதை கருத்தில் கொண்டு,
காற்றாலை உற்பத்தியாளர்களுக்கான சலுகைகளை, மீண்டும் வழங்க முயற்சிகள்
எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- தினமலர் செய்தியாளர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக