தமிழகம்
First Published : 11 Dec 2011 12:27:32 AM IST
Last Updated : 11 Dec 2011 03:57:10 AM IST
சென்னை, டிச. 10: போலீஸாரும், அரசு டாக்டர்களும் மனித உரிமைகளை அதிக அளவில் மீறுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.முருகேசன் கூறினார். சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி டி.முருகேசன் பேசியது: மக்களின் தேவைகளை உணர்ந்து அதைச் செய்ய அரசு தவறும் போதே மனித உரிமை மீறல்கள் தொடங்கிவிடுகின்றன. மனிதனின் அனைத்து அம்சங்களும் அவனுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். காவல்துறையினர்தான் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒருவரைக் கட்டாயப்படுத்தி புகார் வாங்குவது, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறுவது போன்றவையும் மனித உரிமை மீறல்களே. போலீஸார் தாக்கல் செய்யும் தடுப்புக் காவல் வழக்குகள் 95 சதவீதம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அரசு டாக்டர்களும் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது அதிக அளவில் உள்ளது. இதுவும் மனித உரிமை மீறல்தான். அனைவரும் தங்களது சுதந்திரத்தை அனுபவித்து, மற்றவர்களின் உரிமைகளில் தலையிடாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றார் நீதிபதி டி.முருகேசன். இந்த நிகழ்ச்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் கே.பாஸ்கரன், ஜெயந்தி, தமிழ்நாடு போலீஸ் டிஜிபி கே.ராமானுஜம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஆர். ஸ்ரீலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவாளர் டி. துரைசாமி மற்றும் காவல்துறையினர், மருத்துவத் துறையினர் இதில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக