புதன், 14 டிசம்பர், 2011

நேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்


நேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்து வைப்பாரா மன்மோகன்சிங்?

பதிவு செய்த நாள் : 14/12/2011


முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையில் பெரும் போராட்டத்திற்கு வித்திட்டிருக்கிறது. நதி நீர் பிரச்சினைகள் இந்தியாவில் இரண்டு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை தோற்றுவிப்பது பெரியாறு அணைப்பிரச்சினை மட்டும் அல்ல. இதற்கு முன்பு கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே எழுந்த காவிரிப் பிரச்சினை இன்னும் தீரவில்லை.
ஆந்திராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே எழுந்த பாலாறு பிரச்சினையும் இன்னும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது இந்நொரு அண்டை மாநிலமான கேரளாவுடனான முல்லைப்பெரியாறு தகராறு ஒவ்வொரு வருடமும் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. அணையால் ஏற்பட்ட தலைவலியின் பின்னணி என்ன.
கேரளாவில் 2000 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் உபரியாக கடலில் போய் விழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2000 டி.எம்.சி. தண்ணீரில் வெறும் 200 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் கூட, சுமார் 13இற்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது தமிழக விவசாயிகளின் கருத்து.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1800ஆம் வருடங்களில் கடும் பஞ்சத்தில் வாடியது தமிழகத்தின் தென் பகுதிகளான மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள். இந்த பஞ்சம் அடிக்கடி 1840ஆம் வருடம் வரை தொடர்ந்தது. பஞ்சத்தைப் போக்குவதற்காக கட்ட திட்டமிடப்பட்டதுதான் பெரியாறு அணை.
அணை கட்டுவதற்காக சுமார் 8 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்றாலும் கேப்டன் ஸ்மித் தலைமையிலான முதல் ஆய்வில் பெரியாறு அணை கட்டும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு வெறும் 1.75 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கான முதல் செயற்றிட்ட அறிக்கையிலேயே 1867இல் ஸ்மித் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக முயன்றவர் அப்போது ராமநாதபுரம் ராஜாவாக இருந்த திவான் முத்து அருளப்பிள்ளை.
இதைத் தொடர்ந்து 19 வருடம் கழித்து சென்னை மாகாணத்திற்கும், திருவாங்கூர் ராஜாவிற்கும் 999 வருடங்களுக்கான முல்லைப் பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 9 வருடங்கள் கழித்து அணை கட்டிமுடிக்கப்பட்டு 10.10.1895 அன்று பெரியாறு அணை திறக்கப்பட்டது. ஆக இன்று பெரியாறு அணையின் வயது 116.

அணையை கட்டி முடித்தவர் பென்னி குக் என்ற பொறியாளர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதைக் கட்டுவதற்கு அணையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு களைப்புத் தெரியாமல் இருக்க தினமும் 4000 லீற்றர் கள்ளச் சாராயம் வழங்கப்பட்டது என்று ஐந்து மாவட்ட பெரியார் பாசண விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் தன்னுடைய “முல்லை பெரியாறு சில உண்மைகள்” என்ற புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, அணை கட்டுவதற்கு ஒரு கட்டத்தில் தங்களிடம் நிதி இல்லை என்று கூறிவிட்டது ஆங்கிலேய அரசு. ஆகவே அணையின் பொறியாளராக இருந்த பென்னிகுக் தன் சொத்துக்களைக் கூட விற்று அணையின் மீதியிருந்த பணிகளை முடித்தாராம். 152 அடி உயரம் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கும் அளவிற்கு பலம் நிறைந்த அணையாக கட்டப்பட்டதுதான் பெரியாறு அணை.
இந்த உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் 10.5 டி.எம்.சி. அளவு தண்ணீரினால் தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். நேரடியாக 70 லட்சம் மக்களும், மறைமுகமாக சுமார் 1.15 கோடி மக்களும் பயன்பெறுவார்கள் என்று கருதப்பட்டது.
ஆனால், இந்த அணையின் மீதிருந்த உரிமைகளை தமிழ்நாடு படிப்படியாக கேரளாவிடம் விட்டுக் கொடுத்ததுதான் இன்றைய இவ்வளவு பெரிய சிக்கலுக்கு காரணம். உதாரணமாக முதலில் அணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது இது முற்றிலும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றுதான் முல்லைப்பெரியாறு ஒப்பந்தம் கூறுகிறது.
ஆனால் மொழி வாரி மாநிலங்கள் 1956இல் உருவான போது அணை இருக்கும் பகுதிகளான பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் எங்களுக்கே வேண்டும் என்று கேரளா அடம்பிடித்தது. இத்தனைக்கும் அங்கு அப்போது 90 சதவீதம் பேர் தமிழர்கள் வாழ்ந்தார்கள். மொழி வாரி மாநிலங்கள் அடிப்படையில் பார்த்தால் கூட இப்பகுதிகள் தமிழ்நாட்டிற்கே வந்திருக்க வேண்டும்.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜரிடம், “இந்த இரு தாலுகாக்கள் கேரளாவிடம் இல்லை என்றால் அந்த மாநிலம் தலையில்லாத உடலாகவே இருக்கும்” என்று சொல்லி, இவ்விரு தாலுகாக்களையும் கேரளாவிடம் ஒப்படைத்தார்.
அப்போதே முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் கேரளாவிடம் போய் விட்டது. இதை வலியுறுத்திக் கொள்ளும் வகையில் இந்த இரு தாலுகாக்களிலும் கேரள மாநிலத்தவரை கொண்டு வந்து அதிக அளவில் குடியேற்றிய நிகழ்ச்சிகளும் நடந்தன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரியாறு அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் தமிழ்நாடு தொடங்கியது. இது கேரளாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கேரளா இடுக்கியில் ஒரு அணை கட்டியது. ஆனால் அந்த அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் 1979ஆம் வருடம், அதாவது 32 வருடங்களுக்கு முன்பு “முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது.
இது உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து” என்ற கோரிக்கையை முன் வைத்து, முதல் போராட்டத்தை துவக்கியவர் அன்று எம்.எல்.ஏ.வாக இருந்த கே.எம்.தோமஸ். இதன் விளைவாக மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் கே.சி.தோமஸ் இரு மாநில அதிகாரிகளுடனும் 25.11.1979 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே தொடங்கிய முதல் பேச்சுவார்த்தை.
அதில் இரு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அணையை 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துவது என்றும், அதுவரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து குறைத்து 136 அடியாக வைத்துக் கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இப்படித்தான் அணையின் நீர்மட்ட அளவு அணை கட்டிய 84 வருடங்கள் கழித்து முதல் முறையாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த ஒப்பந்தத்திற்கு அப்போது எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு 1980இல் மீண்டும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் 145 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தவும், 12.51 கோடி ரூபாய் செலவில் அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஆணையிட்டது. அந்த பணிகளும் நடைபெற்றன. ஆனால் 145 அடி உயர்த்த கேரள அரசு சம்மதிக்கவில்லை. இதில் விஷேசம் என்னவென்றால் அணை பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளும் கேரள அரசுக்கு அனுப்பப்பட்டு, அம்மாநில அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே செய்யப்பட்டன.
ஆனாலும் கேரளா தொடர்ந்து பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டது. குறிப்பாக அணைக்கு தண்ணீர் வரும் வழியில் நான்கு புதிய அணைகளை கட்டியது. ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை இது. அதேபோல் அணையின் பாதுகாப்பு மட்டும் தமிழகத்திடம் இருந்து வந்தது. அதையும் 1982 வாக்கில் கேரளாவிடம் விட்டுக் கொடுத்தது தமிழக அரசு.இந்நிலையில் 1989இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் முந்தைய உத்தரவுப்படி 145 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அதனை அணையை பாதுகாக்கும் கேரள பொலிஸார் ஏற்கவில்லை.
இதன்பிறகு முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை இரு மாநில உறவில் தைத்த முள்ளாக மாறியது. தொடர்ந்து கேரள அரசு வம்பு பண்ணியே கொண்டிருந்ததால், 1998ஆம் வருடம் மகபூப் பாட்ஷா, கே.எம்.அப்பாஸ், ரத்தினசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார்கள். அதில் வைக்கப்பட்ட இரு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று அணையின் பாதுகாப்பு மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இன்னொன்று அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்த வேண்டும் என்பதுதான். சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் இப்பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து என்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. ஆனாலும் பிரச்சினை தீரவில்லை.
மீண்டும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் முன்பு வந்த போது வை.கே.சபர்வால் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும். அணையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறகு 152 அடி வரை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கலாம்.
இந்த பணிகளை மேற்கொள்ள கேரள அரசும் அதிகாரிகளும் எந்தவித முட்டுக்கட்டையும் போடக்கூடாது” என்று தீர்ப்பளித்தார்கள். இந்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத்தான் இப்போது கேரள அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. குறிப்பாக கேரளா அரசு ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து அணையின் நீர்மட்டம் 136 அடி என்று நிர்ணயித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான இந்த சட்டம் செல்லாது என்று தமிழகத்தின் சார்பில் அப்போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் பிறகு உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் கூட்டம், அமைச்சர்கள் கூட்டம், முதல்வர்கள் கூட்டம் எவற்றிலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்நிலையில்தான் “இவ்வழக்கில் சட்டபிரச்சினைகள் உள்ளன” என்று கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்.
மீண்டும் தொடங்கிய சட்டப் போராட்டத்தின் விளைவாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையின் பலம் பற்றி ஆய்வு நடத்த “எம்பவர்டு கமிட்டி” அமைக்கப்பட்டது. இதுவரை டி.கே. மித்தல் கமிட்டி, டாக்டர் எஸ்.எஸ்.பிரார் கமிட்டி என்று பல கமிட்டிகள் அணையின் பலம் பற்றி ஆய்வு மேற்கொண்டு விட்டன.
இப்போது ஒருபுறம் ஆனந்த் கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கமிட்டியின் விசாரணை வரம்பில் கேரளா புதிய அணை கட்டும் விவகாரமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள அரசு புதிய அணை கட்டக்கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தாக்கல் செய்த மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கேரள அரசே தன்னிச்சையாக ரூர்க்கி ஐ.ஐ.டி. மூலம் ஒரு ஆய்வு நடத்தி, “அணை இருக்கும் பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டால் அணை உடையும் ஆபத்து இருக்கிறது” என்று கூறியிருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “தமிழகத்தில் உள்ள கல்லணை பெரியாறு அணையும் முன்பு கட்டியது. ஆனால் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல் ஆந்திராவில் உள்ள கோதாவரி, கிருஷ்ணா போன்ற அணைகளும் இதற்கு முன்பு கட்டப்பட்டு இன்னும் பத்திரமாக இருக்கின்றன. ஆகவே பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. இதனால் கேரள மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஆகவே அணைக்கு மத்திய தொழிற்படை பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அணையின் மதகுகளை உடைக்க கேரள இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தை முன்னிட்டே இப்படி அவசரக்கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

“டாம் 999″ (அணை குத்தகை காலமான 999 வருடத்தை குறிப்பிடும் வகையில்) என்று அணை உடைவது போன்ற ஒரு படத்தை போட்டுக் காட்டி கேரள மக்கள் மத்தியில் பீதியை அம்மாநில அரசு உருவாக்கி விட்டது. அதேபோல் அங்குள்ள காங்கிரஸ{ம் சரி, கம்யூனிஸ்ட் கட்சியும் சரி “அணை பாதுகாப்பற்றது” என்ற பிரசாரத்தை கடுமையாகவே செய்து மக்களை நம்ப வைத்து விட்டது.
“இருக்கின்ற அணையிலேயே இவ்வளவு பிரச்சினைச் செய்யும் கேரளா, புதிய அணை கட்டி எங்கே தண்ணீர் தரப்போகிறது” என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக இந்த நீர் பாசனம் பெறும் ஐந்து மாவட்ட மக்கள் பீதியில் இருக்கிறார்கள். மத்திய அரசோ டெல்லியில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்தன் விளைவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவதை சமாளிக்கவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
அதனால் இரு மாநிலப் பிரச்சினைகள் குறித்து தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. காரணம் மத்திய ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தனியாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை. ஆனால் கேரளாவில் அந்த வாய்ப்பு இருக்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக அந்த வாய்ப்பை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. 55 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு உருவாக்கி வைத்த தொல்லை முல்லைப் பெரியாறு. அதை இப்போது காங்கிரஸ் பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங் தீர்த்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை நதி நீர் பிரச்சினையில் மாநிலங்கள் ஏற்பதில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. பெரியாறு அணை பிரச்சினையில் நடக்கும் கேரளாவின் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. பிரச்சினையை உருவாக்கிய காங்கிரஸே தீர்த்து வைக்குமா இதுதான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் ஏக்கமாக இருக்கிறது.
நன்றி: டெய்லிமிறர்
0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக