செவ்வாய், 13 டிசம்பர், 2011

viduthalai editorial about Ilakkuvanar, Feb 6,2010 : வாழ்க இலக்குவனார்!

கடந்த ஆண்டு ஆசிரிய உரை


என் வாழ்க்கையே தமிழ் நாடிய போராட்டக் களம்தான்; இளமையில் வறுமையோடு போர்; சாதியோடு போர்; சமயத்தோடு போர்; மூட நம்பிக்கைகளோடு போர்; போர்! போர்!! என்றும் ஓயாத போர்! என்று தன்னிலை விளக்கம் கொடுத்த தன்மானப் புலவர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டு இது (17.11.1909-3.9.1973).
திராவிட இயக்கப்பெரும் புலவருக்குத் திராவிடர் கழகம் இன்று நூற்றாண்டு விழா எடுப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் தமிழாசிரியர் பெருமக்கள்தான் தந்தை பெரியார் அவர்களின் தன்மான உணர்வுக் கருத்துக்களை ஊட்டியவர்கள் ஆவர். அதில் இலக்குவனாருக்குத் தனித்த சிம்மாசனமே உண்டு.
தமிழ்மொழியைக் காக்கவும். வளர்க்கவும் மதுரையில் தமிழ்க் காப்புக் கழகம் நிறுவினார். அந்த அமைப்பின் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப் பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார். அவர் உருவாக்கிய தமிழ்க் காப்புக் கழகத்தின் குறிக்கோள் என்ன தெரியுமா?
புரட்சிக்கவிஞரின் தமிழ் இயக்கம்தான். இலக்குவனாரின் இலக்கு ஏற்றமிக்கது என்பதற்கு ஈடில்லா இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
எங்கு சென்றாலும் தமிழ், தமிழர் என்று மொழிமான இனமான உணர்வு. எந்த ஓரிடத்திலும் அவரை நிலையாகப் பணியாற்றிட விடவில்லை. 1936 முதல் 1971 வரை உள்ள அந்தக் காலக்கட்டத்தில். 35 ஆண்டுகளில் அவர் பணியாற்ற நேர்ந்த இடங்களின் எண்ணிக்கை பதினொன்று என்றால், அதன் அதன் தன்மையைத் தக்க முறையில் உணர்ந்துகொள்ளலாம்.
புலவர் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோதே வடமொழியை எதிர்த்துப் புலியெனப் பாய்ந்தவர். திருவையாறு கல்லூரியின் முதல்வர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரி என்பவர் வடமொழியைத் தூக்கித் தமிழ் மொழியைத் தாழ்த்தும் பார்ப்பனர்; தனித்தமிழ் வீரராக விளங்கிய அந்தப் புலிக்குட்டியின் பாய்ச்சலை அவர் எப்படித்தான் பொறுப்பார்? தொல்லைகள் பல கொடுத்தார். பணிந்தாரில்லை இலக்குவனார். தகுதியற்ற தலைவரின்கீழ்த் தமிழ்க் கல்லூரியின் நிலை என்ற துண்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுத் தமிழ் உணர்ச்சியின் வெப்பத்தை வெளிப்படுத்தினார்.
கம்பன் கழகத்தார் ''கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்; சங்கத் தமிழை சங்கக் கடலில் எறிவோம் என்று முழக்கமிட்டபோது. அதனை எதிர்த்துப் பொடியாக்க 'சங்க இலக்கியம், என்ற இதழைத் தொடங்கிய தமிழ்த் தொண்டர் அவர்.
அரசியல் காரணங்களுக்காக விருதுநகர் கல்லூரியிலிருந்து அவரை விலக்கியபோது தந்தை பெரியார் தீட்டிய எழுத்துக்கள் ஒன்றுபோதும் இலக்குவனாரின் புகழ்பாட!
''தமிழ்ப் பற்று காரணமாக இலக்குவனார் பழிவாங்கப்பட்டு. வேலையை விட்டுத் துரத்தப்பட்டிருக்கிறார். இவரைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் நம் இரத்தம் கொதிக்கிறது. மனம் பதைக்கிறது. தமிழனுக்கும். தமிழுக்கும் பாடுபட்ட இவர் நிலையைப் பார் என அபாய அறிவிப்புக் கை காட்டியதாகத் தமிழ் அறிஞர் காட்சியளிக்கிறார் என்று தந்தை பெரியார் பதறி எழுதும் அளவுக்கு இலக்குவனார் இனவுணர்வின் இமயமாக எழுந்து நின்றுள்ளார்.
இந்த எதிர்ப்புக் காலகட்டத்தில் 1965இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (D.I.R.) மூன்றரைத் திங்கள் சிறை வாசமிருந்தார்.
புலவர் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர். 'தமிழ் மொழியின் தோற்றமும். வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்து எம்..எல். பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். சங்க இலக்கியம். திராவிடக் கூட்டரசு. குறள்நெறி. Kuralneri,Dravidian Federatrion, ஆகிய இதழ்களை அவ்வப்போது நடத்தி நட்டப்பட்டுள்ளார். 14 ஆய்வு நூல்களையும். நான்கு கவிதை நூல்களையும் தமிழுலகுக்குத் தந்த பெருமகன் அவர்.
ஆங்கிலத்தில் இவர் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தைத்தான் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும்பொழுது எடுத்துச் சென்றார்.
நெடிய உருவம், வீரம் கொப்பளிக்கும் நேர் கொண்ட பார்வைக்குச் சொந்தக்காரரான திராவிடர் பேரியக்கத்துக்குரிய அந்த மாபெரும் புலவரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் இன்று பெருமையுடன் கொண்டாடுகிறது.
திராவிடர் இயக்கத்தின்  தன்னிகரில்லாத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவரின் படத்தினைத் திறந்து வைப்பதும். இலக்குவனாரின் அருமை மகனார் முனைவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்குப் பெரியார் விருது அளித்துப் பாராட்டுவதும் பொருத்தம்தானே!
இலக்குவனார் ஊட்டி வளர்த்த அந்தத் தமிழ் உணர்வு. இன உணர்வு மேலும் கூர்தீட்டப்பட வேண்டிய காலம்தான் இது. இந்நாளில் அதனை நினைவூட்டுவோம்! வாழ்க இலக்குவனார்!!
விடுதலை - தலையங்கம் - பிப்ரவரி 6.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக