திங்கள், 12 டிசம்பர், 2011

Vaiko send letter to former s.c.judge: முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு வைகோ கடிதம்

முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு வைகோ கடிதம்

First Published : 11 Dec 2011 03:18:55 PM IST

Last Updated : 11 Dec 2011 03:29:10 PM IST

சென்னை, டிச.11: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் அந்தக் கடிதம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது:கடித நகல்:மதிப்பிற்குரிய உயர் கிருஷ்ண அய்யர் அவர்களுக்கு,வணக்கம். தங்கள் நலமே விழைகின்றேன். கீழ்காணும் சில செய்திகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விழைகின்றேன்.நான் தங்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளேன். தாங்கள் அளித்துள்ள சிறந்த பல தீர்ப்புகளை, மேடைகளில் மேற்கோள் காட்டிப் பேசி வருகின்றேன். இந்த டிசம்பர் பத்தாம் நாள், 1948 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட, வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நாள்.நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளி. இனப்படுகொலைக்கு உள்ளாகி இருக்கின்ற ஈழத்தமிழர்களின்பால் தாங்கள் கொண்டு உள்ள பரிவுக்காக, தமிழர்களாகிய நாங்கள் நன்றிக்கடன்பட்டு உள்ளோம்.1988 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள், லண்டன் நகரில் நடைபெற்ற, ஈழத்தமிழர்கள் குறித்த கருத்து அரங்கில், நான் தங்களுடன் பங்கு ஏற்றேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று, 1996 ஆம் ஆண்டு 15 ஆம் நாள், சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாநில சுயாட்சிக் கருத்து அரங்கில் பங்கு ஏற்று உரையாற்றிச் சிறப்பித்தீர்கள். அன்று தாங்கள் என்னிடம், 1957 ஆம் ஆண்டு கேரள அரசில் தாங்கள் அமைச்சராக இருந்தபோது, கேரளத்துக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள், பால் தருகின்ற தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர வேண்டும் என வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டீர்கள். தங்களுடைய தொலைநோக்குப் பார்வையை எண்ணி நான் மகிழ்ந்தேன்.ஆனால், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலியில்,  அச்சுதானந்தன் அவர்களோடு தாங்கள் கைகோர்த்து நின்ற செய்தியை அறிந்தபோது, நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அறிவும் ஆற்றலும் நிறைந்த பெருந்தகையாகிய தாங்கள், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையின் உண்மை நிலையை ஆராய்ந்து, உணர்ந்து இருக்க வேண்டும்.  மிட்டல் மற்றும்  பிரார் ஆகியோர் தலைமையில், உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுக்கள், முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மையை, ஆய்வுகள் நடத்திச் சோதித்து அறிந்து, பென்னி குக் கட்டிய அந்த அணை, 1979 ஆம் ஆண்டுக்கு முன்பே வலுவாகத்தான் இருக்கின்றது என்பதை உறுதிசெய்து அறிவித்து உள்ளது. அதற்கு மேலும், கடந்த முப்பது ஆண்டுகளாக, தமிழக அரசு, பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு, முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்துகின்ற பணிகளைச் செய்து இருக்கின்றது. எனவே, 7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும், முல்லைப்பெரியாறு அணை அதைத் தாங்கி நிற்கும்.முல்லைப்பெரியாறு வழக்கில், இருதரப்பினரின் வாதங்களையும் கேட்டு அறிந்தபிறகு, 2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரையின்படி, அணையை மேலும் வலுப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு மேற்கொள்வதற்கும் தீர்ப்பு அளித்து உள்ளது. அந்தப் பணிகளை நிறைவேற்ற, கேரள அரசு எவ்வித முட்டுக்கட்டையும் போடக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. அணையைப் பலப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், அதை வல்லுநர்கள் ஆராயவும், அதற்குப்பின்னர், அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பைப் குப்பைக்கூடையில் தூக்கி எறிந்து விட்டு, கேரள அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. அதன்படி, கேரளாவில் உள்ள அணைகளைப் பராமரிக்க மட்டும் அன்றி, வலு இழக்கச் செய்யவும், கேரள நதிநீர் ஆணையத்துக்கு உரிமை உண்டு எனவும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி எனவும் குறிப்பிட்டு உள்ளது. கேரள மக்களின் உயிர்களைப் பலியிட்டாவது தண்ணீரைப் பெற வேண்டும் என்று தமிழகம் ஒருபோதும் கருதியது இல்லை. ஆனால், கேரளத்தில் அக்கறையுள்ள சில அரசியல் சக்திகள், தவறான பொய்ப்  பிரச்சாரத்தை மேற்கொண்டு, கேரள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்; முல்லைப்பெரியாறு அணையை உடைத்து நொறுக்கவும் தூண்டி விட்டு உள்ளனர். ஒரு வாதத்துக்காக அணை உடைவதாக வைத்துக்கொண்டாலும், அதில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீர், 70 டி.எம்.சி கொள்ளளவுத் திறன் கொண்ட இடுக்கி அணைக்குத்தான் நேராகச் செல்லுமே அன்றி, அதனால், கேரள மக்களின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.நாங்கள், கேரள மாநிலத்தோடு நட்பு உறவையே விரும்புகிறோம். ஆனால், தங்களைப் போன்ற மதிப்பிற்கு உரியவர்கள், முறையற்ற ஒரு போராட்டத்தில் பங்கு ஏற்றதை அறிந்து வருந்துகிறோம். ஒரு நீதிபதியாகிய தாங்கள், இரண்டு மாநிலத்துக்கும் பொதுவாகவே நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.2011 டிசம்பர் 10 ஆம் நாள், தமிழக அரசு செய்தித்தாள்களில் வெளியிட்டு உள்ள விவரமான விளக்க அறிக்கையையும், தமிழக அரசு பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர்  ஆர்.வி.எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதி உள்ள விளக்கக் கடிதத்தையும், இத்துடன் தங்களுக்கு இணைத்து அனுப்பி உள்ளேன். வைகோ
கருத்துகள்

அரசியல் என்று வந்துவிட்டால்,நீதி செத்து போகும்.அதற்க்கு இதை விட நல்ல உதாரணம் இல்லை.
By கே சுகவனம்
12/11/2011 6:14:00 PM
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்று விஞ்ஞானிகள் சொன்னால், அது பாதுகாப்பாக இல்லை என்று சொல்லும் இதே வைகோ, கேரளா மக்களால் பாதுகாப்பாக இல்லை என்று சொல்லப்படும் முல்லைபெரியார் அணை பாதுகாப்பாக இருக்கிறது எப்படி சொல்லுகிறார். எல்லாவற்றிற்கும் தலையாட்ட ஏமாளி மக்கள் இருக்கிறார்கள்.
By S SESHASAYEE
12/11/2011 5:12:00 PM
இப்போதுதான் தனித்தமிழ் நாடு உருவாகும் வாய்ப்பை மத்திய, கேரள அரசுகள் உருவாக்கி வருகின்றன. இதை ஏன் வைக்கோ கெடுக்க முயல்கிறார்?
By sbala
12/11/2011 4:48:00 PM
மத்தியும் நாங்களே மாநிலமும் நாங்களே என்று போராடும் காலம் வந்துவிட்டது. அக்கலதுக்கு போராடும் வீர வீரதமிலர்களுக்கு அழைப்பு தாருங்கள். அதில் பங்கேற்கும் முதல் மனிதன் நான். மகழ்ச்சி. சே அலி.
By சே அலி
12/11/2011 4:14:00 PM
முல்லைப் பெரியாற்றுத் தண்ணீரும் வேண்டாம் ...காவிரித் தண்ணீரும் வேண்டாம் ....தனித் தமிழ் நாடு கேட்டுப் பாருங்களேன் அப்பா !.....ஏன் சொரணை கெட்டுப் போயி நேரத்தை வேஸ்ட் பண்ணுறீங்க !!! @ rajasji
By rajasji
12/11/2011 3:30:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக