ஞாயிறு, 11 டிசம்பர், 2011

A film by Pugazhendhi about Eezham : காற்றும் கண்ணீரைப் பூசிக்கொண்டது!


காற்றும் கண்ணீரை பூசிக்கொண்டது!

First Published : 11 Dec 2011 12:17:36 AM IST


வெறும் 26 கிலோ மீட்டர்... அரை மணி நேரத்தில் விசைப் படகில் கடந்து விடக்கூடிய தூரம்தான். நாம் எல்லோரும் சென்று தடுத்திருக்கலாம். போரிட்டு இருக்கலாம். ஆளுக்கொரு ஆயுதம் வழங்கி போரை முன்னெடுத்து சென்றிருக்கலாம். ஆனால் நாமெல்லாம் என்ன செய்தோம்? ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை சிங்கள வெறியர்கள் காட்டுமிராண்டித் தனமாக கொலை செய்தபோது அரசியல்வாதிகளை மட்டுமேதான் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தோம்.  அந்த இன அழிப்பு துரோகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. அரசியல்வாதிகளின் துரோகத்தைவிட மக்களின் மௌனம் கொடுமையானது. என் இனமானத் தோழன் முத்துக்குமார் தன் உடலில் தீயிடும் முன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம். அதை இந்தப் படமும் கேட்கும். நான் இதை வைத்து வியாபாரம் செய்ய வரவில்லை. நீங்களும் பொழுதுபோக்க வர வேண்டாம். குற்ற உணர்வுள்ள ஒவ்வொருவரிடமும் இந்தத் திரைப்படம் அவரது மனசாட்சியிடம் கேள்வி எழுப்பும். அதே நேரத்தில் பதிலும் வைக்கும்' - கூறுகிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.  "காற்றுக்கென்ன வேலி' படத்தின் மூலம் ஈழத்தின் வீரத்தை எடுத்து வைத்தவர், இப்போது சிங்கள வெறியர்களால் ஒரு தமிழ் சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையை "உச்சிதனை முகர்ந்தால்' மூலம் எடுத்து வருகிறார்.  "சினிமாவுக்கான சமரசங்கள் இதில் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஃபிரேமிலும் உள்ள நிஜம் அனைவரின் மனதையும் உலுக்கப் போகிறது. "நீயும்தானே தப்பு செய்தாய்' என உறக்கம் கெடுக்க வைக்கும். அதே நேரத்தில் உள்ளம் குமுற வைக்கும்.  2009-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த சமயம் அது. சிங்கள வெறியர்கள் தமிழர்களை நிர்வாணப்படுத்தி இனவெறி கொடுமையில் முழுமையாக இறங்குகிறார்கள்.  மட்டக்களப்பில் இருந்து 12 மைல் தூரத்தில் இருந்தது அந்தக் கிராமம். ஒரு நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த ராணுவம் ஆண்களைத் தனியாகப் பிரித்து ஒரு கோவிலுக்குள் வைத்து விட்டு, நூற்றுக்கும் மேலான பெண்களை நாசப்படுத்திவிட்டு இருட்டு விலகுவதற்குள் வெளியேறியது. அந்தக் கிராமத்தைச் சுற்றி வலம் வந்த காற்று கூட அன்று தன் மேல் கண்ணீரை பூசிக் கொண்டது.  இதை மட்டக்களப்பை சேர்ந்த மருத்துவர் ஒருவர் ராணுவத்தின் எதிர்ப்பையும் மீறி பதிவு செய்தார். அதைப் படித்து பார்த்தபோதுதான் இந்த உலகத்தில் நானும் "தமிழன்' என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்று தோன்றியது.  ஓர் இனம் முழுமையாகத் தலைகுனிய வேண்டிய வரலாறு இது. இதைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற வலியால் விளைந்ததுதான் இது. அங்கு நடந்த கொடுமையை உணர 13 வயது சிறுமியான ஒய். புனிதவதியின் கண்ணீர் கதையே போதும். அவளைக் கதையின் நாயகியாக்கி ஒட்டு மொத்த ஈழத்த்தின் வலியைச் சொல்லி இருக்கிறேன்' என்றவரிடம், புனிதவதி யார் என்று கேட்டதும் கண்ணீரோடு தொடர்கிறார்.  "எல்லாக் குழந்தைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பார்கள். ஆனால், புனிதவதி மட்டும் சாத்தான்களால் சபிக்கப்பட்டவள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் எதிர்காலத்தைப் பற்றி எத்தனைக் கனவுகள் இருக்கும். அதே கனவுகளுடன்தான் அந்த புனிதவதியும் வளர்ந்தாள். ஆனால் ஒற்றை இரவில் அத்தனையும் நசுக்கப்பட்டு நாசமாக்கப்படுகிறாள்.  அதன் பின் சென்னைக்கு வரும் புனிதவதி ஒரு பேராசிரியரின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். குழந்தை இல்லாத அவர் புனிதவதியைத் தன் குழந்தையாக வளர்க்கிறார். அதன் பின் அவள் வாழ்வு என்ன ஆனது என்பதுதான் கதை.  ஈழத்தின் அமைதியான தருணங்கள், அவளின் மகிழ்ச்சியான வாழ்க்கை என பல விஷயங்களை கதையோடு சேர்த்திருக்கிறேன். சங்கீதா, சார்லஸ் ஆன்டனி என்ற காவல்துறை அதிகாரியாக சீமான், அவரது மனைவியாக லாவண்யா, மருத்துவர்களாக நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் நன்றி மிக்க ஒரு நாயும் படத்தில் நடித்திருக்கிறது.  புனிதவதியாக நடிப்பது யார் என்றதும், "இந்தக் கதைக்கு அவள்தான் நாயகி. நிறைய பேரைத் தேர்வு செய்தும் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போதுதான் நீநிகா வந்தாள். தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு வசனம் எழுதிய அய்யாப்பிள்ளையின் பேத்தி. பார்த்ததும் இவள்தான் இதற்கு நாயகி எனத் தீர்மானித்துவிட்டேன். அப்படி ஒரு நடிப்பு. எதிர்பார்த்த எல்லாவற்றையும் தந்தாள். புனிதவதியாக வாழ்ந்திருக்கிறாள்.  "என் மக்களை உன் மண்ணில் புதைத்தாய்....  உன் தாய் மண்ணை எங்கே புதைப்பாய்....'  என காசி ஆனந்தன் ஐயா வலிமையான வரிகளைத் தர, பாடல்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். தமிழருவி மணியனின் வசனங்கள் இதயத்தின் துடிப்பை அதிகப்படுத்தும்......'  இப்போது புனிதவதி எங்கே என்றதும், இன்னும் ஆவேசமாகி பேசினார் புகழேந்தி.  "படம் பார்த்தவர்களில் பலர் இப்போது புனிதவதி எங்கே இருக்கிறாள் என்றுதான் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவள் இன்னும் இருக்கிறாள். அவளை நிச்சயம் அழைத்து வருவோம். அதற்காகத்தான் இந்தப் படம். சென்னை விமான நிலையத்தில் அவள் வந்து இறங்கும்போது, தமிழன் ஒவ்வொருத்தனும் தலை குனிந்து நிற்க வேண்டும். அந்தச் சிறுமிக்கு நானும் என் தமிழ் இனமும் எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை' என்று கண்ணீருடன் முடித்தார் புகழேந்தி தங்கராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக