தமிழகம்
First Published : 11 Dec 2011 12:31:25 AM IST
Last Updated : 11 Dec 2011 03:03:38 AM IST
கேரளத்துக்குப் பேரணியாகச் சென்ற பொதுமக்களை லோயர்கேம்ப் அருகே தடுத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தென்மண்டல ஐ.ஜி. ராஜ
கம்பம், டிச. 10: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், காவல் துறையின் தடையை மீறி கேரள எல்லையை நோக்கிப் பேரணி நடத்தினர். எல்லையை நோக்கிப் பேரணி: பெரியாறு அணை விவகாரம் தொடர்பான கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தீர்மானத்தை அடுத்து, கூடலூரைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 4000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கூடலூர் பிரதானச் சாலையில் சனிக்கிழமை கூடி, கேரள அரசின் போக்கைக் கண்டித்து கேரள எல்லையை நோக்கிப் பேரணி செல்லத் தொடங்கினர். கூடலூர் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபிநபு, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டான்லி ஆகியோர் தலைமையில் போலீஸôர் பொதுமக்களைத் தடுத்தனர். இதனிடையே கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் இருந்து, 3000 பெண்கள் உள்ளிட்ட 6,000-க்கும் மேற்பட்ட திராட்சை விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், பல்வேறு சமுதாய அமைப்பினர் ஊர்வலமாக கம்பத்துக்குச் சென்றனர். கம்பத்தில், போலீஸôரின் தடையை மீறி வாகனங்களிலும், நடந்தும் கூடலூருக்குச் சென்றனர். பேரணி குறித்தத் தகவல் அறிந்து கம்பம், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து, 5000-க்கும் மேற்பட்டோர் கூடலூருக்குச் சென்றனர். தடையை மீறிய பொதுமக்கள் : கூடலூரில் காவல் துறையினரின் தடையை மீறி மாற்றுப் பாதை வழியாக பொதுமக்கள் தமிழக எல்லையான லோயர்கேம்பை நோக்கி நடந்தும், இரண்டு சக்கர வாகனங்களிலும் செல்லத் தொடங்கியதால், அவர்களைத் தடுக்க போலீஸôர் லோயர்கேம்பிற்கு விரைந்தனர். லோயர்கேம்பிற்கு முன்பு உள்ள மினி மின் உற்பத்தி நிலையம் அருகே பொதுமக்களை போலீஸôர் தடுத்தனர். அப்போது லோயர்கேம்பிற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து பொதுமக்கள் சென்றனர். காவல் துறை சமரசம் : லோயர்கேம்ப் மின்வாரிய ஆய்வு மாளிகை அருகே பொதுமக்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தென்மண்டல ஜ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பொதுமக்களிடம் பேசி சமரசம் செய்தனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள எல்லை அருகே சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பொதுமக்கள் உறுதியளித்தனர். இதையடுத்து லோயர்கேம்பில் இருந்து 200 பேர் கொண்ட குழுக்களாக நடந்து சென்று, தமிழக எல்லை அருகே உள்ள காவல் துறை சோதனைச் சாவடி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக