வியாழன், 6 அக்டோபர், 2011

crimes against children: தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்



குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், பாலியல் கொடுமை குற்றங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு மட்டும், இத்தகைய வழக்குகள், 810 பதிவாகியுள்ளன. இது, அதற்கு முந்தைய, 2009ம் ஆண்டை விட, 27.8 சதவீதம் (634) அதிகம்.

குழந்தைகளுக்கு எதிராக; சிசுக் கொலை, குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல், கொலை என, பல வகையான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.இவற்றை தடுக்க, கடுமையான சட்டங்கள், தண்டனைகள் இருந்தாலும், கள்ளத்தொடர்பு, குடும்பப் பிரச்னைகள் போன்ற சமூக போக்கு மாற்றங்களால், இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

காணாமல் போனவர்கள்:
கடந்த, 2004ல் இருந்து, இந்தாண்டு, ஜூலை 1ம் தேதி வரை, காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை, 1,220. இதில், பெண் குழந்தைகள் 625. இந்தாண்டில், ஜூலை 1ம் தேதி வரை காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, 972. இவர்களில், 250 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களின் கதி என்னவாகியது என்பது, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

காதல், விபசாரத்தால் தொலைந்தவர்கள்: காணாமல் போன பெண் குழந்தைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் காதல், விபசார கும்பலில் சிக்கும் சம்பவங்கள், அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது. 2010ல் மட்டும், காதலில் சிக்கி, 482 குழந்தைகளும், குடும்ப பிரச்னையால், 317 குழந்தைகளும், தேர்வு தோல்வியால், 148 குழந்தைகளும், இதர பிரச்னைகளால், 182 குழந்தைகளும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இவர்களில், 194 பேர், அந்தாண்டு இறுதி வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

சேலத்தில் தான் அதிகம்:
இதில், சேலம் மாவட்டத்தில் அதிகப்படியாக, 108 வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக, வேலூரில், 67ம், சேலம் மாநகரில், 54 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் சிசுக்கொலை வழக்குகள் மிகவும் குறைந்துள்ளது. 2008ல், 20 வழக்குகளும். 2009ல், 9ம், கடந்தாண்டில், 7ம் பதிவாகியுள்ளன. பெரும்பாலும், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிசுக் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் (459) பதிவாகியுள்ளன. அதிகப்படியாக சேலத்தில், 99 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வழக்குகள் உள்ளன.

பாலியல் கொடுமை சம்பவங்கள்:
கடந்த மூன்றாண்டுகளில் குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டு நடந்துள்ள, 203 சம்பவங்களில், அதிகப்படியாக, சென்னை மாநகரில், 22 வழக்குகளும், அடுத்ததாக, சேலத்தில், 19 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் நடந்த குழந்தைகளுக்கெதிரான குற்ற சம்பவங்களில், 1,029 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 613 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 129 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதான வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கள்ளத்தொடர்பு முக்கிய காரணம்:
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தைகள் காணாமல் போகும் போது, அவர்கள் கிடைக்கும் வரை பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடத்தப்படுகிறது. தமிழகத்தில், குழந்தைகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இருந்ததை அடுத்தும், குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுவதைத் தொடர்ந்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சிறு குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட விட்டு கவனக்குறைவாக இருப்பதை, கடத்துபவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.குடும்ப பிரச்னை, கள்ளத்தொடர்பு காரணமாகவும் தற்போது கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஓரளவுக்கு விவரம் அறிந்த குழந்தைகளுக்கு வெளிச்சூழலுக்கு தகுந்த வகையில் நடந்து கொள்வது தொடர்பாகவும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களின் விளைவு பற்றியும் பெற்றோர் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் நடவடிக்கைகளை பெற்றோர் கவனிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மொபைல் போன், இன்டர்நெட் ஆகியவற்றை வழங்குவதற்கு முன்யோசனை வேண்டும். குழந்தைகளுக்கு, அவர்களுக்கான அவசர உதவி போன் எண்ணை தெரிந்திருக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.டூ கடத்தல், கற்பழிப்பு தொடர்ந்து உயர்கிறது டூ காதலில் விழும் பெண் குழந்தைகள் அதிகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக