புதன், 5 அக்டோபர், 2011

வாழ்வு தந்த வாய் வித்தை!


வாழ்வு தந்த வாய்ஜாலம்!

First Published : 02 Oct 2011 12:00:00 AM IST


"முதலீடு இல்லை என்பது மூடத்தனம், கைவிரல்கள் பத்தும் மூலதனம்' என்று  தன்னம்பிக்கை ஏற்படுத்த சொல்வதுண்டு. இதை உணர்ந்ததால்தான், மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், தனக்கிருக்கும் குறையை நினைத்து நொந்துவிடாமல், குரலை மூலதனமாகக் கொண்டு வாழ்வில் வெற்றிநடை போடுகிறார் ஈ.கே.டி.செந்தில்குமார் என்ற "மிமிக்ரி' செந்தில்!சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டாலும், தன்னுடைய குரலின் பக்கபலத்தால் மேடைகளில் பல்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பல குரல்களில் பேசி அசத்தி வருகிறார் இவர்.அண்மையில் தில்லியில் பல்சுவை கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக வந்திருந்த "மிமிக்ரி' செந்திலிடம் பேசினோம். ""திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டைதான் எங்க ஊர். அப்பா பள்ளித் தலைமையாசிரியர். சிறு வயதிலேயே இளம்பிள்ளைவாதத்தால் எனது கால்கள் முடங்கிப் போயின.அதன்பிறகு தீவிர பயிற்சியும், முயற்சியும் செய்ததால் நடக்க ஆரம்பித்தேன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தேன். 1996-ம் ஆண்டில், கல்லூரி ஆண்டு விழாவில் முதல் முறையாக பலகுரலில் பேசினேன். அதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இது எனக்கு ஊக்கம் அளித்ததாகவே உணர்ந்தேன். தொடர்ந்து குரல் பயிற்சியில் ஈடுபட்டு நடிகர்கள், விலங்குகள், பறவைகள், மோட்டார் வாகனங்களின் சப்தம் ஆகியவற்றைப் பேசினேன்.லஷ்மண்-ஸ்ருதி இசைக் குழுவில் 6 ஆண்டுகள் மிமிக்ரி ஆர்டிஸ்டாகப் பணியாற்றினேன். பல குரலில் பேசத் தொடங்கி 1996-ம்ஆண்டிலேயே 105 குரல்களில் பேசினேன். தற்போது 450 குரல்களில் பேசி வருகிறேன்.பழைய நடிகர்களின் குரல்களில் பேசியே இன்னும் பலர் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். தற்காலப் போக்குக்கு ஏற்ப புதுக் குரல்களில், பிரபலமான குரல்களில் பேசும்போது பொதுமக்களிடம் நல்லதொரு வரவேற்பு கிடைக்கிறது.இதுதவிர, ராஜ் டி.வி.யில் 6 ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளேன். மேலும் "டெலி காமெடி', "கொக்கரக்கோ', "தினம், தினம்', "ஆள்பாதி ரீல் பாதி' போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். எம்.ஜி.ஆர்., கலைஞர், அஜித், விஜய் போன்ற குரல்களில் பேசுவதை மக்கள் அதிகம் ரசிக்கின்றனர்.எனது கலைச் சேவையைப் பாராட்டி 2000-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் "கலைமாமணி' விருது கிடைத்தது. தொடர்ந்து பல விருதுகள் பல்வேறு அமைப்புகளால் கிடைத்தன.2010-ம் ஆண்டில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் அரசுத் துறை சார்பில் "சிறந்த பணியாளர் விருது' கிடைத்தது. தொடர்ந்து மூன்று மணிநேரம் பலகுரல் நிகழ்ச்சியை தனி நபராக இருந்து நடத்திய அனுபவமும் உண்டு."வாய்ஜாலம்' என்ற பெயரில் கலைக் குழுவை 2006-ஆம் ஆண்டில் ஆரம்பித்தேன். நகைச்சுவை நடிகர்கள் அல்வா வாசு, போண்டா மணி, பெஞ்சுமன், "மேடை எம்ஜிஆர்' தியாகராஜன் உள்பட 25 பேர் எனது குழுவில் உள்ளனர்.வெளிநாட்டிலும் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். இதுவரை 6,500 மேடைகளில் நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். ஊனத்தையே சவாலாக எடுத்துக்கொண்டு குரலை நம்பிக் களத்தில் இறங்கினேன். அதற்கு இன்றைக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது..''என்றார் அவரின் நிஜக் குரலில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக