ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உன் "மை' யாருக்கு? உண்மைக்கே!

உன் "மை' யாருக்கு? உண்மைக்கே!

First Published : 16 Oct 2011 04:37:25 AM IST


சென்னை, அக்.15: பிரசார சத்தம் சனிக்கிழமையோடு ஓய்ந்தது. வாக்குப்பதிவு திங்கள்கிழமை. இடையில் ஓர் நாள். உங்கள் பொன்னான வாக்கை யாருக்கு என்பதை முடிவு செய்யும் முன் இதைப் படியுங்கள்:சம்பவம் 1: எழும்பூர் பகுதியில் ஒருவர் பிரியாணி கடை வைத்திருந்தார். அந்தப் பகுதி கவுன்சிலருக்குப் பிறந்த நாள். கடைக்காரர் அமைதியாக இருக்காமல் கவுன்சிலருக்கு வாழ்த்துத் தெரிவிக்கச் சென்றார். போகும்போது சும்மா போகக்கூடாதே என்று குறிப்பிட்டத் தொகையைக் கவுன்சிலருக்குக் கொடுத்துள்ளார். கடைக்காரரிடம் கவுன்சிலர் கேட்ட முதல் கேள்வி. "உன் ஒரு நாள் வருமானம் எவ்வளவு?' கடைக்காரர் வெளிப்படையாக வருமானத்தைச் சொல்லியிருக்கிறார். கவுன்சிலர் உடனே போட்ட உத்தரவு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என்று. கடைக்காரர் தர மறுத்தார். கவுன்சிலரும் விடாமல் தொந்தரவு கொடுத்தார். அப்படியொரு கடையை அப்படியொருவர் வைத்திருந்தார் என்கிற சுவடே பின்னர் இல்லாமல் போனது.சம்பவம் 2: ஒரு முட்டுச் சந்தின் கடைசி வீடு. அதைத் தாண்டி யாரும் போகப்போவதில்லை. வீட்டு வாசலில் குடும்பத்தினர் புதிதாக கார் வாங்கி நிறுத்தியிருந்தனர். இதையெல்லாம் கவனித்துச் சொல்வதற்கென்றே பகுதியில் கவுன்சிலர் ஆள்கள் வைத்திருப்பார்களோ என்னவோ, நேராக அந்த வீட்டிற்கு வந்தார் கவுன்சிலர். போக்குவரத்துக்கு தொந்தரவாக இப்படி நிறுத்த என் பகுதியில் அனுமதிக்கவே மாட்டேன் என்று ஒரே கத்தல். வீட்டுக்காரர் என்னென்வோ முயற்சித்துப் பார்த்தார். முடியவில்லை. மாதம் ஒரு தொகை தண்டத்திற்கு அழுதார். இப்படிப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க சில யோசனைகள்:* வாக்களிக்கும் முன்பு, தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஒரு செல்போன் வாங்கும்போதே பல நாள் யோசித்து, பல ஆலோசனைகள் பெற்று வாங்குகிறோம். நமது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க யோசிக்க வேண்டாமா?* மலையைப் பெயர்த்து உங்களுக்குத் தருவேன். ஆகாயத்தைச் சுருட்டித் தருவேன் என்று யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால் அதை அவர்களால் நிறைவேற்ற முடியுமா? நிறைவேற்றித் தருவார்களா? என்று ஆராய்ந்து பார்த்து வாங்களியுங்கள்.* நீங்கள் சார்ந்த கட்சியேகூட தவறான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் அவரைப் புறக்கணியுங்கள். கட்சி மனநிலை என்பது கைவிலங்கு அணிந்திருப்பது போல் இருக்கக்கூடாது. கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுநல அக்கறை உள்ளவரைத் தேர்ந்தெடுங்கள்.* ஏற்கெனவே கவுன்சிலர்களாக உள்ளவர்தான் வேட்பாளராக நிற்கிறார் என்றால் அவர் பணியை முழுமையாய் ஆராய்ந்து பாருங்கள். கடந்த காலங்களில் அவர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிச்சயம் நீங்கள் மறந்திருப்பீர்கள் என்று அதே வாக்குறுதிகளையே மீண்டும் அளித்திருக்கூடும். நீங்கள் விழிப்போடு உள்ளீர்கள் என்பதை வாக்குகளில் தெரியப்படுத்துங்கள். * சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழி. வாக்களிப்பதற்குப் பரிசு தருகிறார்கள் என்றாலே உஷாராகி விடுங்கள். உங்களுக்கு சோளப்பொரியைக் கொடுத்துவிட்டு சோளக்காட்டை எழுதி வாங்கப் பார்க்கின்றனர் என்று புரிந்துகொள்ளுங்கள். * பரீட்சைக்கு கடைசி சில நாள்களில் மட்டும் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்களைப் பார்த்திருப்பீர்கள். அதைப்போல கடைசி சில மாதங்களில் மட்டும் தெருதெருவாக குப்பையை எடுத்து நடித்திருப்பார்கள். அவர்களையும் புறம் தள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக