ஞாயிறு, 16 அக்டோபர், 2011

social service of pa.apndiayarasan: தமிழரசி... வெண்மணி... குயி!

தமிழரசி... வெண்மணி... குயி!

First Published : 16 Oct 2011 12:00:00 AM IST


வீட்டில் செய்யும் அன்றாட வேலைகள் முதல் சாலையில் வாகனம் ஓட்டுவது, அலுவலகத்தில் செய்யும் வேலைகள் வரை எல்லாவற்றையும் அவசரஅவசரமாக முடித்து தலைதெறிக்க ஓடிக் கொண்டிருப்பார்கள் சிலர். பரஸ்பர அன்பு என்பது மனிதர்களுக்கிடையே குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில். டீக்கடையில் காத்திருக்கும் நாய்களுக்கு நாள் தவறாமல் பிஸ்கெட் கொடுத்து நுரை தள்ள வண்டி இழுக்கும் மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும் ஒரு சில மனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு மனதிற்குச் சொந்தக்காரர்தான், ராசா என்கிற பா.பாண்டியராசன். இவரது தோளில் அமர்ந்தபடி ஒரு சிறிய குயில் ஊரை வலம் வருகிறது.  கோவை போத்தனூர் புதுவீதியில் தனது இரண்டு தம்பிகள், தாய், மனைவி, இரு பெண் குழந்தைகள், தம்பியின் குழந்தைகள் என மகிழ்ச்சி பொங்கும் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார், பத்தாம் வகுப்பு வரை படித்த ராசா, அதிக அளவில் படிக்கும் பழக்கமுடையவர், சர்வதேச நடப்பு, தொழில் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், சூழல் பாதுகாப்பு, கலாச்சார சீரழிவு போன்றவற்றுக்காக இளைஞர்களைத் திரட்டி போராடும் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், மிகுந்த தமிழ் பற்றுடையவர்.  ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர் போராட்டங்களுக்கு தனது இரண்டு மகள்கள் தமிழரசி, வெண்மணியை உடன் அழைத்துச் செல்வார் என்பது இவரின் தமிழ் உணர்வுக்கு ஒரு சான்று. தற்போது தனது சகோதரர்கள் ரமேஷ், பூபதியுடன் இணைந்து சிறு லேத் பணிமனை அமைத்து குறுந்தொழில் மூலம் சிலருக்கு பணியும் வழங்கிவருகிறார்.  ராசா, கோவையைச் சேர்ந்த "நெஸ்ட்' என்கிற அமைப்பில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். அழிந்து வரும் சிட்டுக் குருவிகளுக்கு வாழ்விடம் மற்றும் உணவு வழங்கி காப்பதுதான் "நெஸ்ட்' அமைப்பின் பணி. சிட்டுகள் எஞ்சியிருக்கும் இடங்களை கண்டுபிடித்து அந்த இடங்களில் அவை வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் மரப்பெட்டிகளை வைப்பது. சிட்டுக்குருவிகள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, வீடு வீடாகச் சென்று குருவிகளுக்கு குருணை அரிசி, தானியங்கள் மற்றும் தண்ணீரை சிறு பாத்திரத்தில் வைக்க வலியுறுத்துவார். இப்படியாக பல இடங்களில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார்.  ராசாவிடம், ""உங்கள் தோளில் அமர்ந்தபடி ஒரு குயில் ஊரை வலம் வருவதாக கேள்விப்பட்டோம் எங்கே அது?' என்றோம்.  ""ஆமாம். எனது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் அதிக அளவில் குயில்கள் வசித்து வந்தன. இங்குள்ள ஒருவன் மரங்களின் கிளைகளை அடிக்கடி வெட்டி விறகுக்கு அனுப்பி பணம் ஈட்டுவான். மரங்களை வெட்டும் அவனது செயலை எதிர்த்து எங்களுக்குள் தகராறு ஏற்படுவது வழக்கம். மரம் வெட்டியதன் காரணமாக குயில்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டன.  ஒரு கிளை மட்டும் எஞ்சியிருந்தது. அதில் இருந்த காக்கா கூட்டில் சில முட்டைகள் பொறிந்தன. அதில் ஒரு குயில் குஞ்சும் இருந்தது. மரத்தில் இருந்து இரண்டு முறை கீழே விழவே அதற்கு உணவு கொடுத்து மீண்டும் கூட்டில் எடுத்து வைத்தேன். சற்று வளரவே காகங்களுக்கு வித்தியாசம் தெரியவர, அவை குயிலைக் கொத்தி விரட்டின. காகங்களை விரட்டினேன்; அவை விடுவதாக இல்லை. குயிலை விரட்டிக் கொண்டே இருந்தன. காகங்கள் விரட்டும் பட்சத்தில் குயில் எனது வீட்டுக்குள் நுழைந்து என்னருகே வந்துவிடும். பலமுறை வெளியே கொண்டு விட்டாலும். வீட்டிற்குப் பறந்து வந்துவிடும். பிறகு வீட்டில் உள்ள ஒரு புத்தக மாடத்தை காலி செய்து அதில் ஒரு குச்சியை பொருத்தினேன் குயில் அமர்வதற்கு. தினமும் வாழைப்பழம், பொட்டுக்கடலை, ஊறவைத்து அரைத்த தானியங்களை கொடுப்பேன்.  அப்போது அருகில் இருந்த எனது இரு மகள்கள் தமிழரசியும் வெண்மணியும் ""அப்பா புவா தரார் பாரு ஆ...காட்டு...'' என்றனர். அதற்கு "குயிலி' என்று பெயரும் வைத்தனர். அதிலிருந்து "குயிலி' எனது மூன்றாவது மகளாகிவிட்டாள். குயிலி எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு மாதமாகிறது. நான் கடைக்குப் போனால் அவளையும் அழைத்துச் சென்று வாழைப்பழம் வாங்கித் தருவேன். அதனால் நான் லுங்கி கட்டிக் கொண்டு வெளியே இறங்கினால் போதும், குயிலி பறந்து வந்து தோளில் அமர்ந்துகொள்ளும்.  எந்த ஓர் உயிரை நேசித்தாலும் அது நம்மை திருப்பி நேசிக்கும். பறவைகளுக்கு நுண்ணறிவு உண்டு. பறவைகளுடன் சேர்ந்து வாழக் கற்றுக் கொள்வோம்'' என்றார் குயிலியின் அப்பா ராசா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக