First Published : 16 Oct 2011 12:00:00 AM IST
Last Updated :
பொதுவாக மலையேற்றத்தில் வட இந்திய ஹிமாலய மலைத்தொடர்களை அடைவது என்பது அனைவருடைய லட்சியங்களில் ஒன்றாக இருக்கும். அதை நோக்கிப் பயணப்பட (சார்பாஸ் போகலாம் என்று முடிவு எடுத்தேன். ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், பார்வதி பள்ளத்தாக்குகளின் அழகிய மலைத்தொடர்களில் சிகரமாய் அமைந்திருக்கிறது சார்பாஸ்.(சார்-ஏரி/ பாஸ்- கடப்பது) 15,500 அடியில் உறைந்திருக்கும் ஏரியைக் கடப்பதே இதன் உச்சம். இணையதளம் வழியாக நிரந்தர அடையாள அட்டை மற்றும் பயணத்திற்கான முன்பணம் ரூ.3,500 செலுத்தியதுடன் பயணம் ஆரம்பமானது. சென்னையில் இருந்து டில்லி வரை விமானப் பயணம். டில்லி மெட்ரோவின் துணையுடன் டில்லி (ISBT)- குல்லு பேருந்து பயணம். வழியில் புந்தரில் இறங்கி கசோல் செல்லும் பேருந்தில் அமர்ந்து சுமார் 2 மணியளவில் முகாம் வந்து சேர்ந்தேன். டென்ட் முகப்பிலேயே அடையாள அட்டை மற்றும் மருத்துவ தகுதிச் சான்றை சரிபார்த்து, எனக்கான டென்ட் எண்ணை வழங்கினர். இந்த சார்பாஸ் மே 1 முதல் 31 -ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 50 குழுக்களாக, ஒவ்வொரு நாளும் 1 குழுவிற்கு சுமார் 40 பேர் வீதம் அனுப்பப்படுகின்றனர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவெங்கிலும் உள்ள மலையேற்ற ஆர்வலர்கள் மற்றும் வீரர்கள் ஒரே இடத்தில் சங்கமிப்பதுதான். மலைப்பயணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க அருகிலுள்ள கசோல் கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அதி அற்புதமான செüமின் மற்றும் மாமோஸ் உணவு வகைகள் நாவிற்கு இதம் தந்தன. அங்கு மிக ஆச்சரியமான விஷயம் நிறைய இஸ்ரேலியர்களைப் பார்க்க முடிந்தது. இஸ்ரேலின் கட்டாய ராணுவ சேவையை முடித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் கிடைத்த பணத்தைக் கொண்டு காசோலையைத் தேர்ந்தெடுத்து ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கின்றனர். அவர்களுக்காக ஒரு நூலகத்தை அவர்களே ஏற்படுத்தி இருக்கிறார்கள். கடைகள் முழுவதும் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹீப்ரு மொழிகளில் எழுதப்பட்டு இருந்தன. கசோ (BASE CAMP) லிலிருந்து ஆரம்பிக்கும் பயணத்தில் சார்பாஸ்க் கடக்க 6 முகாம்களை அமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 7 நாள் பயணத்தில் 75 கிலோமீட்டர் கட்டாயம் நடக்க வேண்டும். க்கரஹன் (7,700அடி), பத்திரி (9,300அடி), ராத்தாபானி(11,200அடி), நாகரு (12,500அடி), சார்பாஸ்(13,800 அடி), பந்தக் தாட்ச்(8,000 அடி). முதலில் கீழ்நிலை முகாமிலிருந்து கிளம்பும் (SP1) குழு க்கரஹனில் தங்கும் போது அடுத்த (SP2) குழு கிளம்பும். (SP1) குழு அடுத்த பத்திரி முகாமிற்கு செல்லும் போது (SP1) க்கரஹனில் தங்கும். இப்படியான ஒரு வட்ட சுழற்சி முறையில் அனைத்து குழுக்களும் செல்லும். மிகப் பெரிய பிரச்னை என்னவென்றால், திடீர் மழை, நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகள் வந்தால் மொத்த செயல்பாடுமே நின்றுவிடும். இயற்கையின் தயவைப் பொறுத்துதான் பயணத்தின் மகிழ்ச்சி அமையும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் மற்றும் உபதலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள், அனைவரும் பத்திரமாக அடுத்த முகாமிற்குச் சென்று சேர்வதை உறுதி செய்து அட்டவணையில் கையொப்பமிட்டு முகாமை அடைந்ததற்கான சான்றுகளைக் கையோடு கொண்டு வர வேண்டும். குழுவினர் கொண்டு போகும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வீசி எறியாமல் பத்திரமாக ஓர் இடத்தில் புதைக்க வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் "கேம்ப் இன்சார்ஜா'க ஒரு சிறப்பு அதிகாரி இருப்பார். ஒரு வழியாக அனைத்து பயிற்சிகளையும் முடித்துவிட்டு மறுநாள் பயணத்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். மறுநாள் மிகக்கடுமையான மழை. மேலே போடப்பட்டிருந்த டென்ட் அனைத்தையும் மழை அடித்துச் சென்று நிர்கதியாக்கிவிட்டிருந்தது. எங்களுக்கு முன்னே சென்ற குழுவினர் முன்னேற முடியாமல் திரும்ப முடிவெடுத்து விட்டனர். ஆக 1 நாள் விட்டு அடுத்த நாள் கிளம்பினோம். க்கரஹன் மலையேற்றத்திற்கென வாங்கிய பையில் 15 கிலோவிற்கான பொருட்கள் இருந்தன. பியாஸ் ஆற்றின் கரையோரமாகப் பயணம். சில மணி நேரங்களிலேயே ஆலங்கட்டி மழை மண்டையைப் பிளந்தது. நன்றாக நனைந்து, மழையில் திளைத்து, குளிர் உயிர்க் கூடு வரை ஊடுருவியது. ஒருவாறு சமாளித்து க்கரஹன் வந்து சேர்ந்தோம். 9 கி.மீ. தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்தோம். பொதுவாக மரங்களை எரிக்கும் "CAMP FIRE' அனுமதி இல்லை. இரு மாற்றுடைகளில் ஒன்று நனைந்த காரணத்தினால் இரவு சிறப்பு அனுமதியுடன் அருகிலுள்ள கிராமத்திலிருந்து விறகு கடன் வாங்கி "CAMP FIRE' போட்டு நனைந்த உடைகளைக் காய வைத்தோம். sleeping bag உதவியுடன் அன்றிரவைக் கழித்தோம். இதுதான் கடைசி கிராமம். இனி வரும் பயணங்கள் வெறும் மலை மற்றும் காடுகள்தான். பத்திரி முகாம் நிர்வாகி ""அஷாக் கோலே''வின் ஆசீர்வாதத்துடன் பயணம் ஆரம்பமாகியது. ஹிமாலயாவில் மட்டும் காணக்கிடைக்கும் பறவைகளைப் பார்த்தோம். குறிப்பாக, YELLOW-BILLED BLUE MAGPIE. கருப்பு தலையும் நீலம் பாரித்த உடம்பும், பின்பக்கத்தில் இரட்டை வால் அரை அடி நீளத்திற்கு மேலும் கீழுமாய் அசைய அது வட்டமடித்துப் பறப்பதைப் பார்க்க கொடுப்பினை வேண்டும். மலையேற்றம் சுலபமாய் இருந்தது. ஆனால் தூரம் மற்றும் செங்குத்து பாதை உடலை வாட்டி எடுத்துவிட்டது. பத்திரி மிகவும் ரசனையான இடம். முகாமைச் சுற்றி மலைச் சிகரங்கள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால் முகாமின் நீளவாக்கிலும், இடது பக்கத்திலும் பனிமலை. ஒரு சின்ன சிற்றோடை. வலது பக்கம் அடுக்கு மலைத்தொடர். பின்பக்கவாட்டில் அருவி. அதனடியில் உறைந்து போன பனிப்பாளங்கள் என இயற்கையின் வனப்பை நன்றாக ரசித்தோம். ராத்தாபானி இந்த வழி முழுவதும் பனி படர்ந்து இருந்தது. ஒவ்வொரு முகாமிலிருந்தும் ஒரு ஷெர்பா வழிகாட்டி எங்களை அடுத்த இடத்திற்குப் பத்திரமாக சேர்ப்பதற்கு வருவார். மிக செங்குத்தான பயணம். வெயிலினால், வியர்வை வழிந்து, உடைகள் நனைந்து அந்த ஈரத்தினால் மிகவும் குளிராய் உணர்ந்தோம். பனி அதிகமாக இருந்ததால் நிறைய பேர் வழுக்கி விழுந்தனர். இந்தக் கடினமான இடத்தில்கூட ஒரு கடை இருந்தது. மரத்தினடியில் இரு கழிகளால் கட்டிய கடை அவ்வளவே! ஓர் ஆம்லெட் ரூ. 50. இது ஒவ்வொரு முகாமின் உயரத்திற்கேற்ப விலை ஏறும். நாகருவில் இதே ஆம்லெட் 100 ரூபாய். ஆனால் அதுதான் அம்மக்களின் வாழ்வாதாரம் எனும்போது வாங்காமல் இருக்க முடியவில்லை. ஒருவழியாக 9 கி.மீ. தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்தோம். நாகரு 3 மணி நேரப் பயணம். வழிகாட்டி ஷெர்பாவும் கொஞ்சம் நின்று நிதானமாய் வந்ததால் சீக்கிரம் வந்து விட்டோம். மதிய உணவு உண்டு மிகக் கடினமான பாதை நோக்கிப் பயணித்தோம். முழுவதும் பனி. மிக அபாயகரமான வளைவுகள். வழுக்கினால் நேராக 2 முகாம்கள் தள்ளி 5,000 அடி அதல பாதாளத்தில்தான் விழ வேண்டும். அனைவரும் ஓர் ஒத்திசைவுடன் பனியில் நடந்தோம். கடைசி கட்ட பயணம் முழுவதும் பனி. 8 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்தோம். இதுவரை இருந்த முகாமில் பனி பார்த்தோம். ஆனால் இங்கு பனி மட்டுமே பார்க்கிறோம். பச்சை மரங்களே இல்லை. பனி கண்ணாடி அணியாமல் பார்க்க முடியவில்லை. பரவசமாய் இருந்தது. கிட்டத்தட்ட 12,000 அடி உயரத்தில் மழை மேகம் உலவும் உயரத்தையும் தாண்டி வந்து விட்டோம். இங்கு மழை பெய்யாது. ஆனால் பனி பெய்வதும், ஆலங்கட்டி மழை விழுவதும் மிக சாதாரணம். குளிர்ச்சியான தட்பவெப்ப சூழ்நிலையால் தண்ணீர் அதிகம் குடிக்க முடியாது. ஆனால் நடப்பதால் உடலிலுள்ள தண்ணீர் மிக வேகமாகக் குறையும். ஆகையால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிப்பது சிறந்தது. தண்ணீர் போத்தலில் நிரப்பிய குளிர்ந்த பனித்தண்ணீரைச் சூடாக்க ஒரு சிறந்த வழி உள்ளது. "SLEEPING BAG'. தூங்கும்போது அக்குளின் அடியில் வைத்தால் உடல் சூட்டின் காரணமாக தண்ணீர் ஓரளவிற்கு குடிப்பதற்கான பதத்திற்கு வரும். மறுநாள் சார்பாஸ் பயணத்தின் கடினமான கட்டத்திற்கு வந்து விட்டோம். சார்பாஸ் அதிகாலை 3 மணியளவில் இருந்து ஆரம்பித்தது பரபரப்பு. 4 மணிக்குப் பயணம். 1 மணி நேர இடைவெளியில் காலை உணவு 1 டம்ளர் பாயசம் மட்டுமே. மதிய உணவு ஒரு ஃபுருட்டி, 1 பிஸ்கெட் பாக்கெட். டார்ச் வெளிச்சத்துடன் பனி மலை ஏற்றம் ஆரம்பித்தது. இந்த ஆபத்தான பயணத்திற்கு 5-6 ஷெர்பாக்கள் துணை. நாகருவிலிருந்து கிளம்பி சார்பாûஸக் கடக்க இவர்கள் கூட வருவர். சார்பாஸ் கடந்ததும் மலையின் மறுபுறத்திலிருந்து வரும் ஷெர்பாக்கள் எங்களை பிஸ்கேரி முகாமிற்கு அழைத்துச் செல்வர். கடினமான ஒன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் உச்சியை அடைந்தோம். முற்றிலும் பனி - சூன்ய வெளி. சூரிய உதயத்தை வெறுங்கண்களால் பார்க்க முடியவில்லை. புறஊதா கதிர்களின் தாக்கத்தால் மூக்கு கறுத்து தோல் ஈரப்பசையின்றி பொடிப்பொடியாக உதிர்ந்து விடும் போல் இருந்தது. பனியில் நடப்பது மிகவும் கடினம். முதலில் 1 அடிக்குள்ளாகவே கால்கள் பனியில் புதைவதால் முழுவதும் ஈரமாகிவிடும். மேலும், மலையின் உச்சியில் நடக்கும் போது வழுக்கினால் சுமார் 5,000 அடி வரை வழுக்கிக் கீழே சென்று விடுவோம். பாதுகாப்பாக தப்பித்தால்கூட மறுபடியும் அனைவரும் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து சேர எப்படியும் ஒரு நாள் ஆகி விடும். ஏனென்றால், நாம் அவ்வளவு தூரம் சறுக்கிக் கொண்டு சென்றிருப்போம். பனி மலையேற்றத்தில் மிக முக்கியமான கட்டம் சறுக்குதல். சில மலைகளில் ஏறலாம். ஆனால் இறங்க முடியாது. அவ்வளவு செங்குத்தாக இருக்கும். அப்போது சறுக்கிக் கொண்டே 10 முதல் 15 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டி வரும். மிகவும் உற்சாகமாகவும் அதே சமயம் ஆபத்தானதாகவும் அமையும். மலை மீதிருந்து பாறைகளற்ற வழியைக் கண்டுபிடித்து 2 கைகளையும் நீட்டி படுத்து, பின்பக்க பை பனியில் அழுத்துமாறு வைத்து, பின்பக்கம் சோம்பல் முறிப்பது போல் கையை நீட்டி முழக்கி, நம் பின்பக்கத்தை தட்டிக் கொடுத்து ஆரம்பித்தால் சரேலென ஆரம்பிக்கும் பயணம். 3-4 அடிகளுக்குள்ளாகவே வேகம் அதிகரித்து கட்டுப்படுத்தவே முடியாத வேகத்தில் சறுக்கிச் செல்வோம். அப்போது வேகத்தை கொஞ்சம் மட்டுப்படுத்த பின் கைகளின் முட்டியைப் பனியில் அழுத்தினால் வேகம் மட்டுப்படும். இப்போது இடப்புற வலப்புறமாக நகருவதற்கு இரு கால்களையும் அகட்டி காலணியின் அடிப்பாகத்தால் பனி கரைச்சலை ஒரு நிமிண்டு நிமிண்டினால் இடப்பக்கம் வலப்பக்கம் மாறலாம். கொஞ்சம் கொஞ்சமாய் நம் உடல் மரத்து போய் நாமும் பனிக்கட்டியாய் மாறி கீழே வந்து விழுவோம். சறுக்கி முடிந்த பின்னால் நம் சட்டையின் உள்ளும் இரு கால்களின் நடுவில் V வடிவத்தில் பனி அம்பாரமாய் குவிந்து கிடக்கும். அந்தக் கோலத்தைப் பார்த்து ஒரு சிரிப்பு வரும் பாருங்கள். அதுதான் இவ்வளவு கஷ்டத்திற்குமான பலன். நாகுருவிலிருந்து பிஸ்கேரி அடைய 8 மணி நேரத்திற்கும் மேலாகியது. எப்படியும் 15 கி.மீ. கடந்திருப்போம். இதற்குப் பிறகும் பல அபாயகரமான வளைவுகளையும், மலைமுகடுகளையும் தாண்டி மரத்துப்போன கையுடன், வெடவெடத்த உடலுடன், எரியும் கண்களுடன் பிஸ்கேரியில் இரவைக் கழித்தோம். பந்தக் தாட்ச் 1 நாள் அதிகமான காரணத்தினால் ள்ல்3 குழு 2 ஆகப் பிரிந்தது. 21 பேர் பந்தக் விடுத்து நேராக கீழே செல்ல தீர்மானித்தனர். நாங்கள் மட்டும் பந்தக் பயணமானோம். இந்த இடத்திற்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்ற பெயரும் உண்டு. சார்பாஸ் முடித்துவிட்டதால் மிக சோர்வாக ஆரம்பித்தது பயணம். நடுவில் ஒரு ஓடையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதை ரப்பிலிங் முறையில் கயிறு கட்டிக் கடந்து சென்றோம். அருமையான இடம். கிட்டத்தட்ட "ஹாலிடே ஸ்பாட்' போன்ற இடம். அருமையான உணவுடன் இரவைக் கழித்தோம். உடலை சூடுபடுத்துவதற்காக பந்து விளையாட்டில் ஈடுபட்டோம். கடைசிகட்ட பயணத்தின் இரவை நிம்மதியாகக் கழித்தோம். கடைசியாக அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்நிலை முகாமிற்கு வந்து மலையேற்றம் முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டு மறக்கவியலா நினைவுகளுடன் பயணமானேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக