ஞாயிறு, 2 அக்டோபர், 2011

௧௭ +  ௧௬ + ௫ + ௧0  = ௪௨???? கணக்கு உதைக்கிறதே! ஏப்பிரலில் கூட்டப்படும் ௧0 நாள்களில்   வேலைநாள்கள் எத்தனை? செய்தியில் தவறு எங்கே நேர்ந்தது? கல்வித்துறை அறிவிப்பிலா? செய்தி எழுதப்படும் பொழுதா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


பள்ளிகளுக்கு 42 வேலைநாள்கள் அதிகரிப்பு

First Published : 02 Oct 2011 01:42:18 AM IST


சென்னை, அக்.1: தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 10 நாள்களாக நடைபெற்று வந்த காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நிறைவடைந்தது.பள்ளிகளின் வேலை நாள்களை அதிகரிக்கும் வகையில், இந்த ஆண்டு காலாண்டுத் தேர்வு விடுமுறை 5 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 42 வேலை நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.வழக்கமாக, காலாண்டுத் தேர்வு வரை 40 சதவீதப் பாடங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு சமச்சீர் வழக்குகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதுவரை 20 சதவீதப் பாடங்களே முடிக்கப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள பாடங்களை முழுவதுமாக முடிக்கும் வகையில் பள்ளிகளுக்கு வேலைநாள்களை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான திட்டம் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.மாதத்துக்கு இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்துவதன் மூலம் 17 வேலை நாள்களும், பள்ளிகளின் வேலை நேரத்தை 35 நிமிடங்கள் அதிகரிப்பதன் மூலம் 16 வேலை நாள்களும், காலாண்டுத் தேர்வு விடுமுறையைக் குறைப்பதன் மூலம் 5 வேலை நாள்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஏப்ரல் 18-ம் தேதிக்குப் பதில் இந்தக் கல்வியாண்டில் ஏப்ரல் 28-ம் தேதி வரை பள்ளிகள் நடத்தப்படும். இதன்மூலம் 10 வேலை நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 42 வேலை நாள்கள் அதிகரிக்கப்படுகின்றன.மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு முழுவீச்சில் அமல்செய்யப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.60 வேலை நாள்கள் இழப்பு: சமச்சீர் புத்தகங்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி இந்தக் கல்வியாண்டில் பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்படும் என்று புதிதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு அறிவித்தது. சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தமும் செய்யப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.சமச்சீர் கல்வி தொடர்பான நிபுணர் குழு, வழக்குகள் போன்றவற்றால் ஆகஸ்ட் 18 வரை பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 60 வேலை நாள்கள் இழக்கப்பட்டன.ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட பாடங்களைக் கொண்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வு சனிக்கிழமையோடு நிறைவடைந்தது.விடுமுறை குறைப்பு: வேலை நாள்கள் இழப்பை ஈடுகட்டும் வகையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை இந்த ஆண்டு 5 நாள்களாகக் குறைக்கப்பட்டது. வழக்கமாக, காலாண்டுத் தேர்வுக்குப் பிறகு 10 நாள்கள் விடுமுறை விடப்படும்.இந்த ஆண்டு 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமையோடு (செப்.27) தேர்வுகள் நிறைவடைந்தன. 5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை (அக்.3) அந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.9 முதல் 12 வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் சனிக்கிழமை நிறைவடைந்தன. 5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை (அக்.7) அவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.சிறப்பு வகுப்புகள்: பொதுத் தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான பாடங்களை விரைந்து முடிக்கும் வகையில் அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.35 நிமிடங்கள் அதிகரிப்பு: பள்ளி வேலை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது காலாண்டு விடுமுறைக்குப் பிறகு மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது. அதன்படி, காலை நேரத்தில் கூடுதலாக 5 நிமிடமும், பிற்பகல் நேரத்தில் கூடுதலாக 30 நிமிடங்களும் பள்ளிகள் செயல்படும்.

1 கருத்து:

  1. தினமணியில் மறுபதிவு :
    இந்தச் செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்துள்ளது. கல்வித்துறை அறிக்கை சரியில்லை. அவ்வாறிருக்க,
    ௧௭ + ௧௬ + ௫ + ௧0 = ௪௨???? கணக்கு உதைக்கிறதே! ஏப்பிரலில் கூட்டப்படும் ௧0 நாள்களில் வேலைநாள்கள் எத்தனை? செய்தியில் தவறு எங்கே நேர்ந்தது? கல்வித்துறை அறிவிப்பிலா? செய்தி எழுதப்படும் பொழுதா?
    என நான் எழுதிய பதிவை வெளியிடத் தயக்கம் ஏன்? பதிவுகளில் இருந்து ஒதுங்கியிருந்தேன். முழுமையாக ஒதுங்கிவிடலாமோ!
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு