வியாழன், 24 மார்ச், 2011

Libya=Air attack increased: லிபியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரம்!

இலிபியாவிற்கு இறையாண்மை இல்லையா? கொலைகாரச் சிங்களத்தின் இறையாண்மையைக் காப்பதாகக் கூச்சலிட்டவர்கள் இப்பொழுது ஏன் அமைதி காக்கிறார்கள்? கடாஃபியின் மீது தாக்குதல் நடத்துவது நோக்கம் இல்லை என்றால் அவரது மாளிகையின் மீதும் தங்க வாய்ப்புள்ள இடங்கள்மீதும் குண்டுகள் வீசிப்  பொது மக்களையும்  கொல்வது ஏன்? போரில்லா உலகிற்கு முயலாத பன்னாட்டு அவை (ஐ.நா.) இருந்து யாருக்கு என்ன நன்மை? வல்லரசுகளின் கைப்பாவையாகச் செயல்படும் அந்த அமைப்பைக் கலைத்துவிடுவதே நல்லது.வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

லிபியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரம்!


திரிபோலி, மார்ச் 22: திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் திங்கள்கிழமை இரவிலும் தாக்குதல் நடத்தின. இதில் கடாஃபியின் முக்கிய வளாகம், கடற்படைத் தளம் ஆகியவை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.  இதனால்,நாட்டில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  லிபியாவில் கிளர்ச்சியாளர் மீது சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் ராணுவம் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் பொருட்டு அங்கு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அண்மையில் நிறைவேற்றியது.  அதை அமல்படுத்தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் லிபியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான எதிர்ப்பு வசதிகளையும், ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுவதுடன், ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.  ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் தலைநகர் திரிபோலிக்கு அருகே, கடாஃபி விருந்தினர்களைச் சந்திக்கும் இல்லம், அதை ஒட்டியிருந்த ராணுவக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தாக்கப்பட்டன.  திங்கள்கிழமை இரவும் தாக்குதல்கள் தொடர்ந்தன. திரிபோலியில் உள்ள கடாபியின் பாப் அல்-அஸீஸô முதன்மை வளாகம் மீது ஏவுகணை ஒன்று விழுந்ததில் அந்தக் கட்டடம் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கிறது.  திரிபோலிக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள புசேட்டா கடற்படைத் தளமும் சேதமடைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அல் ஜஸீரா தொலைக்காட்சியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.  ஆயிரம் கி.மீ.க்கு விமானங்கள் பறக்கத் தடை: கடாஃபியின் ஆதரவாளர்கள் நிறைந்த சுவாரா, சிர்டே,சேபா, அஜ்டாபியா ஆகிய நகரங்களில் கூட்டுப்படை விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் விமான, ஏவுகணை எதிர்ப்பு வசதிகள் நாசமடைந்தன. இந்தத் தாக்குதல் மூலம் லிபியாவில் சுமார் ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு விமானங்கள் பறக்க முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க படைத் தளபதி ஒருவர் கூறியிருக்கிறார்.  ராணுவத்துக்குப் பின்னடைவு:கடாஃபியின் முக்கியப் படைத்தளங்கள் தாக்குதலில் சேதமடைந்திருப்பதால், கிளர்ச்சியாளர்களின் மையமான பெங்காஸி நகரை நோக்கி ராணுவம் முன்னேறுவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் தாக்குதல் நடத்துவது ராணுவத்துக்கு இயலாத காரியம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது.  இதனிடையே, பழங்குடிகள் அதிகம் வசிக்கும் சேபா நகர் மீது கூட்டுப்படைகள் குண்டுகளை வீசியதில் பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டதாக லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.  திரிபோலிக்கு கிழக்கே 214 கி.மீ. தொலைவிலுள்ள மிஸ்ருதா நகரைக் கைப்பற்றுவதற்கு கடாஃபியின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக அல் ஜஸீரா கூறியிருக்கிறது. ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பே அந்த நகரைக் கைப்பற்றி முகாமிட்டிருப்பதாக கடாஃபி படையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.  கடாஃபி எங்கே? போர் நிலவரம் பற்றி ஜெர்மனியில் இருந்தபடியே பென்டகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்க படைப்பிரிவுத் தளபதி கார்ட்டர் ஹாம், "கடாஃபி, அவரது குடும்பத்தினர் இருக்கும் இடம்பற்றி போதுமான தகவல்கள் இல்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கூட்டுப்படையின் நோக்கமும் அல்ல' என்று தெரிவித்தார்.  அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியது: லிபியாவில் குண்டுவீசிய அமெரிக்காவின் எஃப் - 15 ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விட்டதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எனினும் அதில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் தப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக