வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

SC awards one year rigorous imprisonment to former Kerala minister Balakrishnan: கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருட்டிண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

௨ கோடி ஆதாய இழப்பிற்கே ஓராண்டுச் சிறைத் தண்டனை என்றால் . . . . . ?  ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அதிகாரிகள் அனைவரையும் உள்ளே தள்ளலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு 
ஓராண்டு கடுங்காவல் தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பாலகிருஷ்ண பிள்ளை
புது தில்லி, பிப்.10: கேரள மாநில முன்னாள் மின்துறை அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதின்றம் தீர்ப்பளித்தது.இடமலையார் அணையில் நீர்மின்திட்டப் பணிக்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் அளித்ததால் ரூ. 2 கோடி அளவுக்கு மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தொடர்ந்தார்.இந்த வழக்கில் குற்றமற்றவர் என கே. பாலகிருஷ்ண பிள்ளையை மாநில உயர்நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. சதாசிவம், பி.எஸ். செüகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி  பாலகிருஷ்ண பிள்ளை, மேலும் இருவருக்கு தண்டனை அளித்தனர்.பாலகிருஷ்ண பிள்ளை அமைச்சராயிருந்தபோது ஒப்பந்ததாரர் பெüலோஸýக்கு கூடுதல் தொகைக்கு அனுமதி அளித்துள்ளார். சுரங்கம் அமைப்பது, ஷாப்ட் அமைப்பது உள்ளிட்ட பணிக்கு கூடுதல் தொகைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கின் ஆதாரங்களை சரிவர பரிசீலிக்காமல் மிகப் பெரிய தவறை செய்து விட்டது என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்றும் அச்சுதானந்தன் குறிப்பிட்டிருந்தார்.இதை விசாரித்த நீதிபதிகள், ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் அதிகம் சம்பந்தப்பட்டிருப்பது இந்த நாட்டில் முடிவில்லாமல் தொடர்கிறது. மேலும் இந்த வழக்கு 1982-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஆனால் விசாரணை 1991-ம் ஆண்டுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த வழக்கில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் அளித்ததில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு தொடர்பு இருப்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. மின்வாரியம் என்பது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாகும். அது அரசின் கட்டுப்பாட்டில் வராது. ஆனால் அதில் பாலகிருஷ்ண பிள்ளையின் குறுக்கீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், நாட்டில் எங்கெல்லாம் ஊழல் வழக்குகள் நடைபெறுகின்றனவோ அவற்றை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். காலாண்டுக்கு ஒரு முறை இதுகுறித்து மாநில உயர்நீதிமன்றங்கள் அறிக்கைகளைப் பெற்று எந்த அளவுக்கு வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களை சிறப்பு நீதிமன்றமே விடுவித்திருந்தது.  மற்ற இருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.ஆனால் உயர்நீதிமன்றமோ பாலகிருஷ்ண பிள்ளையுடன் மற்ற இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால் இதை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் மனு தாக்கல் செய்தார்.ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை என்று பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாலகிருஷ்ண பிள்ளையின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி, ஓராண்டு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினர்.தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது: பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் எவரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார். ஊழல் புரிய நினைப்பவர்களுக்கு இது எச்சரிக்கையாக அமையும் என்று அவர் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தத் தீர்ப்புக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டதாக அவர் மேலும் கூறினார்.கேரள மாநிலத்தில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் அச்சுதானந்தன். இந்த வழக்கில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.சரணடைய முடிவு: இதனிடையே இந்த வழக்கின் சம்மன் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் சரணைடய முடிவு செய்துள்ளதாக பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிட்டார். மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுமக்களுக்காக பணியாற்றியதற்கு கிடைத்துள்ள பரிசு என்று விரக்தியுடன் குறிப்பிட்டார் பாலகிருஷ்ண பிள்ளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக