சனி, 12 பிப்ரவரி, 2011

P.M.says :Indian writers should shine international level? இந்திய மொழி எழுத்தாளர்கள பன்னாட்டு அளவில் ஒளிவிட வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

கேரளாவிற்கே சென்று ஞான பீட விருதுவழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் தலைமை அமைச்சர், தமிழாய்வாளர்களுக்கான செம்மொழி விருதுகளை வழங்காதிருப்பது ஏன்? வங்காளத்திற்கும் மலையாளத்திற்கும் செம்மொழித் தகுதி ஏற்கப்பட்டதாயும் விரைவில் அறிவிக்க இருப்பதாயும் அடுத்து அசாமி முதலான பிற மொழிகளுக்கும் அறிவிக்க இருப்பதாகவும் கூறுகின்றனர். செம்மொழிக்காலத்தைக் கி.மு.  என்று இல்லாமல்  ௧௫௦௦ ஆண்டு எனக் குறைத்த சதியால் இவ்வாறு அறிவிக்கப்படுகின்றன. நீதிமன்றத் தடைஇருக்கும் பொழுதே மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதன் காரணம், தமிழுக்கான செம்மொழி ஏற்பினைப் பொறுத்துக் கொள்ள  இயலாமைதான். இத்தகையோர் ஆட்சி நமக்குத் தேவையா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

First Published : 12 Feb 2011 02:22:37 AM IST


திருவனந்தபுரம்,பிப்.11: இந்திய மொழி எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார்.கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை 2007-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கும விழா நடைபெற்றது. விழாவில் பிரபல மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குருப்புக்கு விருதை வழங்கி பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். விழாவில் அவர் மேலும் பேசியது: இந்திய மொழிகளின் இலக்கியங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. எனினும் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது ஏளாளம் உள்ளது. இலக்கியப் படைப்புத் திறனாளிகளை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் நாம் இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும். ஒருகாலத்தில் சர்வதேச அளவில் இந்திய எழுத்தாளர்கள் பிரகாசிப்பது அபூர்வமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல.இந்தியாவில் உள்ள ஆங்கில எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. இதைப்போல, இந்திய மொழிப் படைப்பாளிகளும் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பையும், தளத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இலக்கியப் படைப்பாளிகளின் திறமையை அங்கீகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.இந்திய மொழிப் படைப்புகளின் தனிச்சிறப்பையும், மேன்மையையும் உலகத்தார் அறிய வேண்டுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல ஒரு இந்திய மொழியில் உள்ள படைப்புகளை மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்வது முக்கியம்.இதன் மூலம் ஒரு மொழி படைப்புகளின் சிறப்பை மற்றொரு மொழியினர் அறிந்து கொள்ள இயலும். இந்தப் பணியை சாகித்ய அகாதமி செய்து வருவது போற்றத்தக்கது. இப்போது ஞானபீட விருது பெற்றுள்ள கவிஞர் ஓ.என்.வி. குருப்பு மலையாளத்தில் சிறப்பான படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகளை மராத்தி, வங்க மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும்-அச்சுதானந்தன்: இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய கேரள முதல்வர் அச்சுதானந்தன், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் அவர் பேசியது: தென்னிந்திய மொழிகளில் மலையாளத்துக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் செம்மொழி அந்தஸ்து கோரி ஏற்கெனவே பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் பரிசீலித்து மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.கேரளத்தில் உள்ள மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தியை மாணவர்கள் பயில்வது கட்டாயமாகவுள்ளது. ஆனால் மாநிலத்தின் தாய்மொழியான மலையாளத்தைப் பயில்வது கட்டாயமில்லை. இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார் அச்சுதானந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக