யார் மீது தினமணிக்குச் சினம்? படத்தை மாற்றிப் போடப்பட்டுள்ளதே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப். 10: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புனித ஜார்ஜ கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை முடித்து வைத்து அவர் பேசியது:அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போது மின்வெட்டால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் அதிமுக ஆட்சியை குறை கூறுகிறீர்கள். 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் இதையே சொல்லிக் கொண்டிருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.மின் பற்றாக்குறையை இந்த அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? ரூ. 1 லட்சம் கோடி கடன் வாங்கியது போல மின்சாரத்தையும் கடன் வாங்கி சமாளிக்கப் போகிறீர்களா? மின் உற்பத்தி திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும்? மின் பற்றாக்குறையால் விவசாய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் உற்பத்தி குறைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.விலைவாசி உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தண்டபாணி தெரிவித்தார். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்தால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், உற்பத்தியாகும் இடத்தில் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இடைத் தரகர்கள்தான் பயனடைகின்றனர்.2 ஏக்கர் நிலம் என்ன ஆனது?நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நிலங்களைக் கண்டறிந்து ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்குமாறு அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஒரே குடும்பத்தில் பலருக்கும், ஏற்கெனவே பட்டா பெற்றவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடம்பவனம் என்ற ஹோட்டல் உரிமையாளர், அருகில் உள்ள ரூ. 10 கோடி சந்தை மதிப்புள்ள 12.41 ஏக்கர் நிலத்தை ரூ. 36 லட்சத்துக்கு பட்டா வழங்குமாறு அரசுக்கு கோரியுள்ளார். சந்தை மதிப்பைவிட குறைவாக அடிமாட்டு விலைக்கு நிலங்களை வழங்கக் கூடாது.வரி இல்லாத இடைக்கால நிதிநிலை அறிக்கை என்கிறீர்கள். ஆனால், நிதித் துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோலியப் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரிகளின் மூலமும், வரி வசூலில் காட்டிய அக்கறையின் மூலமும் அரசின் வருவாய் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 9 முறை உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசு விதிக்கும் விற்பனை வரி குறைக்கப்படவில்லை. அதாவது மறைமுகமாக மக்களிடம் வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், வரி இல்லாத நிதிநிலை அறிக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள்: தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடன் வாங்கி கட்டுமானப் பணிகள் போன்ற மூலதனச் செலவுகளை செய்ததாக நிதி அமைச்சர் கூறுகிறார். வரி வருவாயை ஆடம்பரச் செலவுகளுக்கு பயன்படுத்தி கடன் வாங்கி மூலதனச் செலவுகள் செய்வதை எப்படி ஏற்க முடியும்? இலவச கலர் டிவி வழங்க சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இது என்ன சமூக பாதுகாப்புத் திட்டமா?ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனையும் கடன்காரனாக்கி விட்டது இந்த அரசு. கடன் வாங்கியதுதான் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனை. ரூ. 1 லட்சம் கோடி கடன் பற்றி கேட்டால் கடன்தான் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று அனுபவம் வாயந்த நிதி அமைச்சர் அன்பழகன் கூறுகிறார். இது சரியா?டாஸ்மாக் பார்கள் ஆளும்கட்சியினரின் அட்சயப் பாத்திரமாகப் பார்க்கப்படுகிறது. கடை மூடியபிறகும் மதுபானங்கள் அதுவும் போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். குழந்தைகள் கடத்தல் அன்றாட நிகழ்வாகிவிட்டது. காவல்துறை ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக மாறிவிட்டது. மாணவர்களும், படித்த இளைஞர்களும் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர்.இலவச திட்டங்களால் தவறுகளை மறைக்க நினைக்கும் உங்கள் எண்ணம் நிறைவேறாது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். ஜெயலலிதா தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக