Last Updated :

புது தில்லி, ஆக. 12: மாதச் சம்பளதாரர்களின் வருமான வரிச்சுமையைக் குறைக்க புதிய வரி விதிப்பு கையேடு வழி செய்கிறது. இந்தக் கையேட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டனர். புதிய கையேட்டின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும். இப் பரிந்துரைகள் வரி விதிப்பில் எளிமையைக் கையாள உதவும்; தனி நபரும் நிறுவனங்களும் அதிக வரி விதிப்பு விகிதத்திலிருந்து குறைந்த வரி விகிதங்களுக்கு மாற இது பெரிதும் துணை புரியும். ஆண்டு வருவாய் 10 லட்சம் ரூபாய் வரையில் உள்ளவர்கள் இனி தங்களுடைய வருவாயில் 10 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதாவது ஒரு லட்ச ரூபாயை வருமான வரியாகச் செலுத்தினால் போதும். இப்போது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் 10% வருமான வரி விதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் இனி 20% வருமான வரி செலுத்த வேண்டும். அதற்கும் மேல் வருமானம் இருந்தால் அந்த கூடுதல் மதிப்புக்கு 30% என்று வருமான வரி செலுத்த வேண்டும். இப்போது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் 20% வருமான வரி செலுத்துகின்றனர். 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுகிறவர்கள் 30% வரி செலுத்துகின்றனர். அதே சமயம், இப்போது அதிகபட்ச வருமான வரி விலக்கு வரம்பு ரூ.1,60,000 ஆக இருப்பதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று கையேடும் பரிந்துரைக்கிறது. அதே போல சேமிப்புகளுக்கு அளிக்கும் வருமானக் கழிவையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ரூ.3 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்குக் கழிவு தர வேண்டும் என்கிறது. இது சேமிப்புகளுக்கு பெருத்த ஊக்குவிப்பாக அமையும். மாதச் சம்பளம் தவிர தரப்படும் இதர படிகள், மற்றும் பணச் சலுகைகளையும் வருமானத்துடன் சேர்த்தே வருமான வரி விதிப்புக்கு உள்படுத்த வேண்டும் என்று கையேடு கூறுகிறது. கம்பெனி வரி: கம்பெனிகள் மீதான அதிகபட்ச வருமான வரி விதிப்பு 30% ஆக இப்போது இருக்கிறது. இதை 25% ஆகக் குறைக்க வேண்டும் என்று கையேடு தெரிவிக்கிறது. இதை கம்பெனிகள் மகிழ்ச்சியோடு வரவேற்கும் என்பதில் ஐயம் இல்லை. குறைந்தபட்ச மாற்றுவரி: அரசு தரும் பல்வேறு வரிச் சலுகைகள் காரணமாக எந்த வரியையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத தொழில் நிறுவனங்கள் மீது குறைந்தபட்ச மாற்று வரியை விதிக்க, அவற்றின் வருமானத்தைக் கணக்கிட புதிய முறை ஒன்றை கையேடு தெரிவிக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் கம்பெனி வரியாக இப்போது 40% செலுத்துகின்றன. அவற்றையும் 25% ஆகக் குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கிளைகள் ஈட்டும் லாபத்தின் மீது 15% வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் புத்தகக் கணக்கில் காட்டும் லாபத்தின் மீது 15% வரி விதிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அவற்றின் நிகர சொத்து மதிப்பின் மீது 2% குறைந்தபட்ச மாற்று வரியாக விதிக்கலாம் என்று கையேடு பரிந்துரைக்கிறது. வங்கி நிறுவனமாக இருந்தால் அவற்றின் மொத்த சொத்து மதிப்பில் 0.25% ஆண்டுதோறும் வரியாக வசூலிக்கப்பட வேண்டும் என்கிறது பரிந்துரை. பங்கு பரிவர்த்தனை வரியை ரத்து செய்ய வேண்டும், நீண்ட கால மூலதன ஆதாய வரியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கையேடு பரிந்துரைக்கிறது. குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவைக் கொண்டுவர அரசு உத்தேசித்திருப்பதாக பிரணாப் முகர்ஜி அப்போது தெரிவித்தார்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/14/2009 4:36:00 AM
By PG Venkatesan
8/13/2009 11:38:00 AM
By PG Venkatesan
8/13/2009 11:38:00 AM
By T VENKU
8/13/2009 10:15:00 AM
By basker
8/13/2009 8:38:00 AM
By sukumaran
8/13/2009 3:06:00 AM