திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

  • (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும்      கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 35

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்.
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்லாமைகுறள் எண்: 401)
 நிறைந்த நூல்களைக் கற்காமல் அவையில் பேசுதல், வட்டாட்டத்திற்குரிய கட்டம் இன்றி வட்டாடுதலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர்.
மக்களாட்சி நல்லது. ஆனால் படிக்காத மன்பதைக்கு அது நல்லதல்ல. ஏனெனில் அதற்கு எவ்வாறு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாது என்கிறார் தெபாசிசு மிருதா(Debasish Mridha). கல்லாதவர்களை ஆட்சி செய்வது வல்லாண்மையர்க்கு(சர்வாதிகாரிக்கு) எளிது என்கிறார் ஆல்பெர்ட்டோ மங்குவெல்(Alberto Manguel). எனவே எல்லாத் தீங்கிற்கும் கல்லாமையே அடிப்படையாக அமைகிறது. எனவேதான் கல்வி என உடன்பாட்டு முறையில் வலியுறுத்திய திருவள்ளுவர் கல்லாமை  அதிகாரம் மூலமும் கல்வியின் இன்றியமையாமைய வலியுறுத்துகிறார்.
அரங்கின்றி வட்டாடுதல் என்பதற்குச் சதுரங்கப் பலகையின்றி ஆடுவது; வட்டாட்டத்தினை அதற்குரிய கட்டம் இன்றி ஆடுவது என்று விளக்குகின்றனர். உருண்டையை உருட்டி ஆடும் வட்டாட்டம் ஒரு சூதாட்டம்.  பணம் வைக்காமல் இயல்பாகவும் ஆடுவர். சிலர் இப்பொழுது காரம்போர்டு(caram board) எனும் ஆட்டத்தை வட்டாட்டம் என்கின்றனர்.
கோட்டி என்றால் குழு, அவை, கூட்டம் எனப் பொருள்கள். இதைத்தான் சிலர் ‘கோசுடி’ எனக் குறிப்பிட்டு அயற்சொல்லாகக் கருதுகின்றனர்.
ஆடு தளம் இன்றி ஆட முடியாததுபோல், நூலறிவு இன்றி கற்றறிந்தோர் அவையில் பேச முடியாது. எனவே கூட்டத்தில் பேச விரும்புபவர்கள், கூட்டப் பொருள் தொடர்பான நூலறிவு இன்றிப் பேசக் கூடாது. அல்லது அந்தக் கூட்டத்திற்குச் செல்லக் கூடாது.
நூலறிவின்றிப் பேசுவது நம்மைத் தாழ்த்தும்!
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 02.09.2019