(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
அறிவு நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தாலும் அவ்வாறு கற்றவர்களிடம் கேட்டறிக! இது தளர்ச்சியின் பொழுது ஊற்றுநீர்போல் பெருகித் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர்.
தயான்னே சில்லிங்கு(Dianne Schilling) முதலான கல்வியாளர்கள் கேட்டலே உயர்வு தரும் எனக் கூறி அதற்கான பத்து வழிமுறைகளையும் கூறுகின்றனர்.
ஒற்கம் என்றால் தளர்ச்சி. “தளர்ச்சியாவது, வறுமையாலேனும் அறியாமையாலேனும் நோயினாலேனும் இழப்பினாலேனும் நேரும் மனத்தடுமாற்றம்” என்கிறார் தேவநேயப்பாவாணர். ஒருவன்+கு= ஒருவற்கு.(ஒருவர்+கு=ஒருவர்க்கு). தளர்ச்சி வந்தபொழுது கேள்வியறிவு ஊன்றுகோல் போலத் தாங்கி உறுதியான உதவி புரியும் என்கின்றனர் உரையாசிரியர்கள். ஊன்று என்பது னகரம் திரிந்து ஊற்று ஆனதாகவும் குறிப்பிடுகின்றனர். அடுத்த குறளில் “ஊற்றுக்கோல் அற்றே”(415) என ஊன்றுகோலுடன் ஒப்பிட்டுச் சொல்வதால் இங்கும் ஊன்றுகோலாகக் கூறியிருக்க வாய்ப்பில்லை. ஊற்றுநீர் போல அறிவுபெருகத் துணையாகும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுவது இயல்பாக உள்ளது.
நல்லோர் சொற்கள் நமக்கு நற்துணையாக வருவன. எனவே, கேள்விச் செல்வத்தைத் தொடர்ந்து பெற்றால், உடனே நன்மை புலப்படாமல் போகலாம். ஆனால், இடையூறு வரும் பொழுது அதனைச் சமாளிக்க உறுதுணையாக அமையும். ஊருணி நீர் பெருகி உதவுவதுபோல் அறிவூற்று உற்ற துணையாக அமையும். எனவே, படிக்காவிட்டாலும் படித்தவர் சொல்லும் அறிவுக்கருத்துகளைக் கேட்க வேண்டும். கற்றிலன் என்பது ஒன்றுமே கற்காதவரையும் குறிக்கிறது. நமக்குத் தேவையான மெய்ப்பொருள் நூல்களையும் துறையறிவு நூல்களையும் கற்காதவரையும் குறிக்கும்.
படிக்காவிட்டாலும் படித்தவர் மூலம் நூல் கூறும் அறிவுக்கருத்துகளைக் கேட்டுப் பெறுக!
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
செவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.
உணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு உணவியலிறிஞர்கள் இன்றைக்குக் கூறுவது இக்குறள் மூலம் முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிமேலழகர் அவி உணவு என்பது தேவர்க்கு வேள்வித்தீயில் கொடுப்பன என்கிறார். இவர் வழியில் இக்கால உரையாசிரியர்களும் வேள்வித்தீயில் அவிக்கப்படும் உணவு என்கின்றனர். தீயில் இடப்படும் உணவு தூய்மையாகித் தேவர்க்கு உணவு ஆகுமாம். தீயில் இடப்படுவன அழியத்தானே செய்யும்! அழிந்தபின் யாருக்கும் உணவு ஆக முடியாதே! அவ்வாறிருக்க இங்கே தீயில் இடப்படுவது எங்கோ உள்ளதாகக் கூறப்படுபவர்களுக்கு எங்ஙனம் உணவாகும். தீயில் பொருள்களைப் போடும் ஆரிய வேள்விக்கு எதிரானவர் திருவள்ளுவர்(குறள் 259). அவர் அத்தகைய வேள்வி உணவை எங்ஙனம் போற்றிக் கூறியிருப்பார்.
‘அவி’தல் = குறைதல்; அவியுணவு = ‘குறைவான உணவு’ என்று விளக்குகிறார் புலவர் குழந்தை. குறையுணவு உண்டு புலனடக்கி வாழும் ஆன்றோர் போலக் கேள்விச் செலவம் உடையோர் மதிக்கப்பெறுவர் என்கிறார் இவர்.
அவி உணவு = அவிக்கப்பட்ட உணவு = தீய தன்மை கெடுக்கப்பட்ட உணவு என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.
உணவிற்கும் பண்பிற்கும் தொடர்பு உண்டு. குறைந்த அளவு நல்லுணவை உண்டு ஆன்றோர் சிறக்க வாழ்கின்றனர். இத்தகைய ஆன்றோர்களுக்கு ஒப்பானவர்கள், கேள்விச்செல்வத்தை மிகுதியும் உடையவர்கள் எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன் பிசர் (Maryanne Fisher Ph.D.) முதலான அறிவியலறிஞர்கள் பல வகைகளில் தெரிவிக்கின்றனர்.
மணக்குடவர் “பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார்” என விளக்குகிறார். இவ்வாறே கூறும் பரிப்பெருமாள், எல்லாக் காலமும் கேட்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
செவிக்கு ஊட்டமாக அமைவது கேள்வி உணவு. இஃது எல்லாக் காலமும் பெறப்பட வேண்டும். கேள்வி உணவு சரியாக அமையாத சில பொழுது மட்டுமே வயிற்றுக்கு உணவு தரப்பட வேண்டும். எனவே, கால வரம்பின்றி எக்காலமும் உண்பது உடலுக்குக் கேடு. செவிக்குத் தொடர்ச்சியாக உணவு வழங்காமல் இருப்பது உள்ளத்திற்கு கேடு.
செவியுணவின் நிறைவைக் கூறும் திருவள்ளுவர் வயிற்றுக்கான உணவின் அளவையும் உணர்த்துகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், “வயிற்றை நமது அடிமையாக வைத்து நாம் கொடுப்பதை உண்ணச் செய்தல் வேண்டும். நாம் அதன் அடிமையாகி அதனை நிரப்புவதற்காகவே வாழ்ந்து கொண்டிருத்தல் கூடாது. வயிற்றுக்கு அடிமையானோர்க்கு வாழ்வே கிடையாது.” என்கிறார்.
எழுத்து மொழி தோன்றாக் காலத்தில் செவிவழியே செய்திகளும் கருத்துகளும் பரவின. எழுத்து மொழி தோன்றிய பின்னரும் கல்வியில் கேள்வியும் சரி பாதியானது. எழுதுவதைப் படிக்கும் பொழுது இருக்கும் உணர்வை விட உணர்ச்சியாக அவற்றைப் பேசும் பொழுதும் இனிமையாகப் பாடும் பொழுதும் கேட்டால் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. உள்ளம் அவற்றை ஈர்ப்பதற்கான நேரமும் குறைகிறது. எனவே, கேள்விச்செல்வம் சிறந்ததாகத் தொடர்ந்து வேண்டப்படுகிறது.
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
செல்வங்களுள் சிறப்புடையது செவிச்செல்வம். அது எல்லாச் செல்வங்களிலும் தலைமையானது என்கிறார் திருவள்ளுவர்.
கல்வியின் சிறப்பையும் கல்லாமையின் இழிவையும் கூறிய திருவள்ளுவர் அடுத்துக் கேள்வியை வைத்துள்ளார். கேள்வி என்றால் வினா என்று நாம் தவறாகப் பொருள் கொள்கிறோம். “கேள்வி என்றால் வாழ்க்கைக்குப் பயன்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல்” எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார். “செல்வமாவது செவி, மெய், வாய், கண், மூக்கு இவற்றுள் செவியான் விளையும் உணர்வு பெரியது” என்று பரிதியும் “உலகத்துச் செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்த செல்வம் யாதெனின், செவிச்செல்வம்” என்று காலிங்கரும் விளக்குகின்றனர்.
தனம், தானியம், தைரியம், வீரம், வித்தை, கீர்த்தி, விசயம், அரசு என்னும் எட்டு வகைச் செல்வத்திலும் பெரிது கேள்விச்செல்வம் என்கிறார் பரிதி.
பரிமேலழகர், பொருளால் வரும் பிற செல்வங்கள் நிலையற்றவை என்பதாலும் துன்பத்தை விளைவிப்பன என்பதாலும் அவற்றை விடக் கேள்விச்செல்வமே தலையாயது என்று விளக்குகிறார்.
பணிதல்….செல்வர்க்கே செல்வம்(குறள் 125), அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்(குறள் 241), வேண்டாமை அன்ன விழுச்செல்வம்(குறள் 363), கேடில் விழுச்செல்வம் கல்வி(குறள் 400) எனத் திருவள்ளுவரே குறிப்பிடும் செல்வங்களுள் தலையாயது கேள்விச்செல்வம் எனலாம்.
“கற்றலின் கேட்டலே நன்று” என்பது ஏன் வந்தது? இன்றைய அச்சு முறையிலும் இணையப் பயன்பாட்டிலும் ஆளுக்கு ஒரு நூல் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, படிப்பு பரவலாகிறது.ஆனால் ஓலைச்சுவடி முறையில் எழுதி எழுதித்தான் படிகள் எடுக்க இயலும். எனவே, படிப்பதை விடக் கற்றோரிடம் கேட்டு அறிவு பெறும் வழக்கமே மிகுதியாக இருந்துள்ளது. கல்வியில் ஐயம் அகற்றித் தெளிவு பெறவும் ஆழக் கற்கவும் கேள்விச்செல்வம் பெரிதும் துணையாக இருந்துள்ளது. எனவே, கேள்விச்செல்வம் போற்றப்படுகிறது. இக்காலத்திலும் நாமாகப் படித்துப் புரிந்து கொள்வதைவிட நன்கு கற்றவர் சொல்வதைக் கேட்பது எளிதில் புரிகின்றது. கற்றலில் கேட்டலும் சரிபாதியாகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர் சொல்வதை வேறு ஏதோ ஒரு மூலையில் உள்ளவர் அல்லது உலகெங்கும் உள்ளவர்கள் கேட்பதற்கு உரைப்பதிவுகள், காட்சிப்பதிவுகள், ஒலி-ஒளி பரப்புகள் முதலான அறிவியல் வசதிகள் உதவுகின்றன. ஆதலின் இன்றும் கேட்டுப்பெறும் அறிவு முதன்மை இடத்தைப் பெறுகின்றது.
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
சிறந்த நூல்களைக் கற்றவர்களே மக்கள். கற்காத மற்றவர்கள் விலங்கிற்கு ஒப்பாவர் என்கிறார் திருவள்ளுவர்.
“கல்வி கற்காத மனிதர்கள் புதிய விலங்கிற்குச் சமமாவர்” என்று கூறிக் கல்வியை அரசறிவியலறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
அனையர் என்றால் அத்தன்மையர் எனப் பொருள். இலங்கு என்றால் திகழ்தல் எனப் பொருள். நம்மைச் சிறப்புடன் திகழச்செய்யும் நூல்களைக் கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
கற்காதவரை விலங்குடன் நேரடியாகத் திருவள்ளுவர் ஒப்பிடவில்லை. விலங்கிற்கும் மக்களுக்கும் எத்தகைய வேறுபாடு உள்ளதோ அத்தகைய வேறுபாடு கற்றவர்க்கும் கற்காதவர்க்கும் உள்ளது எனக் கூறியுள்ளார் என உரையாசிரியர்கள் பலரும் கூறுகின்றனர். விலங்குகளுக்கு ஐந்தறிவுதான். எனவே, ஆறாம் அறிவைப் பயன்படுத்தி நூல்களைக் கற்கவோ அதனால் சிறக்கவோ விலங்குகளுக்கு முடியாது. கல்வி கற்காத மக்களும் ஆறாம் அறிவைப் பயன்படுத்திச் சிறப்பாக வாழ முடியாது. எனவே, நேரடியாக ஒப்பிட்டுக் கூறுவதால் தவறில்லை. அதே நேரம், “மக்களை நோக்க விலங்கு எவ்வளவு இழிந்ததோ” என்றெல்லாம் விளக்கம் அளிக்கின்றனர். மக்களுக்கு உதவும் விலங்குகளை இழிவாகக் கருத வேண்டா. ஆனால், ஆறாம் அறிவு இல்லாததால் அவை மனிதர்க்கு அடிமையாக இருக்கின்றன. கல்வி பெறாதவர்களும் கற்றவர்க்கு அடிமையாக இருப்பர் என்றும் கருதலாம்.
தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் ஊருக்கும் தன் நாட்டிற்கும் உதவக் கல்வியறிவு தேவை. கல்வியால் திட்டமிட்டு இடர்ப்பாடுகளைக் களைந்தும் நலப்பாடுகளைப் பெற்றும் சிறக்கவும் பிறரையும் நாட்டையும் சிறப்பிக்கவும் செய்ய முடியும். கல்வியறிவு பெறாதவர் விலங்குபோல் திரிந்து வீணில் காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். கல்வி கற்காதவர்கள் பட்டறிவால் சிறக்கவில்லையா என்கின்றனர் சிலர். கல்விக்கூடம் செல்லும் வாய்ப்பை இழந்தாலும் பின்னர் அவர்களும் நூலறிவைப் பெற்றுத்தான் சிறக்கின்றனர். நூலறிவு இல்லையேல் அவர்கள் பட்டறிவு வீணாகும்.
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
செல்வம், செல்வாக்குடன் மேலான நிலையில் பிறந்திருந்தாலும் கல்வியறிவில்லாதவர் அவர்களைவிடக் கீழான நிலையில் பிறந்த கற்றவர்க்கு ஈடாகமாட்டார் என்கிறார் திருவள்ளுவர்.
“அனைத்திலர் பாடு” என்றால் “அவ்வளவு பெருமை இல்லாதவர்” என்று பொருள்.
பதவி, செல்வம் முதலியவற்றால் வரும் உயர்வு தாழ்வு என்பன நிலையானவை அல்ல. காலச்சக்கரம் மாறுவதுபோல் இவையும் மாறும் தன்மையன. மாறும் இவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வைக் கற்பித்துக் கொள்வது தவறு எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். கல்வியால் பெறும் சிறப்பு நிலையானது. கல்வியின்மையால் பெறும் தாழ்ச்சி அதற்குரியவர் கல்வியைப் பெறும் வரை மாறாமல் இருக்கும். ஆள்வோரும் அறிஞரை மதிப்பர். எனவேதான், மன்பதையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் பிரிவுகளைப் புறந்தள்ளிக் கல்வியால் சிறந்த கற்றவர் பிரிவில் இருக்க வேண்டும் என்கிறார்.
“மேலிருந்தும்” எனத் தொடங்கும் திருக்குறளில்(973) மேல், கீழ் என்பனவற்றைச் சாதியாகக் குறிப்பிடாமல் மேல்நிலை, கீழ் நிலை என்றுதான் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுபோல்தான் இங்கும் கருத வேண்டும்.
மேல்சாதி, கீழ்ச்சாதி என்னும் பாகுபாட்டு அடிப்படையில் கற்றவரே மேல்சாதி என உணர்த்தத் திருவள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார் எனப் பெரும்பான்மையர் கூறுகின்றனர். பழந்தமிழ்நாட்டில் சாதிப்பகுப்பு இல்லை. எனினும் திருவள்ளுவர் காலம் சாதிக்கருத்து திணிக்கத் தொடங்கிய காலமாக இருக்கலாம். எனவே, உயர்வு தாழ்வு என்பது சாதி அடிப்படையில் இல்லை. கல்வியின் அடிப்படையிலானது என்பதை வலியுறுத்தவே கற்றவர் உயர்ந்தோர், கல்லாதவர் தாழ்ந்தோர் எனக் கூறுவதற்காக இத்திருக்குறளை எழுதியுள்ளார் என்று கருதி இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.
பின் வந்த ஒளவையார், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்று கூறி, “இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்” என்றார். ஆனால், திருவள்ளுவர் கற்றார் உயர்ந்தோர், மற்றார் தாழ்ந்தோர் என்கிறார். எனவே, கல்லாமை இல்லாமல் ஆகும் வண்ணம் அரசும் மக்களும் செயல்படவேண்டும்.
பிறப்பில் மேல், கீழ் என்று கற்பிக்காதே! மேலான சிறப்பைத் தரும் கல்வியில் சிறந்திடு!