திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

  • (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும்      கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

34

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்விகுறள் எண்:400)
ஒருவருக்குக் கேடற்ற சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியல்லாத பிற செல்வமல்ல  என்கிறார் திருவள்ளுவர்.
கல்வியே மிகு உயர் செல்வம்(highest wealth) என்கிறார் இங்கிலாந்து அரசியலறிஞர் ஒருவர்.
கல்விக்குப் பகைவராலோ, கொள்ளைக்காரர்களாலோ, வெள்ளத்தாலோ இயற்கைப் பேரிடர்களாலோ பகைகொண்ட உறவினராலோ ஆட்சியாளராலோ தீங்கு நேராது. எனவேதான் திருவள்ளுவர் கேடில் விழுச்செல்வம் என்கிறார்.
பிற பொருள்கள், இவற்றில் ஏதேனும் ஒன்றாலோ பலவாலோ கேட்டிற்கு ஆளாகிக் குறையும் அல்லது அழியும். பிற பொருள்கள் கொடுக்கக் கொடுக்கக் குறையும். கல்வி கொடுக்கக் கொடுக்கக் குறையாது. மாறாக வளரும். பிற செல்வங்களைப் பாதுகாக்கவும் முயற்சியும் செல்வமும் தேவை. கல்வியைக் கொள்வார் யாருமில்லாததால் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. எனவே, பாதுகாப்பு முயற்சிகளுக்கான செலவும் இல்லை.
பொருட் செல்வம் இருந்தாலும் அவற்றைப் பெருக்கவும் திட்டங்களைச் செயற்படுத்தவும் ஆட்சியைத் திறம்பட நடத்தவும் உள்நாட்டு வெளிநாட்டுப் பகைகளில் இருந்து மக்களைக் காக்கவும் நல்லாட்சி நடத்தவும் கல்வி தேவை. அதுபோல்  அமைப்பாக இருந்தாலும் நிறுவனமாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் கல்விச்செல்வமே தேவை.
கல்வியைச் செல்வமாகக் கருதி அடைபவர்களே உண்மையான செல்வர்கள்.
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 01.09.2019