திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 27

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்வி, குறள் எண்:393)
கற்றவரே கண்ணுடையவர் ஆவர். கல்லாதவர் முகத்தில் இரு புண்களே உள்ளன என்கிறார் திருவள்ளுவர்.
கடந்த நூற்றாண்டில் இரெய்மண்டு கார்பீல்டு கெட்டெல்(Raymond Garfield Gettell) என்னும் அரசறிவியலாளர், அரசியல் அறிவியல் என்பது கடந்த காலத்தை வரலாற்று முறையிலும், நிகழ் காலத்தினைப் பகுப்பாய்வு முறையிலும் எதிர்காலத்தினை நன்னெறி முறையிலும் படிக்க உதவும் ஒரு பாடம் எனக் கூறிக் கல்வியை வலியுறுத்துகிறார். திருவள்ளுவரும் கல்வியைக் கண்ணுடன் ஒப்பிட்டுக் கல்வியை வலியுறுத்துகிறார்.
கல்வி அனைவருக்குமான அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்டாலும் கல்வி கற்பிக்கப்படாதவர்கள் பலர் உள்ளனர். அவ்வாறில்லாமல் கட்டாயமாக அனைவருக்கும் கல்வி தேவை என்பதை வலியுறுத்தவே திருவள்ளுவர் கல்வியைக் கண்களுடன் ஒப்பிடுகிறார் என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார்.
கண்கள் இலலாதவர்களும் கல்வி கற்று அக்கல்வியால் உலகத்தைக் காண்கின்றனர். கல்லாதவர்களோ கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கின்றனர். படிக்காதவன் எண்ணையோ எழுத்தையோ பார்த்தால் என்ன புரிந்து கொள்ள முடியும்? நூற்செய்திகளை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? அப்படியானால் உலகத்தை உண்மையில் பார்க்க உதவும் கல்வியில்லாதவர்களின் கண்கள் புண்கள் என்று சொல்வது சரிதானே!
அரசை நடத்துவதற்கும் கட்சி முதலான அமைப்புகளை நடத்துவதற்கும் குடும்பத்தை நடத்துவதற்கும், தன்னையே வளர்த்துக் கொள்ளவும் கல்வி இன்றியமையாததாகிறது. ஓர் இடத்திற்குச் செல்லவும் விரும்பிய பொருளை வாங்கவும் பொருள்களின் பயன்பாடுகளை அறியவும்  என எல்லா நேர்வுகளிலும் கல்வியறிவில்லாதவர்களால் தனித்து இயங்க முடியாது. எனவே, பிற நாட்டார் கல்வியைக் காற்றுக்கும் உணவுக்கும் ஒப்பிட்டதைவிடக் கண்களுக்கு ஒப்பிட்ட திருவள்ளுவரின் ஒப்புமை சிறந்ததாக உள்ளது.
 கண் என்றால் பார்வை தெளிவாக இருக்க வேண்டுமல்லவா? எனவே, ஆழ்ந்த கல்வியைப் பெற்றுத் தெளிவான உலகப்பார்வையைக் கொள்வோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 24.08.2019