திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 22

செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்:389)
 குறைகூறப்படும் கசப்பான சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு உடைய ஆட்சியாளன் குடையின் கீழ் உலகம் தங்கும் என்கிறார் திருவள்ளுவர்.
அரசறிவியலாளர்கள், ஆட்சியாளர் மக்கள் குறைகளைப் பொறுமையுடன் கேட்க வேண்டும் என்கின்றனர். அதையே திருவள்ளுவர் நயத்துடன் தெரிவிக்கிறார்.
கைப்ப என்றால் கசக்கும் படியாக, அஃதாவது வெறுக்கும்படியாக.
சொல் என்பது பிறர் குறைகளையும் ஆட்சிக் குறைபாடுகளையும்பற்றிப் பேசுதல்
அனைவருக்குமே பிறர் அறிவுரை கசப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆட்சித்தலைவர் தம் நாட்டு மக்களின் குறைகளைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அதுபோல், அமைச்சர் முதலானோர் தெரிவிக்கும் அறிவுரைகளையும் இடித்துரைக்கும் சொற்களையும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படுவன வெறுப்பு ஏற்படுத்தும்படி இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால்தான் தெரிவிக்கப்படும் குறைகளை அகற்றி நல்லாட்சி தர இயலும்.
‘கவிகை’ என்றால் குடை. ஆட்சிக் குடையைக் குறிக்கிறது. செங்கோல் ஆட்சியில் மக்கள் வெம்மை – துன்பம், இன்றி வாழ்வர் என்பதால் ஆட்சியை வெண்கொற்றக்குடை எனச் சொல்வது தமிழர் மரபு.
குடை சூரியனின் கடும் வெம்மையிலிருந்து காத்து நிழல் தருவதுபோல், ஆட்சியாளரும் மக்களைத் துன்பத்திலிருந்து காத்து இன்ப நிழல் வழங்க வேண்டும் என்பது கருத்து.
பிறர் கூறும் இடித்துரைகளையும் குறையுரைகளையும் ஓர்ந்துணர்ந்து பின் செறுப்போரைச் செறுத்தும் பொறுப்போரைப் பொறுத்தும் ஒழுகுதல் வேண்டும் எனக் காலிங்கர் விளக்குகிறார்.
பொது நன்மையின் பொருட்டும் துன்பம் தரும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பிறர் கூறுவன கடுமையாக இருந்தாலும் வெறுக்கும் படி இருந்தாலும் அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் நற்பண்பாளனுக்கு உலகம் கட்டுப்படும்.
குறையில்லா ஆட்சியை நடத்த வேண்டும் என்றால் பிறர் கூறும் குறைகளைப்பொறுமையுடன் கேட்கும் பண்பு வேண்டும். கேட்டபின்பு நடுநிலைமையுடன் ஆராய்ந்து, தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள் புரிந்தவர்களைத் தண்டித்தும் மன்னிக்கப்பட வேண்டியவர்களை மன்னித்தும் களையப்பட வேண்டிய குறைகளைக் களைந்தும் குறை கூறியோர் மகிழும்படிச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இதுவே ஆட்சி முறைமைக்குத் திருவள்ளுவர் உணர்த்தும் செய்தி. மன்னராட்சி என்றில்லாமல் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வோருக்கு உரியது. பணிமேலாண்மையில் அமைப்பு, நிறுவனம் முதலானவற்றை நடத்தும் தலைவர்க்கும் இது பொருந்தும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 19.08.2019