திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

26

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்வி, குறள் எண்:392)
 எண்ணும் எழுத்தும் வாழும் உயிர்க்குக் கண்கள் என்கிறார் திருவள்ளுவர்.
அரசியல் அறிவியல் என்பது அரசாங்கம், அரசியல் பொருளாதாரம் என்பவற்றை வளம், உயிரியல் வாழ்க்கை, இயற்கணிதம், வரைகணிதம், விண்வெளி போன்றவற்றோடு தொடர்புபடுத்திப் படிப்பதாகும் என 19ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த அரசறிவியலறிஞர் இராபர்ட்டு சீலேய்(Robert Seeley)  கல்விக்கு முதன்மை அளிக்கிறார். திருவள்ளுவரும் பல்துறை அறிவியல், கலைகளுக்கான கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்காக எண்ணும் எழுத்தும் கண்ணென வலியுறுத்துகிறார்.
பரிமேலழகர், “எண் என்பது கணிதம்.”  என்கிறார்.
பரிதி,  “எண்ணாகிய சோதிடமும் எழுத்து முதலாகிய அஞ்சு இலட்சணமும்” என்கிறார்.
பேரா.முனைவர் சி.இலக்குவனார்,  “ கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். …… எண் என்றால் அறிவியல் , எழுத்து என்றால் கலையியல் “என்கிறார்.
எண்களையும் எழுத்துகளையும் சிதைத்தாலும் அழித்தாலும் மொழி அழியும்;  அதனால் இனமும் அழியும். இன்றைய இந்தியப் பரப்பு முழுவதும் ஒரு காலத்தில் இருந்த தமிழ் தன் பரப்பளவில் பெரிதும் அழிவைச் சந்தித்துள்ளது. திருவள்ளுவர் தம் காலத்தில் இத்தகைய அழிவைப் பார்த்து, எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கருதிக் காக்க வேண்டும் என்கிறார்.
எனவே எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மொழிக்கொலைகளில் சிலர் ஈடுபடுவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

 – இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 23.08.2019