வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

ஈழக்கதிர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!



ஈழக்கதிர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!
 உற்றுழி உதவும் பண்பும்  பிறர்க்கிடர் வரின் போக்கும் உள்ளமும்  கொண்டு பிறர்போற்ற வாழ்ந்து பெற்றோர்க்கும் மற்றவர்க்கும் மகிழ்வை அளிக்கும் பொறி.தி.ஈழக்கதிர்  நலமும் வளமும் நிறைந்து உயர்வும் புகழும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறோம்.
தோன்றிற் புகழொடு தோன்றுக என்னும் வள்ளுவத்திற்கேற்ப எச்செயலாயினும் புகழ்பெறும் வகையில் செயல்பட்டுவருவது பாராட்டிற்குரியது. தன்னைத் தலைவன் என்று சொல்லிக் கொள்ளா விட்டாலும் பொதுநலப்பணிகளில் பிறரை அணைத்துச் செல்லும்போக்கால் நண்பர்கள் உடன் இணைந்து பணியாற்றித் தலைமைப் பண்பை உடையவனாகத் திகழ்கிறான். இருப்பினும் அடக்கமும்  அமைதியும் கொண்டு செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது. பன்னாட்டு நிறுவனங்களில்   பொங்கல்விழா, சித்திரைக்கலைவிழா, வேட்டி நாள் முதலியன  கொண்டாடித் தமிழ் உணர்வைப் பரப்பி வருவது பிறருக்கும் வழிகாட்டியாய் அமைகின்றது.
  இயல்பாக ஆதரவற்றோர்க்கு உதவுவதுபோல் வெள்ளம் பெருக்கெடுத்தபோது உதவியதும் பிறரை உதவச்செய்ததும் நினைவில் நிழலாடுகின்றன.

கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு நாளில் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திர நகரிலிருந்து சென்னை  வரும் வழியில் 16 மணி நேரம் நடுத்தெருவில் பேருந்தில் குடியிருந்த சூழல் வந்தபோதும் கலங்காமலும் பிறருக்கு  ஊக்கமூட்டும் வகையிலும் இருந்துள்ளான்.
  பெரு வெள்ளமாக இருந்த போதும் நண்பரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு உண்பொருள் வாங்கி வந்ததும்,  மூடியிருந்த பொன்னி சிறப்பங்காடி உரிமையாளர் அருகே உள்ளதை அறிந்து அவரைச் சந்தித்துக் கடையைத் திறக்கச்செய்து உண்பொருள்களை வாங்கித்தந்ததும் கலங்கா மனமுடையவனாகக் காட்டியது. (அவ்வாறான சூழலில் பொருள்களை விற்றவர்கள் அடக்கவிலைக்கும் அதனை விடக் குறைவான விலைக்கும்தந்து உயர்ந்து நின்றனர்.இது குறித்துஎழுதிய கட்டுரை அப்போதைய மின்வெட்டால் வரைவு நிலையிலேயே இருந்து விட்டது.)

வீட்டிற்கு வந்த பின்னரும் ஆதரவற்றோர் இல்லப் பொறுப்பாளர்கள் அழைத்ததும் உணவுடன் சென்று உதவியுள்ளான். ஒரு பொறுப்பாளர் பிள்ளைகள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டதாயும் அத்தனைபேருக்கும் சமைத்துப்போடும் வசதி இல்லை என்றதும் 3 நாளுக்கேனும் உணவு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று வேண்டியதும் உடனே  ஓடோடிச் சென்று உதவினான். இதனைப் பார்த்த இவன் சித்தப்பா நல்லபெருமாள்  இரு  வேளை உணவு வழங்கினார். இப்படி பிறரையும் உதவத் தூண்டும் வகையில் செயல்படும் பொறி தி. ஈழக்கதிர் நூறாண்டு வாழ்ந்து மன்பதை பயனுறச் செயல்பட வேண்டும்.
விரும்பிய உணவாயினும் மருத்துவர் ஒவ்வாது எனக் கூறின் சுவைத்துக்கூடப் பார்க்க மாட்டான். நாவைக்கட்டுப்படுத்துபவன் நானிலத்தைக் கட்டுப்படுத்துவான் என்பதால் கட்டுப்பாடு, கண்ணியம், கடமை கொண்ட இவன் மேன்மேலும் உயர்வான். 
நண்பர்களிடையே தோழமைப்பாலம் அமைப்பதில் பொறியாளராகவும் ஆதரவற்ற சிறாரின் தமையனாகவும் ஆதரவற்ற பெரியோர்களின் மகனாகவும் பிறர் ஐயம் கேட்கும் பொழுது விளக்குகையில் ஆசிரியராகவும் திட்டச்செயற்பாடுகளில் விளக்கும்பொழுது வழிகாட்டியாகவும் தமிழ்இனப் பற்றாளராகவும்  நன் மகனாகவும் திகழும் பொறி தி. ஈழக்கதிர் தமிழ்போல் சிறந்து வாழ வாழ்த்துகிறோம்.

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் வகையில் தொண்டாற்றும்
ஈழக்கதிர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!

அன்புடன் அப்பா இலக்குவனார் திருவள்ளுவன்
அம்மா அன்புச்செல்வி
அக்கா தி.ஈழமலர்
அத்தான் வா.பாலாசி



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக