தேசிய வாக்காளர் நாள் விழா, தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாட்டத்தில் 100 விழுக்காடு வாக்களிக்க ஆவன செய்வதே தேசிய வாக்காளர் நாளின் நோக்கம் எனத் தேவகோட்டை சார் ஆட்சியர் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் விழாவில் கலந்துகொண்டோரை வரவேற்றார். தேவகோட்டை சார் ஆட்சியர் மரு.ஆல்பி சான் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி மேலாளர் பிச்சை மைதீன், வருவாய் ஆய்வாளர் இரெங்கராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சார் ஆட்சியர் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விடையளித்துப் பேசுகையில், “அனைவரும் வாக்களிக்க ஆவன செய்வதே அரசின் நோக்கமாகும். 100 விழுக்காடு வாக்களிக்க அனைவரும் முயல வேண்டும். அதற்காகத்தான் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி நான் உங்களைப் போன்று 4 ஆம் வகுப்பு படிக்கையில் போட்டியில் வெற்றி பெற்றதற்காக உதவி ஆட்சியர் கையால் பரிசு வாங்கினேன். அது எனது பள்ளி வாழ்கையில் மறக்க இயலாத நிகழ்வு. இ.ஆ.ப.(I.AS.) ஆவதற்கு இளம் அகவையில் குறிக்கோள் வைத்து கொள்ள வேண்டும். நான் இ.ஆ.ப.அதிகாரி ஆவதற்கு எனது தம்பியும், எனது அம்மாவும் மிகுந்த உதவி செய்தனர். பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு ஆசிரியை போட்டிகளில் வெற்றி பெற்றஉடன் பாராட்டு தெரிவிப்பார். அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். இந்தப் பணியின் மூலம் மக்களுக்குப் பணி செய்வதே எனது இலட்சியம் ஆகும்.” என்று தெரிவித்தார்.
விழாவில் மூத்தக் குடிமகன் இலெட்சுமணன் என்பவர் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டார்.
அரசு உத்தரவின்படி ‘வாக்களிப்பது எனது உரிமை, எனது கடமை’, ‘சனநாயகத்தின் முதன்மையான பங்கு வாக்காளர்களே’ என்கிற தலைப்புகளில் வண்ணக்கோலப்போட்டி,கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி,பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி ஆசிரியைகள் முத்து மீனாள், வாசுகி, நகராட்சி அலுவலர் சண்முகவேல் ஆகியோர் வண்ணக்கோலப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்து எடுத்தனர்.
வண்ணக்கோலப் போட்டியில் முதல் பரிசை சௌமியாயும், இரண்டாம் பரிசைத் தனமும், மூன்றாம் பரிசை முனீசுவரனும் பெற்றனர். வாக்காளர் நாள் தொடர்பாக 1 ஆம் வகுப்பு திவ்யசிரீ, இரண்டாம் வகுப்பு அம்மு சிரீ, உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக 4 ஆம் வகுப்பு ஐயப்பன், நகர்ப்புற அமைப்பு தொடர்பாக 5 ஆம் வகுப்பு கார்த்திகேயன், ‘மக்கள் கடமை’ என்கிற தலைப்பில் 6 ஆம் வகுப்பு இரஞ்சித்து, ‘குடியாட்சி பெருமை’ என்கிற தலைப்பில் 7 ஆம் வகுப்பு தனலெட்சுமி, ‘மாணவரும் ,சமூகத்தொண்டும்’ என்கிற தலைப்பில் 8 ஆம் வகுப்பு ஆகாசு குமார் ஆகியோர் பேசினார்கள்.
‘வாக்களிப்பது நமது கடமை’ என்கிற தலைப்பில் பரமேசுவரி, செனிபர், நித்ய கல்யாணி, சீவா, இராசேசு, இராசேசுவரி ஆகியோர் நாடகம் நடத்திக் காண்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தேவகோட்டை சார் ஆட்சியர் தேர்தல் வாக்களர் உறுதிமொழி கூற அனைத்து மாணவ-மாணவியரும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் திரளான பெற்றோரும் கலந்துகொண்டனர். நிறைவாக தேவகோட்டை நகராட்சித் தேர்தல் பிரிவு எழுத்தர் இராமகிருட்டிணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து லெட்சுமி செய்திருந்தார்.
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
இலெ. சொக்கலிங்கம்jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக