கருநாடகத்தில் வேலைவாய்ப்பில்
கன்னடர்களுக்கு முன்னுரிமை
வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு
முன்னுரிமை அளிக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கருநாடகத்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேசுவர(நாயக்கு) அறிவுறுத்தினார்.
இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் 21.01.2016 அன்று கூறியதாவது:
கருநாடகத்தில் உள்ள தனியார்
நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க
வேண்டும் என்று சரோசினி மகிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு
சில நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன.
பெரும்பாலான நிறுவனங்களும்,
தொழிலாலைகளும் இதைப் பின்பற்றாமல் புறக்கணித்து வருகின்றன. இது அரசின்
பார்வைக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் போக்கை மாற்றிக்
கொண்டு, வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
சரோசினி மகிசி அறிக்கையை
நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் சித்தராமையா
ஆணையிட்டுள்ளார். இது குறித்துத் தனியாரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
அறிக்கை வந்தவுடன், தொழில்துறை அமைச்சர் ஆர்.வி.தேசுபாண்டேயுடன் ஆலோசனை
நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்
பணிகள் கன்னடர்களுக்கு வழங்கப்படுகின்றன. உயர் பதவிகள் வழங்குவதில்
முறையின்மை தொடர்கிறது. இதை நிறுவனங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்
பரமேசுவர(நாயக்கு).
– தினமணி
-படம்: நன்றி :http://www.nativeplanet.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக