மு.இராமநாதன் - mu-ramanathan

ஆங்காங்கு தமிழ் வகுப்புகள்

 தமிழ்க் கல்வி அறிவுரைஞர்

மு. இராமநாதன் உரை

  ஆங்காங்கு (Hongkong) தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல நேரத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் தேவையைப் பற்றியும் சொல்லலாம் என நினைக்கிறேன்.
 நான் ஆங்காங்கு பொறியியல் கலந்தாய்வு (ஆலோசனை) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில், கிழமைக்கு (வாரம்) ஒருநாள் பகல் உணவு வேளையில் மூத்த பொறியாளர் ஒருவர், புதிதாகச் சேர்ந்திருக்கும் இளம் பொறியாளர்களுக்குத் தாங்கள் பணியாற்றும் திட்டங்களின் சிறப்பு, நூதனப் பொறியியல் தன்மைகள் பற்றிப் பாடம் எடுக்க வேண்டும். உரை நடந்து கொண்டிருக்கும்போதே உணவும் நடந்தேறிவிடும். என் முறை வந்தது. நான் ஒரு சிறிய மாற்றம் செய்தேன். ஆங்காங்கில் பொறியியல் அப்படி ஒன்றும் போட்டியுள்ள (கிராக்கியுள்ள) துறையில்லை. உண்மையிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும் பொறியியலிலும் ஆர்வமுள்ளவர்கள்தான் பொறியியல் படிக்க வருவார்கள். தவிர, இங்குள்ள பல்கலைக்கழகங்கள் உலகத்தரமானவை. ஆகவே, இந்த இளம் சீனப் பொறியாளர்களின் பொறியியல் அறிவு சிறப்பாக இருக்கும். ஆனால், அவர்களின் ஆங்கிலத்தைப் பற்றி அப்படிச் சொல்வதற்கு இல்லை.
  நான் பணியாற்றும் துறையில் படம் வரைவது, கணக்கீடுகள் போடுவது மட்டுமல்ல, எழுதுகிற வேலையும் கணிசமாக உண்டு. அறிக்கைகள், மடல்கள், ஒப்பந்தங்கள், பொருட்களின் – வேலையின் தரம் எப்படியிருக்க வேண்டும் என்கிற விவரக்குறிப்புகள், மின்னஞ்சல்கள் என்று நாள்தோறும் நிறைய எழுத வேண்டும். ஆங்காங்கு மக்கள் சீனமொழியில்தான் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். எல்லா மென்பொருள்களும் நிரல்களும் சீனத்திலேயே இருக்கின்றன. எண்களைக் கூடச் சீனமொழியில்தான் எழுதுவார்கள், சொல்லுவார்கள். எனினும் பொறியியல்துறையில் அலுவல்மொழி ஆங்கிலமாகத்தான் இருந்து வருகிறது. இந்த எழுத்து வேலையில் சீன இளைஞர்களின் ஆங்கிலம் மெச்சும்படி இல்லை. ஆகவே, பொறியியல் தொடர்பான அறிக்கைகளிலும் மடல்களிலும் விவரக்குறிப்புகளிலும் என்னென்ன கூறுகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி அவற்றை அலுவல்முறையான ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினேன். நான் எதிர்பார்க்கவேயில்லை; அதற்குப் பெரிய வரவேற்பு இருந்தது. அந்த இளைஞர்கள் அடுத்தடுத்த கிழமைகளில், குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் கடிதம் எப்படி இருக்க வேண்டும், அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது போலப் பயிற்சி எடுத்துக் கொண்டு எழுதினார்கள்.
  இது நடந்த சில மாதங்களில் இந்தியாவில் நடந்து வந்த ஒரு திட்டப்பணிக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டேன். ஆங்காங்கு இளைஞர்கள் சொல்லுவார்கள், “இந்தியர்கள் ஆங்கிலத்தில் விற்பன்னர்கள்” என்று! நானும் அப்படித்தான் நம்பிவந்தேன். ஆனால், அருகிலிருந்து பார்த்தபோதுதான் தெரிந்தது இந்திய இளம் பொறியாளர்களின் ஆங்கிலமும் மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை. என்னிடத்தில் ஆங்காங்கில் நான் நிகழ்த்திய உரைக்குறிப்புகள், காட்சிப்பதிவு / பவர்பாயிண்ட்டு காட்சிகள் எல்லாம் இருந்தன. ஒருநாள் மாலைவேளையில் அந்த உரையை நிகழ்த்துவது என்ற முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டேன். இந்தியாவில் எனக்கு வேறுவிதமான வியப்பு காத்திருந்தது. மிக மிகக் குறைவான இளைஞர்களே உரையைக் கேட்க வந்திருந்தார்கள். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு பொறுமையாக, வராத சில பேரிடம் ஏன் வரவில்லை என்று கேட்டேன். “கடிதம் எழுதுவதற்கு என்ன பெரிய பயிற்சி வேண்டும்? நீங்கள் பொறியியலைப் பற்றிப் பேசுங்கள்; வருகிறோம்” என்றார்கள். இதிலிருந்து நான் இரண்டு செய்திகளைப் புரிந்து கொண்டேன்.
  சீன இளைஞர்களுக்குத் தங்களது ஆங்கிலம் குறைபாடு உடையது என்று தெரிந்திருக்கிறது. இந்திய – தமிழக இளைஞர்களின் ஆங்கிலமும் குறைபாடு உடையதுதான். ஆனால், அஃது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டாவதாக, இப்போது தமிழகத்தில் படிக்கிற இளைஞர்களில் பலர் தமிழ் படிப்பதில்லை. அவர்கள் முதல் பாடமாக பிரெஞ்சு, செருமன், சமசுகிருதம், உருது என்று ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கிறார்கள். கேட்டால், நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்கிறார்கள். ஆங்காங்கு இளம் பொறியாளர்கள் தங்களது தாய் மொழியான சீனமொழியில் சிந்தித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இருக்கிறது. மொழி மாற்றத்தில்தான் குறை இருக்கிறது. அதைப் பயிற்சி மூலம் அவர்கள் மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், தமிழக இளம் பொறியாளர்களுக்கு அல்லது அவர்களில் பலருக்குத் தாய்மொழியில் சிந்திக்க முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சிந்திக்க முடிவதில்லை. தாய்மொழிக் கல்வியின் பெருமையை உலகெங்குமுள்ள கல்வியாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுப் பெற்றோர்களின் காதுகளில் அது விழுவதில்லை.
  சரி, இது தமிழகத்தின் நிலைமை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும், அப்படிப் படிப்பதில் இடர்ப்பாடு உள்ளதே என்பது அடுத்த கேள்வி. அ.முத்துலிங்கத்தின் சிறுகதையொன்றில் வரும் ஒரு பையன், கனடாவில் வசிப்பவன், அவனது தாய் சனிக்கிழமைத் தமிழ் வகுப்புக்குப் போகச் சொல்லி வற்புறுத்தும்போது சொல்லுவான்: “அம்மா, நான் இரண்டு நாட்டுக்குக் குடிமகனாக இருக்க முடியாது.” புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்களின் சிக்கல் இதுதான். அவர்களைச் சுற்றித் தமிழ் இல்லை, தமிழ்ப் பண்பாடு இல்லை, தமிழ் இதழ்கள், தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்ச் சுவரொட்டிகள், தமிழ் அறிவித்தல்கள் இல்லை. ஆகவே ‘ஏன் படிக்க வேண்டும் தமிழ்?’ என்பது அவர்கள் மனதில் எழும் கேள்வி. ஏனென்றால், அவர்கள் அதில்தான் இயல்பாகச் சிந்திக்க முடியும். வீட்டில் பெற்றோர்கள் அதற்கான சூழலை, தமிழில் எப்போதும் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். மேலும், தாய்மொழிதான் அவர்களது அடையாளம், முகவரி. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டின் மொழியைக் கற்க வேண்டும், அவர்களது பண்பாட்டிற்கு இசைவாக நடக்க வேண்டும் என்பவையெல்லாம் உண்மைதான். அதே வேளையில், தாய்மொழிக் கல்வியில் கருத்துச் செலுத்த வேண்டும். “என்னுடைய தாய்மொழி தமிழ். But I do not Speak Tamil” என்று சொல்லுகிற தமிழ் இளைஞனை எந்த வெளிநாட்டானும் மதிக்கப் போவதில்லை. தாய்மொழிக் கல்வி உணர்வு அடிப்படையிலானது. மிக இயல்பானது. அதுவே தெளிவான சிந்தனைப்போக்கை, படைப்பூக்கத்தை வளர்க்க வல்லது.
  உலகெங்கும் வாழும் தமிழர்கள், பல நாடுகளிலும் இந்தத் தமிழ் வகுப்பை முயன்றுவருகிறார்கள். ஆனால், வெற்றிபெறுபவர்கள் குறைவு. காரணம், மாணவர்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது. அவர்களுக்குத் தாய்மொழியைக் கற்பிப்பதற்கு முன்பாகத் தாய்மொழிக் கல்வியின் தேவையை உணரச் செய்ய வேண்டும். ஆங்காங்கு தமிழ் வகுப்பு அதைச் செவ்வனே செய்து வருகிறது. அதனால்தான் தொடர்ச்சியாக 12ஆம் ஆண்டில் அதனால் செயல்பட முடிகிறது.
  கா.சிவத்தம்பி ஒருமுறை குறிப்பிட்டார்: “தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது.” ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செம்மொழி, இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு தற்கால மொழி நம்முடைய தாய்மொழியாக அமைந்தது தற்செயலாக இருக்கலாம். ஆனால், அது பெருமைக்குரியது இல்லையா? அந்த மொழியை நம் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றுவது நமது கடமை. அதன் இலக்கியச் செழுமையை அவர்கள் கற்றுணர வகை செய்ய வேண்டாவா? அதைத்தான் ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் செய்து வருகின்றன. தமிழ்மொழியைப் போலவே ஆங்காங்கு தமிழ் வகுப்புகளும் அதன் தொடர்ச்சியினால்தான் பெருமையடைகின்றன.
  இந்த அருஞ்செயலை நிகழ்த்தி வருவதற்கு முக்கியக் காரணி – இதன் மாணவர்கள். அந்த 125 தமிழ்ச் சிறுவர் சிறுமியரைப் பாராட்டுகிறேன். அவர்களின் பெற்றோர்களைப் பாராட்டுகிறேன். 11 ஆண்டுகளாக இந்த வகுப்புகளைச் சிறப்பாக நடத்தி வரும் தமிழ் வகுப்பின் அமைப்பாளர்கள் தைக்கா உபைதுல்லா, அப்துல் அசீசு, சேக் அப்துல்காதர், சையத் அகமது, எசு.எசு.முபாரக், காழி அலாவுதீன், எம்.அப்துல்காதர், பிரபு சுஐபு ஆகியோரைப் பாராட்டுகிறேன்.
  இந்த வகுப்புகளின் இப்போதைய ஆசிரியர்களான திருமதிகள் சுதாரவி, கதீசா காபர், கவிதா மோகன், சபீனா அப்துல் ரகுமான், அனுராதா அரங்கநாதன், சிறீபிரியா பூவராகவன், இராதாமணி, மணிமேகலை செந்தில்நாதன், கலைச்செல்வி அருணாச்சலம், பூங்குழலி சுந்தரமூர்த்தி, கண்மணி செல்வம், அலமேலு இராமநாதன், சித்ரா வெங்கடசுப்பிரமணியன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(மு.இராமநாதன் ஆங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்; தமிழ் வகுப்புகளின் அறிவுரைஞர். ‘ஆங்காங்கு வானொலி / இரேடியோ ஆங்காங்கு’ சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்தி வரும் ஒலிபரப்பில் 26.9.15 அன்று தமிழில் பேசியது)
மின்னஞ்சல்: mu.ramanathan@gamil.com
– நன்றி: காலச்சுவடு சனவரி 2016 இதழ்
அட்டை-காலச்சுவடு, சனவரி2016 -attai_kaalachuvadu_sanavari2016
http://www.kalachuvadu.com
தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_e.bhu.gnanaprakasan