பரதநாட்டியம் தமிழரின் கலையே! – மயிலை சீனி.வேங்கடசாமி
பாரத நாட்டிலே பல நாட்டியக் கலைகள் உள்ளன. அவற்றில் பரதநாட்டியம், கதக், கதகளி, மணிபுரி நாட்டியங்கள் பேர் போனவை.
இவற்றில் தலைசிறந்த உயர்ந்த கலையாக
விளங்குவது பரதநாட்டியம். இதைத் தமிழனின் தற்புகழ்ச்சி என்றோ, முகமன் உரை
என்றோ யாரும் கருதக்கூடாது. உவத்தல் வெறுத்தல் இல்லாத மேல்நாட்டு ஆசிரியர்
கூறும் கருத்தையே கூறுகிறேன். “இந்திய நடனங்களிலே பெருமிதம் உடையது (தலைசிறந்தது) பரத நாட்டியம்”
என்று இந்திய நடனக் கலைகளைப் பற்றி ஆராய்ந்து எழுதிய ஓர் அமெரிக்கர்,
“Bharata Natya. the Pride of Indian Dance” என்று கூறுகிறார்.1
தமிழ்நாடு, ஆந்திரநாடு, கருநாடக நாடு
முதலிய தென் இந்தியாவில் பரத நாட்டியம் இக்காலத்தில் பயிலப்பட்டாலும்
இக்கலையை உண்டாக்கி வளர்த்துப் பாதுகாத்து வருபவர் தமிழரே. இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரதநாட்டியக் கலை தமிழ் நாட்டிலே வளர்க்கப்பட்டு
வருகிறது. இக்காலத்திலும், நட்டுவர் என்று பெயர்
கூறப்படுகிற தலைக்கோல் ஆசான்கள் தஞ்சாவூரிலே அதிகமாக இருக்கிறார்கள்.
இவர்களே இக்கலையைக் கற்றும் கற்பித்தும் வருகிறார்கள்.2
பரதநாட்டியக் கலையைப் பற்றித் தமிழிலும்
வடமொழியிலும் நூல்கள் உள்ளன. இக்கலையைப்பற்றி வடமொழியில் நூல்கள்
எழுதப்பட்டிருப்பதனாலே இது வட நாட்டுக் கலையென்றோ, வடநாட்டவருக்குரியதென்றோ
கருதலாகாது. தமிழ் நாட்டிலே தமிழர்களால் தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டு
வருகிறது இந்தப் பரதநாட்டியக் கலை.
- “The Dance of India” by Faubion Bowers, New York, 1955, p.19.
2.தேவதாசிகள்
என்றும், தேவரடியார் என்றும் பெயர் பெற்ற ஆடல் மகளிர் முற்காலத்தில் பரத
நாட்டியக் கலையைப் பயின்று கோயில்களிலும் பிற இடங்களிலும் ஆடினார்கள்.
கோயில்களில் தேவதாசிகள் கூடாது என்று சட்டம் செய்யப்பட்ட பிறகு,
பரதநாட்டியத்தை உயர்ந்த சாதியார் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் பலர் தமது
பெண்களுக்கு இந்தக் கலையை இப்போது கற்பித்து வருகிறார்கள். இசைவேளாளர்
என்னும் வகுப்பைச் சேர்ந்த நட்டுவர்கள், பரம்பரையாக ஆதிகாலம் முதல்
பரதநாட்டியக் கலையைப் பெண்களுக்குக் கற்பித்து வருகிறார்கள். ஆனால்,
இப்பொழுது இந்த நட்டுவத் தொழிலைப் பிராமணர்களும் கைக்கொள்ளத்
தொடங்கியுள்ளார்கள்.
– தமிழ் ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக