ஆரியக் கலாம்
(குறிப்பு: இறந்தவரை பற்றித்
தூற்றும் எண்ணம் கொண்டு நான் இந்தக் கட்டுரையை வடிக்கவில்லை. கலாம் போல்
இன்னும் பல அடிமைகள் உள்ளனர். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் என்
பணி செய்கிறேன்)
“பிறர்க்கென வாழ்ந்து மடிவது மலையை விடக் கடினமானது,
தனக்கென வாழ்ந்து மடிவது இறகை விட எளிதானது”.
என்பார் மாபெரும் மக்கள் தலைவர் தோழர்.மாசேதுங்கு.
கடந்த ஆடி 11, 2046 /27-07-2015இல்
இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்
இறந்து விட்டார். அதையொட்டி இந்திய ஒன்றிய அரசு 7 நாள் துயர்நிலை
கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது. தமிழக அரசோ அவரது அடக்கம் நடந்த
நாளானஆடி 14, 2046 / 30-07-2015இல் அரசு விடுமுறை அளித்தது. இந்திய
ஒன்றியமே கண்ணீரில் மிதப்பதாக ஊடகங்கள் காட்டின.
அப்துல்கலாம் செய்தது என்ன?
குசராத்து படுகொலை:
இந்திய ஒன்றிய அரசில் பணியாற்றிய அப்துல்கலாம், ஆடி 08, 2033 / சூலை 25 –
2002 ஆம் ஆண்டு பா.ச.க கட்சியினால் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர்
ஆக்கப்பட்டார். அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்ட
காலத்தில்தான் குசராத்தில் ஆளும் பா.ச.க அரசால், முசுலீம் மக்கள் மீது
அவர்கள் யாருமே உயிரோடு இருக்கக் கூடாது என்ற வகையில் மதத் தூய்மை
நடத்தப்பட்டு இருந்தது. உலகம் முழுக்க பல்வேறு நாட்டு மக்களாலும், இந்திய
ஒன்றிய அரசின் நடத்தைபற்றி வினா எழுப்பப்பட்டு, விடை சொல்ல முடியாமல்
பா.ச.க அரசு தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டு, இங்கு நடந்த இனப்படு கொலையை
பா.ச.க அரசு மூடி மறைக்க முயன்று கொண்டு இருந்த காலம் அது.
‘கோத்ரா தொடர்வண்டி’
எரிப்பைக் கரணியம் காட்டி, குசராத்து முழுக்கச் சிறுபான்மை முசுலீம்
மக்களின் வீடுகள், கடைகள் அரசின் துணையோடு பா.ச.க போக்கிலிகளால் பட்டியல்
எடுக்கப்பட்டு, அரசின் பாதுகாப்போடு, குறி வைத்து, முசுலீம் மக்கள்
பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள்
கொள்ளையடிக்கப்பட்டும், தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இலக்கக்கணக்கானோர்
ஏதிலிகளாக்கப்பட்டனர். ஆனால், அப்துல் கலாம் அவர்கள் இதைப்பற்றித் தான்
இறக்கும் காலம் வரை வாய்திறந்து ஒரு சொல் பேசியதில்லை. தான் ஒரு முசுலீம்
மதத்தில் பிறந்திருந்தும், இந்திய ஒன்றியத்தின் முதல் குடிமகனாக இருந்தும்
அம் மக்களுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிப் பேசவில்லை. தனக்குக் கிடைத்த
இந்த குடியரசுத் தலைவர் பதவி என்பது, முசுலீம் மக்கள் மீது நடத்தப்பட்ட
படுகொலையை உலகின் முன் மறைப்பதற்கான ஒரு திரைதான், பா.ச.க அரசு கொடுத்த
பதவி என்பதை, நன்கு உணர்ந்து அதன்படியே செயல்பட்டவர்.
தற்சார்புக் கொள்கை:
அப்துல்கலாம் பல நேரங்களில் இந்த நாட்டின் தற்சார்பைப் பற்றி மாணவர்களிடம்
வலியுறுத்திப் பேசினார். ஆனால், இவர் இப்படி ஓயாமல் பேசிக்
கொண்டிருக்கும்போது தான் பலநாடுகள் கொள்ளையடிக்கவும், கனிம வளங்களைச்
சுரண்டவும், உள்நாட்டுத் தொழிலை அழிக்கும் வகையிலும் பன்னாட்டு நிறுவனங்கள்
தொழில் தொடங்கவும் இருந்த, தடைகள் அனைத்தும், ஆளும் அரசால் நீக்கப் பட்டன.
அதற்கு ஒப்புதல் கொடுப்பவராக இவர் இருந்து வந்தார். அமெரிக்காவுடன் 123
அணு ஒப்பந்தம்பற்றிப் பேசவும் அரசால் அப்துல் கலாம் பயன்படுத்தப் பட்டார்,
இவரும் அதற்கு உடன்பட்டுச் செயல்பட்டார்.
ஒன்றியப் பற்று வேடம் போட்டுக் கவரும் பேச்சு பேசுவதற்கு மட்டும் தற்சார்பு உற்பத்தி என்பது அப்துல்கலாம் அவர்களுக்குப் பயன்பட்டது.
அணு ஆற்றல்: ஏவுகணைப்
பொறியியல் வல்லுநராகிய அப்துல்கலாம், தனது பதவி உயர்வால் பாதுகாப்புத் துறை
அதிகாரியானவர். உலகமே சப்பானில் நடந்த இரோசிமா, நாகசாகி அணுகுண்டு
வீச்சுக்குப் பின் அணுகுண்டை எதிர்த்து வந்தது. உலகின் பொது அமைதிக்கு
எதிரியான அணுகுண்டு ஆய்வினைக், காந்தியின் மாணாக்கராய் அறவழியின் முகமாக,
சைவ உணவு உண்பவராகத் தன்னைக் காட்டிக்கொண்டே, மானிடக் குலத்தை அழிக்க
உருவாக்கப்பட்ட அணுகுண்டு ஆய்வினைப் பொக்ரைனில் நடத்தியவர் அப்துல்கலாம்
அவர்கள். இதற்கு ஆளும்வருக்கங்களும், ஊடகமும் மாபெரும் ‘ஒன்றியப் பற்று’
குறியீட்டைக் குத்தி, அணுகுண்டு ஆய்வுக்கு அப்துல்கலாமை மிகப்பெரிய
ஒன்றியப் பற்று நாயகனாக மக்கள் முன் நிறுத்திக் காட்டியது.
கூடன்குளம் அணு உலை:
தமிழ்மக்கள் அப்துல்கலாம் மீது வைத்திருந்த மதிப்பை, மாறா அன்பை,
ஆளும்வருக்கத்திற்கு ஆதரவாக மடை மாற்றி விடும் உத்தியாக, 30 ஆயிரத்திற்கு
மேற்பட்ட மக்கள், எண்ணற்ற அடக்குமுறைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்துத்
தொடர்ந்து போராடி வந்த நிலையில், போராட்டத்தைச் சீர்குலைக்கவும்,
போராட்டம் நயண்மையற்றது என மக்களிடம் பொது எண்ணத்தை உருவாக்கவும் ஆளும்
அரசால் இறக்கிவிடப்பட்ட துருப்புச்சீட்டுதான் அப்துல்கலாம் அவர்களின்
கூடன்குளம் வருகை. கூடன்குளம் அணு உலை மிக மிகவும் பாதுகாப்பானது என அணு
உலை வளாகத்தை ஐப்பசி 20, 2042 / 6.11.2011 அன்று வெறும் சிலமணி நேரம்
மட்டுமே சுற்றிப் பார்த்து உடனே நற்சான்று கொடுத்துத் தமிழ்மக்களை ஏமாற்றி,
அடுத்தமுறை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு துண்டைப் போட்டுச் சீட்டை
உறுதி செய்து வைத்துக் கொண்டவர் இவர். இதை விடக் கொடுமை கூடன்குளம் அணு
உலையைச் சுற்றிப் பார்க்கும் முன்பே ‘அணு உலை பாதுகாப்பு’ என்று இந்து (THE
HINDU) ஆங்கில நாளிதழில் அணு உலை நிருவாகம் எழுதிக் கொடுத்ததை, முழுப்
பக்கக் கட்டுரையாக எழுதி விட்டு வந்தவர். இப்படிப்பட்ட ‘நல்லவர்’தான்
அப்துல்கலாம் அவர்கள்.
அணு ஆற்றல் வல்லுநராக இல்லாமலேயே, இந்திய
ஒன்றிய அரசின் கூடன்குளம் அணு உலையை மட்டும் அல்ல, தற்போது தேனி
நியூட்ரினோ முதலான அனைத்து அணு ஆற்றல் திட்டங்களையும் நயன்மைப்படுத்திப்
பரப்புரை செய்ததன் மூலம், இந்திய ஒன்றிய அரசுக்கும் அதன்
மக்களுக்கு எதிரான அறிவியல் கொள்கைக்கும் தனது இறுதிமூச்சு வரை அரும்பணி
செய்தவர்தான் அப்துல்கலாம் அவர்கள்.
கனவு காணும் கல்வி:
எப்போதும் மாணவர்களை இயல்பை விட்டுவிட்டு, கனவு கானச் சொல்லும்
அப்துல்கலாம் அவர்கள், பன்னாட்டு நிறுவனத்திற்குத் தொழிற்நுட்ப அடிமைகளை
உற்பத்தி செய்யக் கட்டமைக்கப்பட்ட தனியார்மயப்படுத்தப்பட்ட கல்வியை, ஆங்கில
வழிக் கல்வியை, தற்சார்பற்ற கல்வியை, கல்விதுறையில் மக்கள் ஆட்சியில்
இருப்பதை எந்த வகையிலும் எங்கும் வினாவை எழுப்பவில்லை.
கல்வியில் தனியார்
கொள்ளையைக் கண்டித்தோ, குறை கூறியோ, இந்த நிலை மாற வேண்டும் என்பதை
மறந்தும் எங்கும் பேசியதில்லை. மேலும் தனது கனவுகளை அவர் ஓடியோடி விற்ற
இடங்கள் எல்லாம் தனியார் தொழிற்நுட்ப கல்லூரி வளாகங்களே. தமிழ்மொழியில்
படித்து உயர்ந்த நிலைக்கு வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இவர், எந்த ஓர்
இடத்திலும் தமிழ்வழியில் கல்வி கற்கும் மாணவர்களைச் சந்திப்பதை முதன்மையாக
வைத்துக் கொண்டதில்லை. இராமேசுவரம் மீனவர் குமுகத்திடம் வாழ்ந்தவராகச்
சொல்லப்படும் இவர், போராட்டக் களத்தில் இருந்த, போராடும் ஊரில் இருந்த
மீனவக் குமுக குழந்தைகளிடம் கூட பேச மனம் இல்லாதவராகவே இருந்தார். 10,000
காவல்துறையை ஊரைச் சுற்றி வளைத்து நிறுத்தி பங்குனி 06, 2043/மார்ச்சு 19,
2012 முதல் அரச வன்கொடுமையால் இடிந்தகரை குழந்தைகளுக்குப்
பால்-தண்ணீர்கூடக் கொண்டு செல்ல விடாமல் கிழமைக் கணக்கில் தடுத்து
நிறுத்தப்பட்ட போதும் அதை வாய் திறந்தும் கண்டிக்காத மீனவ ஊர்களைச் சேர்ந்த
‘குழந்தை அன்பாளர்’ தான் அப்துல்கலாம்.
அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்கள் முன்னேற
வேண்டுமென்றும், வாழ்க்கையில் – வேலையில் முன்னேறி அருஞ்செயல்கள் பல செய்ய
வேண்டுமென்று ஓயாமல் போகும் இடமெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
‘‘எதிர்காலத்தைப்பற்றிக் கனவு காணுங்கள்’’ என்று மாணவர்களிடம் சொன்ன அவர்,
எந்த ஒரு நிலையிலும் “இதற்குத் தடையாக இருக்கும் குமுகத்தில் நிலவும்
பல்வேறு அவல நிலைமைகளை முறியடிக்கப் போராட்ட களம் காணுங்கள்” என்றோ எங்கும்
நீக்கமற நிறைந்துள்ள கையூட்டு ஊழலை, நேர்மையற்ற அரசியலை, பொதுமை அற்ற
சுரண்டல் குமுக அமைப்பை, மனிதருக்குள் ஏற்றதாழ்வை கற்பிக்கும் சாதிய
படிநிலை கொண்ட கட்டமைப்பை, ஒவ்வொரு தேசிய இனமும் தில்லியால்
அடிமைப்படுத்தப்பட்டு அரசு உரிமை அற்று இருப்பதை, பன்னாட்டு நிறுவனங்களின்
ஆளுமையை எதிர்கொள்ளுங்கள் எனும் குரலை மட்டும் அவர் எழுப்பவே இல்லை.
மாணவர்களை- இளைஞர்களை உற்சாகப்படுத்தினாரே ஒழிய, சிக்கல்களை எதிர்கொள்ளும்
தீர்க்கும் வழிமுறைகளைப்பற்றி மறந்தும் பேசவில்லை என்பது மட்டும் அல்ல, அதை
உணரவேத் தடையாக இருந்து ஒரு போலியான மயக்கத்தையே நிலவும் அமைப்பு முறையின்
மீது ஏற்படுத்தினார்.
தமிழக மீனவப் படுகொலைகள்:
அப்துல்கலாம் அவர்கள், சிங்களப் படையால் அவரது ஊரைச் சேர்ந்த 700
மீனவர்கள் படுகொலைகள் செய்யப்பட்ட போதும், எண்ணற்றோர் சிறைப் படுத்தப்பட்ட
போதும், பலரும் ஊனப்படுத்தப்பட்ட போதும் கூட பேச முடியாமல் போனதற்குக்
கரணியம் என்ன என எதுவும் இதுவரை அவர் சொன்னதில்லை, சொல்லவும் முடியாது.
எந்த ஒரு நிலையிலும் ஆளும் வகுப்பின் கையாளாக மட்டுமே தன்னைக் காட்டி,
உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டவர் அப்துல்கலாம் அவர்கள்.
ஈழத்தமிழர் படுகொலைகள்:
ஈழத்தில் ஒன்றரை இலக்கம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கண்ணை மூடிக்
கொண்டு பேசாமல் அமைதி காத்தவர். இனப்படுகொலைபற்றி உலகம் முழுக்கப் பல்வேறு
சொற்போர்கள் வந்த போதும் பேசாமல் அமைதி காத்து இருந்தவர். சிங்களப்
படையிடம் சரண் அடைந்த, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறுவன்
பாலச்சந்திரன் படுகொலைச் செய்தி அம்பலம் ஆகித் தமிழகமே கொதித்துக் கிடந்த
போதும், இசைப்பிரியா படுகொலை அம்பலமாகிய போதும் கூட வாய் பேசாத ஊமை இவர்.
ஆனால், இலங்கைக்கு ஓடோடி சென்று, திரும்பி அங்கு தமிழர்கள் எல்லோரும்
மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறர்கள், இலங்கை தற்போது சரியான பாதையில்
பயணிக்கிறது எனக் கூறியும், ஒன்றரை இலக்கம் தமிழர்களைப் படுகொலை செய்த
இராசபக்சேவுக்கு நற்சான்றிதழ் கொடுத்தும் வந்த தமிழின கேடர் இவர்.
யாருக்காகப் பேசினார் அப்துல்கலாம்:
ஈழத்தில் நடந்த இரக்கமற்ற ஒன்றரை இலக்கம் தமிழர் படுகொலைகள், அவரது
ஊரைச்சார்ந்த மீனவர் படுகொலைகள், குசராத்து முசுலீம் படுகொலைகள் என எதுவும்
அவரை எப்போதும் அவரை துன்புறுத்தியது கிடையாது என்பது போலவே அமைதிகாத்து நடித்த இரண்டகர் இவர்.
இயல்பான மனிதன் என்ற முறையில்கூடத் தெருவில் ஒரு நாயை அடித்துக் கொன்றால்
கூட ஏன் எனக் கேட்கும் குமுகத்தில் இருக்கும் அப்துல்கலாம் அவர்கள், இந்த
நாட்டின் முதல் குடிமகனாக இருந்து கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் படு
கொலையைப்பற்றி பேசவே மறுத்தவர். பேசினால் எங்கே தனது ஆளும்வகுப்பு
வினாவிற்கு உள்ளாக்கப்படுமோ என்று அடிமையாய் இருந்தவர்.
அணு உலைக்காகவும், நியூட்ரினோவிற்காகவும் மட்டும் வாய் திறந்த அப்துல்கலாம் குரல், ஏதும் அற்ற உழைக்கும் மக்களுக்காக எப்போதும் எழுப்பப்பட்டதே இல்லை. வேளாண்மையை அழிக்கும் பி.டி
விதைகளை எப்போதும் ஆதரித்து உரக்கப் பேசி நின்றவர். சில்லறை வணிகத்தை
அழிக்கும் வால்மார்ட்டு போன்ற அயல் முதலீட்டுக்கு ஆதரவாக இருந்தவர்.
பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக, தமிழகத்தை அழிக்கும் திட்டங்களான மீத்தேன், கெயில்,
கனிமவளக் கொள்ளைகள், ஆறுகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, மலைகள்
அழிப்பு, கடல்-கடற்கரை அழிப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும்
தொழிற்சாலைகள், குடிநீர் விற்பனைப் பண்ட மாக்கப்படுதல், நீர் வழியை அழித்து
கோக், பெப்சிக்கு விற்கப்படுவது என எதைப்
பற்றியும் பேசாமல் ஊமையாக இருந்தவர். மக்களை அழிக்கும் மதுவை விற்கும்
அரசக் கொடுமையை வாய்திறந்தும் பேச மறுத்தவர். உச்சஅற மன்ற தீர்ப்பைக் கூட
மதிக்காமல் காவிரி, முல்லை பெரியார் சிக்கலில் அண்டை நாட்டு இனங்கள் இனவெறி
போக்கோடு நடந்த போதும் அதை பற்றி ஏறெடுத்தும் பார்க்காதவர் இவர்.
சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, போராடும் மக்கள் மீது ஏவப்பட்ட அனைத்து அரச
வன்கொடுமையும் கண்மூடி ஆதரித்து நின்ற அரசு அடிமை.
அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நெருக்கடி ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாத அரசின் ஆழமான அடிமை இவர்.
மறைந்த பின்பு பேசலாமா?:
அப்துல்கலாமின் தவறுகள் எதுவும் ஏதோ அறியாமல் செய்த தவறுகள் அல்ல.
குறிப்பாக அவை திட்டமிடப்பட்டு, அது நயன்மைப்படுத்தும் வகையில் படிப்படியாக
நடைமுறைப்படுத்தப்பட்டன.
தோழர். பெரியார் சொல்லுவதைப் போல,
“எல்லா சாவுக்கும் நாம் வருந்துவதில்லை.
வருத்தத்தின் அளவு நட்டத்தின் அளவைப் பொறுத்து மாறும்!”
அப்துல்கலாமின் இறப்பு மூலம் உழைக்கும்
தமிழர்களுக்கு எவ்வகை நட்டமும் இருப்பதாய் தெரியவில்லை. அவர் காலம் முழுக்க
‘கனவு காணுங்கள்’ என்ற மயக்கச் சொற்களை மட்டுமே உதிர்த்து
ஆளும்வருக்கத்தால் தனக்கென்று அடையாளத்தை மக்கள் நடுவில் உருவாக்கியவர்.
இந்திய ஒன்றிய அரசுக்கு நல்ல கைக் கூலியாக நின்று, பன்னாட்டு நிறுவனங்கள்
இந்த நாட்டை கொள்ளை அடிக்க அனைத்து வழிகளிலும் வர உதவியவர். அதற்கு அவரைச்
சுற்றி இருந்த ஆளும்வருக்கத்தால் கட்டப்பட்ட போலியான உருவம் பயன்பட்டது.
அப்துல்கலாம் அவர்களை முன்வைத்து ஆளும்
அரசு – அரசியலார்கள் – ஊடகங்களால் காட்டப்பட்ட, எளிமை, நேர்மை, கனவுகள்
எல்லாம் நம்மை அரசியலற்ற வகையில் மாற்றி, இந்திய ஒன்றிய அரசின் பிடியில்
மேலும் மேலும் சிக்க வைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக
நமது தமிழர் நாடு மாற்றப்பட மட்டுமே பயன்பட்டது. ஆனால், ஆளுமை உள்ள பதவி இருந்தும், தன் ஆளுமைகளை எளிய மக்களுக்காக எப்போதும் பயன்படுத்தாத, ஊமையாக அனைத்து அரசின் குற்றங்களுக்கும், கொள்ளைக்கும் ஏற்பிசைவு வழங்கிய அப்துல்கலாம் அவர்கள், வரலாற்றில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட வேண்டிவர் என்பதாக அல்லாமல் வேறெப்படியும் அடையாளப்படுத்த முடியாதவர்.
இறந்தவுடன் ஒருவரை நல்லவர்களாகக் காட்டும் கருத்தியலை விரட்டுவோம்!
ஒருவரின் சாவு என்பது அவரின் அனைத்துத் தவறுகளையும் ஏற்பதற்கான ஆளுமை
கொண்ட இசைவு இல்லை. சாவு ஒருவரை ஆய்விற்கு அப்பாற்பட்டவராக ஆக்குவதுமில்லை.
சாவு பற்றிய நமது அடிமனத்தில் பதிய வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைதான் ஒருவரை
இறந்தவுடன் ஆய்வு செய்யக் கூடாது என்று பலரையும் கூற வைக்கிறது.
அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை என்பது இந்திய ஒன்றிய அரசின் சுரண்டல் கொள்கையைப் பாதுகாத்து, அதை நடைமுறைப்படுத்த உழைத்த அறிவியல் அடியாளின் அற்ப வாழ்க்கையாகும்.
பார்ப்பனிய இந்திய ஒன்றிய அரசு எவரையும் பயன்படுத்தி தனது ஆளுமையைத்
தக்கவைக்கும். இந்திய ஒன்றியப் பார்ப்பனியத்திற்கு உதவும் ஒருவரை சாதிமத
வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளும் என்பதை நமக்கு அப்துல்கலாம் வாழ்க்கை,
படிப்பினையாக உணர்த்துகிறது.
(புகழ்ச்செல்வி தி.பி.2046 மடங்கல்-கன்னி, கன்னி-துலை /செபுதம்பர், அக்குதோபர், 2015 இதழ்களில் வந்த தொடர் கட்டுரையின் ஒரு பகுதி.)
(படம் நன்றி: சதீசு பகிர்பதிவி)
– முகிலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக