attai_kurumbukavithaikal

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ

மின்னூலாக்கம்

உரிமை –  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
கவிதை
  முகில்களின் இடைவெளிகளில் கதிர் பரப்பி ஒளிக்கதிர்களாய் தோன்றுவது கவிதை. பலகணி வழியே ஒளி வெள்ளமாய்ப் பெருகி வருவது போன்றது கவிதை.
  மேற் கூரையின் இடைவெளிகளில் ஊடுருவி வரும் ஒளிக் கோலங்கள்தான் கவிதை.
 ஒரு புள்ளியில் தொடங்கி முழுமை பெறும் கோலம் போன்றது கவிதை.
 சிற்றுளியின் வண்ணத்தால் சிற்பியின் எண்ணத்தால் கற்பனையால் விளையும் சிற்பம் போன்றது கவிதை.
கவிதை எனும் சொல்லிலேயே கற்பனை விதை அடங்கி இருக்கிறது. கருத்துக்களை விதைப்பது கவிதை. விதை நெல் என்பது உழவனின் பெருஞ்செல்வம். விதை என்றாலே நல்ல பயிரின் மூலம். அத்தகைய பெருஞ்செல்வம் வேண்டுமானால் விதையைப் பாதுகாத்து வைக்க வேண்டும். அது போல் கவிஞர்களுக்கு கருத்துகள்தான் பெருஞ் செல்வம், அந்த விதை போன்ற கருத்துகளை மன ஆழத்திலே பாதுகாத்து வைத்தால்தான் அவ்வப்போது  எடுத்து விதைக்க முடியும். விதைத்தால்தான் கவிதைப் பயிர் வரும்.
  கருத்துகளுக்கு உயிர் வரும்.   கற்பனாவாதியின் மூளையில்ஏற்படும் மின்னல்  திரட்டுதான் கவிதை.
மனத்திலே கற்பனை  ஊறி ஊடுருவும் போது மழையாய்ப் பொழிவது கவிதை.
இ​சையாய்  நாதமாய் தாளமாய் ஒலிப்பது கவிதை.
மனத்தைப் புதுப்பிக்கும் உற்சாகப் பானம்தான் கவிதை.
உடலை மெருகேற்றுவது கவிதை.
ஆத்மாவை இன்புறச் செய்வது கவிதை.
  கள்ளிருக்கும் மலர்களிலெல்லாம் காமுற்று குடைந்து உள் புகுந்து அக்கள்ளை மாந்திக் குடித்து வாழ்வின் இனிய சாறாக மாற்றிக் குழம்பாக்கி  அந்தக் குழம்பை அமுதாக்கி தேனாக தேனடையில் சேர்த்து வைத்து பாதுகாத்து அளிக்கும் தேனி. அந்தத் தேனடைதான் கவிஞன் என்றால். அந்தத் கவிஞன் தன்னைத் தானே உணர்ந்து  பிழிந்து சாறாக்கி வடிந்தூறும்  தேன்தான் கவிதை.
கனகமுலைதனைப் பார்த்தவுடன் குழந்தையின் வாயிலே ஊறும்உமிழ் நீர்தான் கவிதை. இடியுண்ட முகில்கள் கருக்கொண்டு தாய்மை எனும் உருக்கொண்டு கருணை பெருக்குண்டு பொழியும் மாரிதான் கவிதை.
  அலைகடலின் ஆழத்திலே  வாய் திறந்து ஒரு துளி நீரை உட்கொண்டு வாய் மூடி அமைதி காத்து சத்தாக்கி உருவாக்கி உருண்டு திரண்டு வெண்மையின் எதிரொளிப்பாய் வெளிக்கொண்டு ஒளிர்கின்ற முத்துதான் கவிதை.
சொற்களை விதைத்து வெளிவருவது கவிதை. என்றாலும் கருப்பொருளாய் ஒரு கருத்தை விதைத்து வெளிவருவதுதான் கவிதை.
அங்கீகாரம் பெறும் விதை அதுதான் கவிதை.
அன்புடன்
                  thamizhtheni                       
தமிழ்த்தேனீ
                                        rkc1947@gmail.com