Ilakkuvanar+16
  “தூய தமிழ் என்றால் இன்று எள்ளுவோர்களும் உளர். ஆங்கிலத்தைப் பார்” என்று அதன் கலப்புத் தன்மையைச் சுட்டிக் காட்டுவர். ஆங்கில மொழியின் வரலாற்றை அவர் அறியார். அங்கும் தூய ஆங்கிலம் வேண்டும் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. தூய ஆங்கில இயக்கம் (Society for Pure English) என்றே பெயரிட்டனர். அது 1913இல் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர்கள் அந்நாட்டுப் பெரும் புலவர்கள். அதைத் தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அந்நாட்டு அரசவைப் புலவர்.
  அதற்கு முன்பு அந்நாட்டில் வேற்றுமொழிச்சொற்களை ஆங்கில மொழியில் கலப்பதை வெறுக்கும் கொள்கை உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வேற்றுமொழிச் சொற்கலப்பு வெறுப்பு அங்குத் தோன்றிவிட்டது. தெபோ (Defor), திரைடன்(Drydon), அடிசன் போன்ற பெரும்புலவர்கள் பிறமொழிக் கலப்பை வன்மையாகக் கண்டித்தனர். 1711இல் அடிசன் தம் இதழில் (Spectator No. 165) தெரிவித்துள்ள கருத்துகள் நோக்கத்தக்கன. அக்கருத்து வருமாறு: “”நம்முடைய சட்ட அமைப்பில் சட்டங்கள் உரிமைகள் வாணிகங்கள் முதலியவற்றைக் காக்க மேற்பார்வையாளர் நியமிக்கும் விதி இருக்கின்றது. அங்ஙனமே வேற்றுமொழிச் சொற்கள் நம் மொழியில் வந்து கலவாமல் இருக்குமாறு காக்க மேற்பார்வையாளர் நியமிக்கவும் விதி வேண்டும்.”
கேம்பெல்(Campbell) என்பவர் பின்வருமாறு கூறினார்: “பிற துறைகளால் அழிவதைவிட, வேற்று மொழிச் சொற்களால் அழிவது நம் மொழிக்குரிய பெரிய துன்பம் (danger)”
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் : பழந்தமிழ். பக்.248-249