வியாழன், 14 மே, 2015

முதுமக்கள் தாழி காணாமல் போனது பற்றி விசாரணை:தருண்விசய் வலியுறுத்தல்

முதுமக்கள் தாழி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்த வேண்டும்: எம்.பி. தருண் விஜய் வற்புறுத்தல்

புதுதில்லி, மே.14-

  மேல்-சபையில் உறுப்பினர் தருண் விசய் பேசுகையில் கூறியதாவது:-

ஏறத்தாழ 150 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு தங்களுடைய தாய்மொழிக்குச் செம்மொழித் தகுதியேற்பை 2007- ஆம் ஆண்டில் தமிழர்கள் பெற்றனர். மே 5- ஆம் நாளன்று ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களில்  தலைமை இயக்குநர் பதவிக்குத் தகுதி பெற சமக்கிருதம், பிராகிருதம், பாலி, அரபி அல்லது பாரசீக மொழிகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தத் தகுதி மொழிகள் பட்டியலில் தமிழ்மொழி விடுபட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  இப்படி தமிழ்மொழி விடுபட்டதைத் தொடர்புயை அமைச்சகத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்ட பதவிக்கான தகுதிப்பட்டியலில் தமிழ் மொழியை உடனடியாக சேர்க்க வேண்டும். கடந்த 2004- ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் அனைத்து இந்தியா மற்றும் கிழக்காசிய மொழிகளின் எழுத்துகளுக்கு தமிழ் எழுத்து வடிவங்களே மூலமாக இருந்துள்ளது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து ஏறத்தாழ 11 ஆண்டுகள் ஆகியும் இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் இது குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவில்லை.

ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி ஆய்வுக்காக மைசூர் தொல்பொருள் மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு அது காணாமல் போய்விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இது இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுக்கான  கருவூலமாகும். எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தருண் விசய் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக