ஞாயிறு, 10 மே, 2015

உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு தமிழரின் நுண்ணறிவிற்கு அடையாளம்

maraimalai-adigal03
  ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணையென்றும், அஃறிணையென்றும் பகுத்தோதினார்.
  எம் அரிய நண்பர்கள்! இப்பாகுபாட்டின் அருமையும் நுட்பமும் நாமுணராதிருக்கின்றோம். பிறமொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக் கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியிலெழுதப்பட்ட இலக்கண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அற்றின்கண் இவ்வுரிமையை பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது, அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்தி பெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும் இதனைக் காண்போம். இஃதொன்றோ, அவ்வடமொழியிலுள்ள சொற்பொருள் பாகுபாடுகள் நுண்ணறிவிற்குச் சிறிதும் இயையாவாறாய் அமைந்து கிடைக்கின்றது.
 ‘இல்லம்’,  ‘வீடு’ என்பன உயிரில்லாத அஃறிணைப் பொருட்களென்பதும், அவை தம்மை, ஆண் பெண் என வழங்கல் நகையாடுதற் கேதுவாமென்பதுந் சிறுமகாரும் அறிவர். இங்ஙனமாகவும் வடமொழியின் ‘கோயில்’ என்னுஞ் சொல் ஆண்பாலாகச் சொல்லப்படுகிறது. மயிர்க்கற்றை என்னும் பொருளுடைய ‘கபரீ‘ என்பது பெண்பாலாம். ‘கேசவேச‘ என்பது ஆண்பாலாம்; விருப்பம் என்று பொருள்படும் ‘இச்சா‘ என்பது பெண்பாலாம்; ‘மநோரத‘ என்பது ஆண்பாலாம். மாலைப்பொழுது என்று பொருள்படும் ‘திநார்த‘ என்னும் ஒரு சொல் ஆண்பாலாம். ‘சந்தியா‘ என்னும் மற்றொரு சொல் பெண்பாலாம்; ‘லோக‘ என்பது ஆண்பாலாம்; சுவர் என்று பொருள்படும் ‘பித்தி‘ என்பது பெண்பாலாம்; ‘குட்ய‘ என்பது அலிப்பாலாம்; காது என்று பொருள்படும் ‘கர்ண‘ என்பது ஆண்பாலாம். ‘ச்ருதி‘ என்பது பெண்பாலாம். ‘சரவண்‘ என்பது அலிப்பாலாம்.
  நண்பர்காள்! ஈதென்ன புதுமை பாருங்கள்! சடப்பொருளான இவற்றையெல்லாம் ஆண், பெண் எனக்கூறினால் யாருக்குத்தான் நகை விளையாது. இவ்வாறு சொற்களை ஒரு வரன்முறையுமின்றித் தோன்றியவாறு ஆண், பெண் எனக்கூறி, அவை தம்மைச் சொற்றொடர்களில் இயைத்துக் கூறுங்கால் ஆண் பெயர்க்கேற்ப ஆண்வினையும், பெண் பெயர்க்கேற்ப பெண்வினையும் கூட்டியுரைக்கவென விதித்தால் இவை தம்மை அறிவுடையோர் கற்க முற்றபடுவரா? வேறுமொழி தெரிதற்கு வழியின்றி ஆரியத்திற்பிறந்து இடர்ப்படுவாரே அதனைக் கற்றற்கு உரியார். பொருள் வகையால் ஈது உயர்திணை, ஈது அஃறிணையென்று வகுத்தால் பொருள்கேற்பச் சொற்களை வழங்குதலில் யார்க்கும் இடர்ப்பாடு தோன்றாது. பொருள் வகையால் அஃறிணையென்றே உலகத்திற்கு ஒரு முடிந்த ஒரு சொல்லை ஒருகால் ஆணாகவும் ஒரு கால் பெண்ணாகவும், ஒரு கால் அலியாகவும் கூறல் வேண்டுமென ஒரு முறையுமின்றி விதித்தால், இச்சொற்களை ஆராய்ந்து இவை ஆண், இவை பெண், இவை அலி என உறுதி செய்தலிலேயே மாணாக்கர்க்கு வாணாள் கழியும். இனி இவற்றாற் பெறப்படும் பொருளை உணர்ந்து அதனை உரிமை கோடற்கு வானாள் எங்கே உள்ளது. சில வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினரான மக்கள் தம்முயிர்க்குறுதி பயக்கும் உண்மைப் பொருளை உணர்தற்கும் ஒரு கருவியாயமைந்த மொழி கற்றற்கும் பயன்படுத்தற்கும் எளிதாக இருத்தல் வேண்டுமேயல்லது கடின சொல்லுடைத்தாதல் பயனின்றாம். கருவியே பெரிதிடர் பயப்பதாயின் அதனாற் பெறப்படும் பொருள் பயன் தருவது யாண்டுமில்லை யென்க இத்துணைக் கடினச் செவ்வி உடைமையினாலன்றோ வடமொழி உலக வழக்கின்றி இறத்தொழிந்தது திருஞானசம்பந்தர் முதலான அருள்திருவாளரும் முழுமுதற் கடவுளை வழிபட்டுய்தற்குரிய எளிதான நெறியைச் செந்தமிழ் திருப்பாட்டுக்களிலே அருளச்செய்வாராயினர். இது பற்றி இனிது தேர்ந்தே
“கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”
என்று திருவிளையாடற் புராணம் உடையாரும் கூறினார்.
- தமிழ்க் கடல் மறைமலையடிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக