நாகப்பட்டினம் மாவட்டத்தில்
குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைக்காணோம் என முறையீடு கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
வடிவேல் ஒரு திரைப்படத்தில்
குளத்தைக்காணோம் என்ற முறையீட்டை அளித்துக் காவலர்கள் வந்து
குளத்தைத்தேடித் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள். அது போலத் தெற்குப் பொய்கை
நல்லூர் ஊராட்சி மக்கள் குளத்தைக்காணோம் என முதல்வர் பிரிவிற்கும்,
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மனுக்கள் அனுப்பி உள்ளனர்.
அந்த ஊர் பொதுமக்களிடம் பேசியபோது கடந்த
மார்கழி 27, திருவள்ளுவர் ஆண்டு 1948 / 10.01.1917இல் தெற்குப் பொய்கை
நல்லூரைச்சேர்ந்த முகமது யுசுபு என்பவர் தன்னுடைய மரபுரிமையினருக்கு
விருப்பமுறி(உயில்) ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார். அதற்கிணங்க மார்கழி 02,
திருவள்ளுவர் ஆண்டு 1975 / 1944 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 அன்று
விருப்பமுறி நடைமுறைக்கு வந்தது. அதில் குளம், மரங்கள் எனப் பலவகை உள்ளன.
அதன்படி வேளாங்கண்ணி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெற்குப்
பொய்கை நல்லூரில் ஏராளமான குளங்கள் இருந்துள்ளன. தற்பொழுது ஊர் நிருவாக
அலுவலகக் கணக்குப்படி பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக 23 குளங்களும்,
ஊராட்சிக்குச் சொந்தமாக 155 குளங்களும் உள்ளன.
கடந்த 1944 ஆம் ஆண்டு கணக்குப்படி
மொத்தம் 178 குளங்கள் இருந்திருக்கின்றன. அதில் முகைதீன் ஆண்டவர்
பள்ளிவாசல், பாவா சாகிபு பள்ளிவாசல், பள்ளிவாசல் குளம் என்ற பெயர்களில்
ஆவணங்கள் உள்ளன.தற்பொழுது அப்பகுதி மக்கள் குளங்களை ஆய்வு மேற்கொண்டதில்
வெறும் 10 குளங்களே உள்ளன. மீதமுள்ள குளங்களைக்காணோம் என அப்பகுதி மக்கள்
முறையீடு மேல் முறையீடு செய்து வருகின்றனர்.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் குளத்தைக் கண்டுபிடிப்பார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக