வெள்ளி, 16 ஜனவரி, 2015

பெண் காவலர்களால் பாதை மாறும் திருமண உறவுகள்

61dowry04

தாலியறுக்கும் மகளிர் காவல்நிலையங்கள்

பணத்தால் பிரியும் பல குடும்பங்கள்

மஞ்சள் குளிக்கும் பெண் காவலர்கள்.

திருமணங்கள் மேலுலகில் உறுதி செய்யப்படுகின்றன என்பது மக்களின் நம்பிக்கை.
  திருமணம் நடைபெற்றவுடன் புரிதலுணர்வுடனும் விட்டுக் கொடுத்தும் வாழ்பவர்கள் வாழ்க்கை என்றும் இனிக்கும். சிலருக்கு ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்பதுபோல் 90 நாள்மட்டும் இல்லற வாழ்க்கை இனிக்கும். அதன்பின்னர்தான் கணவன் மனைவியரின் உண்மை உருவம் தெரியவரும். இதற்கிடையில் கணவனின் தாய், தங்கை, அக்கா ஆகியோர்களின் தன்முதன்மைச் செயல்களால் குடும்பத்தில் புயல் வீசத்தொடங்கும்; கணவன், மனைவியரிடையே பிணக்கு ஏற்பட்டுவிடும். பின்னர் பெரியோர்கள் இணக்கப்படுத்துவார்கள். இப்போது நடைமுறையில் பெண்கள் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டம் ஒன்று, ஆண்களையும், ஆண்வீட்டாரையும் பழிவாங்கப்படும் சட்டமாக மாறியுள்ளது. அந்தச்சட்டம்தான். வரன் கொடை/ மணப்பரிசு(வரதட்சணை)க் கொடுமைக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தின் கீழ்முறையீடு அளித்தால் எந்த வித உசாவலுமின்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுப் பிணை அளிக்காமல், அதன்பின்னர் தண்டனை உறுதியானால் 7 ஆண்டுகள் சிறைவாசம் என்பதுதான் சட்டம்.
  இதற்காக மேனாள் முதல்வர் அவர்களால் அமைக்கப்பட்ட மகளிர் காவல்நிலையம் (அதன்பின்னர் அனைத்து மகளிர் காவல்நிலையம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு) தற்பொழுது இயங்கிவருகின்றன. இதில் ஆண் முறையீடு அளிக்க முடியாது. பெண் மட்டுமே குறைகூற முடியும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முறையீட்டை வாங்கிக்கொண்டு பெண் காவலர்கள் ஆண்வீட்டாரை அழைத்து உங்கள் மீது முறையீடு வந்துள்ளது.; அதனை விசாரிக்கவேண்டும் எனக்கூறி அழைத்துச்செல்வார்கள். அங்கு சென்ற பின்னர் ஆணுக்கும், பெண்ணுக்கும் பணத்தட்டில் எடை போட்டு பார்க்கப்படும். இதில் ஆண் கை ஓங்கியிருந்தால் அதாவது காந்தித்தாள் அதிகம் புழங்கினால் பெண் வீட்டாரைப் பார்த்து, “ஏன்டீ, புருசனை ஒழுங்காகப் பார்க்கமாட்டாயா? போய் வேலையைப் பாரு” என்பார்கள். அதே சமயம் பெண்வீட்டாரிடம் காந்தித்தாள் அதிகமாக இருந்தால் ஆண்வீட்டில் தொடர்பில்லாத அனைவரையும் வரவழைத்து மனைவி வீட்டில் மணப்பரிசு கேட்டுக் கொடுமை படுத்தியதாகக் கூறி பொய்வழக்கு புனைவார்கள். தமிழகத்தில் இதுவே வழக்கமாக இருந்து வருகிறது. இதில் இரண்டு பக்கமும் பணம் பாதாளம் வரை செல்லும். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முறையீடு வந்தால் இருவரையும் அழைத்து நெறியுரை வழங்குவார்கள். அதன் பின்னர் 3 தடவை நல்லிணக்தக்திற்கு முயலுவார்கள். இதற்காகத் தனியார் தொண்டுநிறுவனங்கள், மகளிர் அமைப்பினர், காவலர்கள் இருப்பார்கள். அதன்பின்னர் கணவனையும் மனைவியையும் அழைத்துத் தனியாகப் பேசச் சொல்வார்கள். அதில் தீர்வு கிடைக்கவில்லையென்றால் பெண்ணுக்குச்சேரவேண்டிய பணம், நகை மட்டுமே வாங்கிக்கொடுத்து நீதிமன்றம் மூலம் மணவிலக்கு செய்து கொள்ளுங்கள் என அனுப்பி வைப்பார்கள். இதுதான் நடைமுறை.
  ஆனால் இந்தவிதமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு பெண்காவலர்கள் சிலர் பணத்தாசை கொண்டு பெண்வீட்டாரிடம் குறிப்பிட்ட அளவு பணத்தைப்பெற்றுக்கொண்டு பொய்யான வழக்கை – கதை, திரைக்கதை, உரையாடல் எழுதி- கணவன் வீட்டில் உள்ளவர்கள் மீது பிணையில் வெளியிட முடியாத வழக்கைப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இதனால் பல குடும்பங்கள் சேர்ந்து வாழக்கூடிய நிலை இருந்தும் உள்நோக்கோடு செயல்படும் காவலர்களால் சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது. மேலும் ஆணின் தந்தை, தாய் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைந்துவருகிறார்கள்.
  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் மாவட்டம், பள்ளங்கியைச்சேர்ந்த நசீர் என்பவருக்கும் வத்தலக்குண்டைச்சேர்ந்த முபினாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. இதில் கணவன், மனைவிக்கிடைய தகராறு ஏற்பட்டதில் உடனே நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முறையீடு வாங்கப்பட்டு எந்த வித உசாவலுமின்றி நசீர் உட்பட அவர்கள் வீட்டில் உள்ள அனைவர் மீதும் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  இதே போல தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச்சேர்ந்த இரஞ்சித்திற்கும், கம்பத்தில் உள்ள மீனாவிற்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. காவலர்கள் பெண்வீட்டாரிடம் முறையீடு வாங்கி இரஞ்சித் மற்றும் 16 பேர்மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  இதே போல நாகப்பட்டினம் மாவட்டம், ப.கொந்தகையைச் சேர்ந்த பைசல் என்பவருக்கும் புலிவலத்தைச்சேர்ந்த இரசீனா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இரசீனாவின் பெற்றோர்கள் பணவசதி படைத்தவர்கள். இதனால் பைசல் மற்றும் அவரது குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் பைசல் தந்தை மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
  இந்த நிகழ்வுகள் எல்லாம் எடுத்துக்காட்டுகளே! எனவே மகளிர் காவல்நிலையங்கள் ஆணையும், பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிலையமாக இருப்பதை விட்டுவிட்டு தாலியறுக்கும் மகளிர் காவல்நிலையங்களாக மாறக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும்.
  இதில் குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் உண்மை. பொதுநலன்கருதி ஆண், பெண் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
vaigai anesu61 61dowrycase02 61dowrycase01 61dowry


அகரமுதல 61

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக